திருவருட்பா​

இரண்டாம் திருமுறை

13. திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்
திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்
0:00
0:00
🔊

கலிவிருத்தம்

திருசிற்றம்பலம்

1. தாயின் மேவிய தற்பர மேமுல்லை
வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
தேயின் மேவி இருந்தனன் என்னையே.

2. தில்லை வாய்ந்த செழுங்கனி யே திரு
முல்லை வாயில் முதல்சிவ மூர்த்தியே
தொல்லை யேன்உன்தன் தூய்திருக் கோயிலின்
எல்லை சேரஇன் றெத்தவம் செய்ததே.

3. வளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய
குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை
உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக்
களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.

4. மலைவி லாமுல்லை வாயிலில் மேவிய
விலையி லாமணி யேவிளக் கேசற்றும்
குலைவி லாதவர் கூடும்நின் கோயிலில்
தலைநி லாவத்த வம்என்கொல் செய்ததே.

5. சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில்
ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத்
தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன்
ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே.

6. சேல்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலில்
பால்கொள் வண்ணப் பரஞ்சுட ரேவிடை
மேல்கொள் சங்கர னேவிம லாஉன்தன்
கால்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ.

7. வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
அண்ண லேஅமு தேஅரை சேநுதல்
கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெலாம்
நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ.

8. மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ்
கண்ணுன் மாமணி யேகரும் பேஉனை
எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது
பண்ணும் நின்அருள் பாரிடை வாழ்கவே.

9. தீதி லாததி ருமுல்லை வாயில்வாழ்
கோதி லாதகு ணப்பெரும் குன்றமே
வாதி லாதுனை வாழ்த்தவந் தோர்தமை
ஏதி லார்என்றி ருப்பதும் என்கொலோ.

10. தேசு லாவிய சீர்முல்லை வாயில்வாழ்
மாசி லாமணி யேமருந் தேசற்றும்
கூசி டாமல்நின் கோயில்வந் துன்புகழ்
பேசி டாத பிழைபொறுத் தாள்வையே.

திருச்சிற்றம்பலம்

1. தாயின் மேவிய தற்பரமே முல்லை
வாயில் மேவிய மா மணியே உன்றன்
கோயில் மேவி நின் கோ மலர்த் தாள் தொழா
தே இல் மேவி இருந்தனன் என்னையே.

2. தில்லை வாய்ந்த செழும் கனியே திரு
முல்லைவாயில் முதல் சிவ_மூர்த்தியே
தொல்லையேன் உன்றன் தூய் திரு_கோயிலின்
எல்லை சேர இன்று எ தவம் செய்ததே.

3. வளம் கொளும் முல்லைவாயிலில் மேவிய
குளம் கொளும் கண் குரு மணியே உனை
உளம்கொளும்படி உன் திரு_கோயில் இக்
களம் கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.

4. மலைவு இலா முல்லைவாயிலில் மேவிய
விலை_இலா மணியே விளக்கே சற்றும்
குலைவு_இலாதவர் கூடும் நின் கோயிலில்
தலை நிலாவத் தவம் என்-கொல் செய்ததே.

5. சீர் சிறக்கும் திரு_முல்லைவாயிலில்
ஏர் சிறக்கும் இயல் மணியே கொன்றைத்
தார் சிறக்கும் சடைக் கனியே உன்றன்
ஊர் சிறக்க உறுவது எவ்வண்ணமே.

6. சேல் கொள் பொய்கைத் திரு_முல்லைவாயிலில்
பால் கொள் வண்ணப் பரஞ்சுடரே விடை
மேல் கொள் சங்கரனே விமலா உன்றன்
கால் கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ.

7. வண்ண மா முல்லைவாயிலின் மேவிய
அண்ணலே அமுதே அரைசே நுதல்_
கண்ணனே உனைக் காண வந்தோர்க்கு எல்லாம்
நண்ண அரும் துயர் நல்குதல் நன்றதோ.

8. மண்ணின் ஓங்கி வளர் முல்லைவாயில் வாழ்
கண் உள் மா மணியே கரும்பே உனை
எண்ணும் அன்பர் இழிவடைந்தால் அது
பண்ணும் நின் அருள் பாரிடை வாழ்கவே.

9. தீது_இலாத திரு_முல்லைவாயில் வாழ்
கோது_இலாத குணப் பெரும் குன்றமே
வாது இலாது உனை வாழ்த்த வந்தோர்-தமை
ஏதிலார் என்று இருப்பதும் என்-கொலோ.

10. தேசு உலாவிய சீர் முல்லைவாயில் வாழ்
மாசிலாமணியே மருந்தே சற்றும்
கூசிடாமல் நின் கோயில் வந்து உன் புகழ்
பேசிடாத பிழை பொறுத்து ஆள்வையே.