திருவருட்பா
ஆறாம் திருமுறை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
2. மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே
கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
3. உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
4. உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ
உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ
அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன்
தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
5. இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
6. பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ
பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ
மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்
விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே
பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது
பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே
செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
7. கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
8. வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
9. கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
10. திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே
திருவருட்பே ரொளிகாட்டித் திருவமுதம் ஊட்டிக்
கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து
கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்
உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா
தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே
திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.