திருவருட்பா
இரண்டாம் திருமுறை
16. திருவருள் வேட்கை
திருவொற்றியூர்
கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்
1. மன்அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
இன்அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும்
முன்அமுதா உண்டகளம் முன்னிமுன்னி வாடுகின்றேன்
என்அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ.
2. தோன்றாத் துணையாகும் சோதியே நின்அடிக்கே
ஆன்றார்த்த அன்போ டகங்குழையேன் ஆயிடினும்
ஊன்றார்த் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன்
தேன்றார்ச் சடையாய்உன் சித்தம் இரங்காதோ.
3. காதார் கடுவிழியார் காமவலைக் குள்ளாகி
ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும்
போதார் நினதுகழல் பொன்அடியே போற்றுகின்றேன்
நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ.
4. இலைவேட்ட மாதர்தம தீனநல மேவிழைந்து
கொலைவேட் டுழலும் கொடியனேன் ஆயிடினும்
நிலைவேட்ட நின்அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன்
கலைவேட்ட வேணியனே கருணைசற்றும் கொண்டிலையே.
5. கொண்டல்நிறத் தோனும் குணிக்கரிய நின்அடிக்கே
தொண்டறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும்
எண்டகநின் பொன்அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன்
தண்டலைசூழ் ஒற்றியுளாய் தயவுசற்றும் சார்ந்திலையே.
6. சாரா வறுஞ்சார்பில் சார்ந்தரைசே உன்னுடைய
தாரார் மலரடியைத் தாழ்ந்தேத்தேன் ஆயிடினும்
நேராய்நின் சந்நிதிக்கண் நின்றுநின்று வாடுகின்றேன்
ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே.
7. ஊர்மதிக்க வீணில் உளறுகின்ற தல்லதுநின்
சீர்மதிக்க நின்அடியைத் தேர்ந்தேத்தேன் ஆயிடினும்
கார்மதிக்கும் நஞ்சம்உண்ட கண்டநினைந் துள்குகின்றேன்
ஏர்மதிக்கும் ஒற்றியூர் எந்தைஅளி எய்தாயோ.
8. தாய்க்கும்இனி தாகும்உன்தன் தாள்மலரை ஏத்தாது
நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும்
வாய்க்கும்உன்தன் சந்திதிக்கண் வந்துவந்து வாடுகின்றேன்
தூய்க்குமரன் தந்தாய்என் சோர்வறிந்து தீராயோ.
9. அறியாப் பருவத் தடியேனை ஆட்கொண்ட
நெறியாம் கருணை நினைந்துருகேன் ஆயிடினும்
குறியாப் பொருளேஉன் கோயிலிடை வந்துநின்றும்
பறியாப் பிணியேன் பரதவிப்பைப் பார்த்திலையே.
10. பார்நடையாம் கானில் பரிந்துழல்வ தல்லதுநின்
சீர்நடையாம் நன்னெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும்
நேர்நடையாம் நின்கோயில் நின்றுநின்று வாடுகின்றேன்
வார்நடையார் காணா வளர்ஒற்றி மன்அமுதே.
திருச்சிற்றம்பலம்
1. மன் அமுதாம் உன் தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
இன் அமுதம் ஓர்பொழுதும் இட்டு அறியேன் ஆயிடினும்
முன் அமுதா உண்ட களம் முன்னிமுன்னி வாடுகின்றேன்
என் அமுதே இன்னும் இரக்கம்-தான் தோன்றாதோ.
2. தோன்றாத் துணையாகும் சோதியே நின் அடிக்கே
ஆன்று ஆர்த்த அன்போடு அகம் குழையேன் ஆயிடினும்
ஊன் தார்த் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன்
தேன் தார்ச் சடையாய் உன் சித்தம் இரங்காதோ.
3. காது ஆர் சுடு விழியார் காம_வலைக்கு உள்ளாகி
ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும்
போது ஆர் நினது கழல் பொன்_அடியே போற்றுகின்றேன்
நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ.
4. இலை வேட்ட மாதர்-தமது ஈன நலமே விழைந்து
கொலை வேட்டு உழலும் கொடியனேன் ஆயிடினும்
நிலை வேட்ட நின் அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன்
கலை வேட்ட வேணியனே கருணை சற்றும் கொண்டிலையே.
5. கொண்டல்_நிறத்தோனும் குணிக்க அரிய நின் அடிக்கே
தொண்டு அறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும்
எண் தக நின் பொன்_அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன்
தண்டலை சூழ் ஒற்றி_உளாய் தயவு சற்றும் சார்ந்திலையே.
6. சாரா வறும் சார்பில் சார்ந்து அரைசே உன்னுடைய
தார் ஆர் மலர்_அடியைத் தாழ்ந்து ஏத்தேன் ஆயிடினும்
நேராய் நின் சந்நிதி-கண் நின்றுநின்று வாடுகின்றேன்
ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே.
7. ஊர் மதிக்க வீணில் உளறுகின்றதல்லது நின்
சீர் மதிக்க நின் அடியைத் தேர்ந்து ஏத்தேன் ஆயிடினும்
கார் மதிக்கும் நஞ்சம் உண்ட கண்ட நினைந்து உள்குகின்றேன்
ஏர் மதிக்கும் ஒற்றியூர் எந்தை அளி எய்தாயோ.
8. தாய்க்கும் இனிது ஆகும் உன்றன் தாள்_மலரை ஏத்தாது
நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும்
வாய்க்கும் உன்றன் சந்நிதி-கண் வந்துவந்து வாடுகின்றேன்
தூய்க் குமரன் தந்தாய் என் சோர்வு அறிந்து தீராயோ.
9. அறியாப் பருவத்து அடியேனை ஆட்கொண்ட
நெறியாம் கருணை நினைந்து உருகேன் ஆயிடினும்
குறியாப் பொருளே உன் கோயிலிடை வந்து நின்றும்
பறியாப் பிணியேன் பரதவிப்பைப் பார்த்திலையே.
10. பார் நடையாம் கானில் பரிந்து உழல்வதல்லது நின்
சீர் நடையாம் நல் நெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும்
நேர் நடையாம் நின் கோயில் நின்றுநின்று வாடுகின்றேன்
வார்_நடையார் காணா வளர் ஒற்றி மன் அமுதே.