திருவருட்பா
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1. அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் சற்று எனினும்
அறிந்தனம் ஓர்சிறிது குரு அருளாலே அந்தச்
செவ் வண்ணம் பழுத்த தனித் திரு_உருக் கண்டு எவர்க்கும்
தெரியாமல் இருப்பம் எனச் சிந்தனை செய்திருந்தேன்
இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர் அறியத் தெருவில்
இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ
மவ்வண்ணப் பெரு மாயை-தன் செயலோ அறியேன்
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
2. கள் இருந்த மலர் இதழிச் சடைக் கனி நின் வடிவம்
கண்டுகொண்டேன் சிறிது அடியேன் கண்டுகொண்டபடியே
நள் இருந்த வண்ணம் இன்னும் கண்டுகண்டு களித்தே
நாடு அறியாது இருப்பம் என்றே நன்று நினைந்து ஒருசார்
உள் இருந்த எனைத் தெருவில் இழுத்துவிடுத்தது-தான்
உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன்
வள் இருந்த குணக் கடையேன் இதை நினைக்கும்-தோறும்
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
3. இகத்து இருந்த வண்ணம் எலாம் மிகத் திருந்த அருள் பேர்
இன்ப வடிவம் சிறியேன் முன் புரிந்த தவத்தால்
சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட
தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே
அகத்து இருந்த எனைப் புறத்தே இழுத்துவிடுத்தது-தான்
ஆண்டவ நின் அருள் செயலோ மருள் செயலோ அறியேன்
மகத்து_இருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
4. கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே
காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடைத் தலை-வாய்
ஒருங்கு சிறியேன்-தனை முன் வலிந்து அருளே வடிவாய்
உள் அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும்
பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே
மருங்கு இருந்த எனை வெளியில் இழுத்துவிட்டது என்னோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
5. நாடுகின்ற மறைகள் எலாம் நாம் அறியோம் என்று
நாணி உரைத்து அலமரவே நல்ல மணி மன்றில்
ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில்
ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும்
வீடுகின்ற பிறர் சிறிதும் அறியாமல் இருக்கவேண்டும்
என இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு
வாடுகின்ற வகை புரிந்த விதியை நினைந்து ஐயோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
6. நதி கலந்த சடை அசையத் திரு_மேனி விளங்க
நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள்
கதி கலந்துகொளச் சிறியேன் கருத்திடையே கலந்து
கள்ளம் அற உள்ளபடி காட்டிடக் கண்டு இன்னும்
பதி கலந்துகொளும் மட்டும் பிறர் அறியாது இருக்கப்
பரிந்து உள்ளே இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு
மதி கலந்து கலங்கவைத்த விதியை நினைந்து ஐயோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
7. மஞ்சு அனைய குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லி
மகிழ் திரு_மேனி வண்ணம்-அது சிறிதே
நஞ்சு அனைய கொடியேன் கண்டிடப் புரிந்த அருளை
நாடு அறியா வகை இன்னும் நீட நினைத்திருந்தேன்
அஞ்சு அனைய பிறர் எல்லாம் அறிந்து பல பேசி
அலர் தூற்ற அளிய எனை வெளியில் இழுத்திட்டு
வஞ்சனைசெய்திட வந்த விதியை நினைந்து ஐயோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
8. அரி பிரமர் உருத்திரரும் அறிந்துகொளமாட்டாது
அலமரவும் ஈது என்ன அதிசயமோ மலத்தில்
புரி புழுவில் இழிந்தேனைப் பொருள் ஆக்கி அருளாம்
பொருள் அளிக்கப்பெற்றனன் இப் புதுமை பிறர் அறியாது
உரிமை பெற இருப்பன் என உள் இருந்த என்னை
உலகு அறிய வெளியில் இழுத்து அலகு_இல் விருத்தியினால்
வரி தலை இட்டு ஆட்டுகின்ற விதியை நினைந்து ஐயோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
9. விழற்கு இறைத்துக் களிக்கின்ற வீணர்களில் சிறந்த
வினைக் கொடியேம் பொருட்டாக விரும்பி எழுந்தருளிக்
கழற்கு இசைந்த பொன் அடி நம் தலை மேலே அமைத்துக்
கருணை செயப்பெற்றனம் இக் கருணை நம்மை இன்னும்
நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து
நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார
வழக்கில் வளைத்து அலைக்க வந்த விதியை நினைந்து ஐயோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
10. அடி பிடித்துத் திரிகின்ற மறைகள் எலாம் காணா
அருள் வடிவைக் காட்டி நம்மை ஆண்டுகொண்ட கருணைக்
கொடி பிடித்த குரு மணியைக் கூடும் மட்டும் வேறு ஓர்
குறிப்பு இன்றி இருப்பம் எனக் கொண்டு அகத்தே இருந்தேன்
படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான்
படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே
மடி பிடித்துப் பறிக்க வந்த விதியை நினைந்து ஐயோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.