திருவருட்பா
மூன்றாம் திருமுறை
தலைவி பாங்கியொடு கிளத்தல் திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. சீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிதனை
ஊரா ருடன்சென் றெனதுநெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன்காண்
வாரார் முலைகண் மலைகளென வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்
ஏரார் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
2. சீர்த்தேன் பொழிலார் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
பார்த்தேன் கண்கள் இமைத்திலகாண் பைம்பொன் வளைகள் அமைத்திலகாண்
தார்த்தேன் குழலும் சரிந்தனகாண் தானை இடையிற் பிரிந்தனகாண்
ஈர்த்தேன் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
3. சீதப் புனல்சூழ் வயல்ஒற்றித் தியாகப் பெருமான் திருமாட
வீதிப் பவனி வரக்கண்டேன் மென்பூந் துகில்வீழ்ந் ததுகாணேன்
போதிற் றெனவும் உணர்ந்திலேன் பொன்ன னார்பின் போதுகிலேன்
ஈதற் புதமே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
4. தென்னார் சோலைத் திருஒற்றித் தியாகப் பெருமான் பவனிவரப்
பொன்னார் வீதி தனிற்பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன்
மின்னார் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில்வேட்டு
என்னார் அணங்கே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
5. சீலக் குணத்தோர் புகழ்ஒற்றித் தியாகப் பெருமான் பவனிஇராக்
காலத் தடைந்து கண்டேன்என் கண்கள் இரண்டோ ஆயிரமோ
ஞாலத் தவர்கள் அலர்தூற்ற நற்று‘ சிடையில் நழுவிவிழ
ஏலக் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
6. சேயை அருளுந் திருஒற்றித் தியாகப் பெருமான் வீதிதனில்
தூய பவனி வரக்கண்டேன் சூழ்ந்த மகளிர் தமைக்காணேன்
தாயை மறந்தேன் அன்றியும்என் தனையும் மறந்தேன் தனிப்பட்டேன்
ஏயென் தோழி என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
7. திங்கள் உலவும் பொழில்ஒற்றித் தியாகப் பெருமான் திருவீதி
அங்கண் களிக்கப் பவனிவந்தான் அதுபோய்க் கண்டேன் தாயரெலாம்
தங்கள் குலத்துக் கடாதென்றார் தம்மை விடுத்தேன் தனியாகி
எங்கண் அனையாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
8. தேசார் மணிசூழ் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரக்
கூசா தோடிக் கண்டரையில் கூறை இழந்தேன் கைவளைகள்
வீசா நின்றேன் தாயரெலாம் வீட்டுக் கடங்காப் பெண்எனவே
ஏசா நிற்க என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
9. தேடார்க் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரத்
தோடார் பணைத்தோட் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி
வாடாக் காதல் கொண்டறியேன் வளையும் துகிலும் சேர்ந்ததுடன்
ஏடார் கோதை என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
10. திருமாற் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
பெருமான் மனமு நானும்முன்னும் பின்னும் சென்று கண்டேமால்
பொருமா நின்றேன் தாயரெலாம் போஎன் றீர்க்கப் போதுகிலேன்
இருண்மாண் குழலாய் என்னடிநான் இச்சைமயமாய் நின்றதுவே.