திருவருட்பா
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1. மாழை மா மணிப் பொது நடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற
வாழை வான் பழச் சுவை எனப் பத்தர்-தம் மனத்து உளே தித்திப்போய்
ஏழை நாயினேன் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் செயல் வேண்டும்
கோழை மானிடப் பிறப்பு இதில் உன் அருள் குரு உருக்கொளுமாறே.
2. பொன்னின் மா மணிப் பொது நடம் புரிகின்ற புண்ணியா கனிந்து ஓங்கி
மன்னு வாழையின் பழச் சுவை எனப் பத்தர் மனத்து உளே தித்திப்போய்
சின்ன நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும்
இன்ன என் உடைத் தேகம் நல் ஒளி பெறும் இயல் உருக்கொளுமாறே.
3. விஞ்சு பொன் அணி அம்பலத்து அருள் நடம் விளைத்து உயிர்க்குயிர் ஆகி
எஞ்சுறாத பேர் இன்பு அருள்கின்ற என் இறைவ நின் அருள் இன்றி
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி அமைத்து அருள் செயல் வேண்டும்
துஞ்சும் இ உடல் இம்மையே துஞ்சிடாச் சுக உடல் கொளுமாறே.
4. ஓங்கு பொன் அணி அம்பலத்து அருள் நடம் உயிர்க்கு எலாம் ஒளி வண்ணப்
பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பத_மலர் பணிந்து ஏத்தாத்
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும்
ஈங்கு வீழ் உடல் இம்மையே வீழ்ந்திடா இயல் உடல் உறுமாறே.
5. இலங்கு பொன் அணிப் பொது நடம் புரிகின்ற இறைவ இ உலகு எல்லாம்
துலங்கும் வண்ணம் நின்று அருளும் நின் திரு_அடித் துணை துணை என்னாமல்
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும்
அலங்கும் இ உடல் இம்மையே அழிவுறா அருள் உடல் உறுமாறே.
6. சிறந்த பொன் அணித் திரு_சிற்றம்பலத்திலே திரு_நடம் புரிகின்ற
அறம் தவாத சேவடி மலர் முடி மிசை அணிந்து அகம் மகிழ்ந்து ஏத்த
மறந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் செயல் வேண்டும்
பிறந்த இ உடல் இம்மையே அழிவுறாப் பெரு நலம் பெறுமாறே.
7. விளங்கு பொன் அணிப் பொது நடம் புரிகின்ற விரை மலர்த் திரு_தாளை
உளம்கொள் அன்பர்-தம் உளம்கொளும் இறைவ நின் ஒப்பு இலாப் பெருந்தன்மை
களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும்
துளங்கும் இ உடல் இம்மையே அழிவுறாத் தொல் உடல் உறுமாறே.
8. வாய்ந்த பொன் அணிப் பொது நடம் புரிகின்ற வள்ளலே மறை எல்லாம்
ஆய்ந்தும் இன்ன என்று அறிந்திலா நின் திரு அடி_மலர் பணியாமல்
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும்
ஏய்ந்த இ உடல் இம்மையே திரு_அருள் இயல் உடல் உறுமாறே.
9. மாற்று இலாத பொன்_அம்பலத்து அருள் நடம் வயங்க நின்று ஒளிர்கின்ற
பேற்றில் ஆர் உயிர்க்கு இன்பு அருள் இறைவ நின் பெய் கழற்கு அணி மாலை
சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும்
காற்றில் ஆகிய இ உடல் இம்மையே கதி உடல் உறுமாறே..
10. தீட்டு பொன் அணி அம்பலத்து அருள் நடம் செய்து உயிர்த் திரட்கு இன்பம்
காட்டுகின்றதோர் கருணை அம் கடவுள் நின் கழல் இணை கருதாதே
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும்
வாட்டும் இ உடல் இம்மையே அழிவுறா வளம் அடைந்திடுமாறே.