Thiruvadi Muraiyeedu Vallalar Songs

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே
திகழ் தனித் தந்தையே நின்-பால்
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணை
செய்து அருள்செய்திடத் தாழ்க்கில்
யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன்
யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன்
போரிட முடியாது இனித் துயரொடு நான்
பொறுக்கலேன் அருள்க இப்போதே.

2. போது-தான் விரைந்து போகின்றது அருள் நீ
புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ
யாது-தான் புரிவேன் யாரிடம் புகுவேன்
யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன்
தீது-தான் புரிந்தேன் எனினும் நீ அதனைத்
திருவுளத்து அடைத்திடுவாயேல்
ஈது-தான் தந்தை மரபினுக்கு அழகோ
என் உயிர்த் தந்தை நீ அலையோ.

3. தந்தை நீ அலையோ தனயன் நான் அலனோ
தமியனேன் தளர்ந்து உளம் கலங்கி
எந்தையே குருவே இறைவனே முறையோ
என்று நின்று ஓலிடுகின்றேன்
சிந்தையே அறியார் போன்று இருந்தனையேல்
சிறியனேன் என் செய்கேன் ஐயோ
சந்தையே புகுந்த நாயினில் கடையேன்
தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரே.

4. யாரினும் கடையேன் யாரினும் சிறியேன்
என் பிழை பொறுப்பவர் யாரே
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே
பாவியேன் பிழை பொறுத்திலையேல்
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி
உடம்பை வைத்து உலாவவும் படுமோ
சேரினும் எனை-தான் சேர்த்திடார் பொதுவாம்
தெய்வத்துக்கு அடாதவன் என்றே.

5. அடாத காரியங்கள் செய்தனன் எனினும்
அப்ப நீ அடியனேன்-தன்னை
விடாதவாறு அறிந்தே களித்து இருக்கின்றேன்
விடுதியோ விட்டிடுவாயேல்
உடாத வெற்றரை நேர்ந்து உயங்குவேன் ஐயோ
உன் அருள் அடைய நான் இங்கே
படாத_பாடு எல்லாம் பட்டனன் அந்தப்
பாடு எலாம் நீ அறியாயோ.

6. அறிந்திலையோ என் பாடு எலாம் என்றே
அழைத்தனன் அப்பனே என்னை
எறிந்திடாது இந்தத் தருணமே வந்தாய்
எடுத்து அணைத்து அஞ்சிடேல் மகனே
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
பெரும் திறல் சித்திகள் எல்லாம்
சிறந்திட உனக்கே தந்தனம் என என்
சென்னி தொட்டு உரைத்தனை களித்தே.

7. களித்து எனது உடம்பில் புகுந்தனை எனது
கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
தெளித்த என் அறிவில் விளங்கினை உயிரில்
சிறப்பினால் கலந்தனை உள்ளம்
தளிர்த்திடச் சாகா_வரம் கொடுத்து என்றும்
தடைபடாச் சித்திகள் எல்லாம்
அளித்தனை எனக்கே நின் பெரும் கருணை
அடியன் மேல் வைத்தவாறு என்னே.

8. என் நிகர் இல்லா இழிவினேன்-தனை மேல்
ஏற்றினை யாவரும் வியப்பப்
பொன் இயல் வடிவும் புரைபடா உளமும்
பூரண ஞானமும் பொருளும்
உன்னிய எல்லாம்_வல்ல சித்தியும் பேர்
உவகையும் உதவினை எனக்கே
தன் நிகர் இல்லாத் தலைவனே நினது
தயவை என் என்று சாற்றுவனே.

9. சாற்றுவேன் எனது தந்தையே தாயே
சற்குரு நாதனே என்றே
போற்றுவேன் திரு_சிற்றம்பலத்து ஆடும்
பூரணா என உலகு எல்லாம்
தூற்றுவேன் அன்றி எனக்கு நீ செய்த
தூய பேர்_உதவிக்கு நான் என்
ஆற்றுவேன் ஆவி உடல் பொருள் எல்லாம்
அப்ப நின் சுதந்தரம் அன்றோ.

10. சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
தூய நல் உடம்பினில் புகுந்தேம்
இதம் தரும் உளத்தில் இருந்தனம் உனையே
இன்புறக் கலந்தனம் அழியாப்
பதம்-தனில் வாழ்க அருள்_பெரும்_சோதிப்
பரிசு பெற்றிடுக பொன்_சபையும்
சிதம் தரு சபையும் போற்றுக என்றாய்
தெய்வமே வாழ்க நின் சீரே.