Thiruvarul Vizhaithal Vallalar songs

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின்
திருவுளக் குறிப்பையும் தெரியேன்
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ
உறுகண் மேலுறும்-கொல் என்று உலைந்தேன்
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன்
வினையனேன் என் செய விரைகேன்
பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுவேன்
புலையனேன் புகல் அறியேனே.

2. அறிவு_இலேன் அறிந்தார்க்கு அடிப் பணி புரியேன்
அச்சமும் அவலமும்_உடையேன்
செறிவு_இலேன் பொதுவாம் தெய்வம் நீ நினது
திருவுளத்து எனை நினையாயேல்
எறிவு_இலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன்
என் செய்வேன் யார் துணை என்பேன்
பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என்
பிழை பொறுத்து அருள்வது உன் கடனே.

3. உன் கடன் அடியேற்கு அருளல் என்று உணர்ந்தேன்
உடல் பொருள் ஆவியும் உனக்கே
பின் கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த
பின்னும் நான் தளருதல் அழகோ
என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன்
என் செய்வேன் யார் துணை என்பேன்
முன் கடன்பட்டார் போல் மனம் கலங்கி
முறிதல் ஓர் கணம் தரியேனே.

4. தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது
தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும்
தெரித்திடாய் எனில் இடர் எனை-தான்
எரித்திடும் அந்தோ என் செய்வேன் எங்கே
எய்துகேன் யார் துணை என்பேன்
திரித்த நெஞ்சகத்தேன் சரித்திரம் அனைத்தும்
திருவுளம் தெரிந்தது தானே.

5. தான் எனைப் புணரும் தருணம் ஈது எனவே
சத்தியம் உணர்ந்தனன் தனித்தே
தேன் உறக் கருதி இருக்கின்றேன் இது நின்
திருவுளம் தெரிந்தது எந்தாயே
ஆன் எனக் கூவி அணைந்திடல் வேண்டும்
அரை_கணம் ஆயினும் தாழ்க்கில்
நான் இருப்பு அறியேன் திரு_சிற்றம்பலத்தே
நடம் புரி ஞான நாடகனே.

6. ஞானமும் அதனால் அடை அனுபவமும்
நாயினேன் உணர்ந்திட உணர்த்தி
ஈனமும் இடரும் தவிர்த்தனை அ நாள்
இந்த நாள் அடியனேன் இங்கே
ஊனம் ஒன்று_இல்லோய் நின்றனைக் கூவி
உழைக்கின்றேன் ஒருசிறிது எனினும்
ஏன் என வினவாது இருத்தலும் அழகோ
இறையும் நான் தரிக்கலன் இனியே.

7. இனிய நல் தாயின் இனிய என் அரசே
என் இரு கண்ணினுள் மணியே
கனி என இனிக்கும் கருணை ஆர் அமுதே
கனக அம்பலத்து உறும் களிப்பே
துனியுறு மனமும் சோம்புறும் உணர்வும்
சோர்வுறு முகமும் கொண்டு அடியேன்
தனி உளம் கலங்கல் அழகு-அதோ எனை-தான்
தந்த நல் தந்தை நீ அலையோ.

8. தந்தையும் தாயும் குருவும் யான் போற்றும்
சாமியும் பூமியும் பொருளும்
சொந்த நல் வாழ்வும் நேயமும் துணையும்
சுற்றமும் முற்றும் நீ என்றே
சிந்தையுற்று இங்கே இருக்கின்றேன் இது நின்
திருவுளம் தெரிந்ததே எந்தாய்
நிந்தை செய் உலகில் யான் உளம் கலங்கல்
நீதியோ நின் அருட்கு அழகோ.

9. அழகனே ஞான அமுதனே என்றன்
அப்பனே அம்பலத்து அரசே
குழகனே இன்பக் கொடி உளம் களிக்கும்
கொழுநனே சுத்த சன்மார்க்கக்
கழக நேர் நின்ற கருணை மா நிதியே
கடவுளே கடவுளே என நான்
பழக நேர்ந்திட்டேன் இன்னும் இ உலகில்
பழங்கணால் அழுங்குதல் அழகோ.

10. பழம் பிழி மதுரப் பாட்டு அல எனினும்
பத்தரும் பித்தரும் பிதற்றும்
கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ளக்
கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய்
வழங்கு நின் புகழே பாடுறுகின்றேன்
மற்றொரு பற்றும் இங்கு அறியேன்
சழங்கு உடை உலகில் தளருதல் அழகோ
தந்தையும் தாயும் நீ அலையோ.

11. தாயும் என் ஒருமைத் தந்தையும் ஞான
சபையிலே தனி நடம் புரியும்
தூய நின் பாதத் துணை எனப் பிடித்தேன்
தூக்கமும் சோம்பலும் துயரும்
மாயையும் வினையும் மறைப்பும் ஆணவமும்
வளைத்து எனைப் பிடித்திடல் வழக்கோ
நாயினேன் இனி ஓர் கணம் தரிப்பு அறியேன்
நல் அருள் சோதி தந்து அருளே.

12. சோதியேல் எனை நீ சோதனை தொடங்கில்
சூழ் உயிர்விடத் தொடங்குவன் நான்
நீதியே நிறை நின் திரு_அருள் அறிய
நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே
ஓதியே உணர்தற்கு அரும் பெரும் பொருளே
உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
ஆதியே நடுவே அந்தமே ஆதி
நடு அந்தம் இல்லதோர் அறிவே.

13. இல்லை உண்டு எனும் இ இருமையும் கடந்து ஓர்
இயற்கையின் நிறைந்த பேர்_இன்பே
அல்லை உண்டு எழுந்த தனிப் பெரும் சுடரே
அம்பலத்து ஆடல் செய் அமுதே
வல்லை இன்று அடியேன் துயர் எலாம் தவிர்த்து
வழங்குக நின் அருள் வழங்கல்
நல்லை இன்று அலது நாளை என்றிடிலோ
நான் உயிர் தரிக்கலன் அரசே.

14. அரைசு எலாம் வழங்கும் தனி அரசு அது நின்
அருள் அரசு என அறிந்தனன் பின்
உரைசெய் நின் அருள் மேல் உற்ற பேர்_ஆசை
உளம் எலாம் இடம்கொண்டது எந்தாய்
வரை செயா மேன்மேல் பொங்கி வாய் ததும்பி
வழிகின்றது என் வசம் கடந்தே
இரை செய் என் ஆவி தழைக்க அ அருளை
ஈந்து அருள் இற்றை இப்போதே.

15. போது எலாம் வீணில் போக்கி ஏமாந்த
புழுத் தலைப் புலையர்கள் புணர்க்கும்
சூது எலாம் கேட்கும்-தொறும் உனைப் பரவும்
தூயர்கள் மனம்-அது துளங்கித்
தாது எலாம் கலங்கத் தளருதல் அழகோ
தனி அருள் சோதியால் அந்த
வாது எலாம் தவிர்த்துச் சுத்த சன்மார்க்கம்
வழங்குவித்து அருளுக விரைந்தே.

16. விரைந்து நின் அருளை ஈந்திடல் வேண்டும்
விளம்பும் இ தருணம் என் உளம்-தான்
கரைந்தது காதல் பெருகி மேல் பொங்கிக்
கரை எலாம் கடந்தது கண்டாய்
வரைந்து எனை மணந்த வள்ளலே எல்லாம்
வல்லவா அம்பல_வாணா
திரைந்த என் உடம்பைத் திரு_உடம்பு ஆக்கித்
திகழ்வித்த சித்தனே சிவனே.

17. சிவம் திகழ் கருணைத் திரு_நெறிச் சார்பும்
தெய்வம் ஒன்றே எனும் திறமும்
நவம் தரு நிலைகள் சுதந்தரத்து இயலும்
நன்மையும் நரை திரை முதலாம்
துவந்துவம் தவிர்த்துச் சுத்தம் ஆதிய
முச்சுக வடிவம் பெறும் பேறும்
தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ
தந்து அருள் தருணம் ஈது எனக்கே.

18. தருணம் இஞ்ஞான்றே சுத்த சன்மார்க்கத்
தனி நெறி உலகு எலாம் தழைப்பக்
கருணையும் சிவமே பொருள் எனக் கருதும்
கருத்தும் உற்று எம்_அனோர் களிப்பப்
பொருள் நிறை ஓங்கத் தெருள் நிலை விளங்கப்
புண்ணியம் பொற்புற வயங்க
அருள் நயந்து அருள்வாய் திரு_சிற்றம்பலத்தே
அருள்_பெரும்_சோதி என் அரசே.

19. என் உள வரை மேல் அருள் ஒளி ஓங்கிற்று
இருள் இரவு ஒழிந்தது முழுதும்
மன் உறும் இதய_மலர் மலர்ந்தது நல்
மங்கலம் முழங்குகின்றன சீர்ப்
பொன் இயல் விளக்கம் பொலிந்தது சித்திப்
பூவையர் புணர்ந்திடப் போந்தார்
சொன்ன நல் தருணம் அருள்_பெரும்_சோதி
துலங்க வந்து அருளுக விரைந்தே.

20. வந்து அருள் புரிக விரைந்து இது தருணம்
மா மணி மன்றிலே ஞான
சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
சுத்த சன்மார்க்க சற்குருவே
தந்து அருள் புரிக வரம் எலாம் வல்ல
தனி அருள் சோதியை எனது
சிந்தையில் புணர்ப்பித்து என்னொடும் கலந்தே
செய்வித்து அருள்க செய் வகையே.