திருவருட்பா
ஆறாம் திருமுறை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்
பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும்
கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே
செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன்
அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே.
2. பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.
3. கைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே
காலம்என்ன கணக்கென்ன கருதும்இடம் என்ன
மெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே
விடுவேனோ இன்றடியேன் விழற்கிறைத்தேன் அலவே
செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்
தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
மைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி
மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
4. பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர்
பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர்
இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார்
இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே
உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர்
உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர்
திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ
சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.
5. பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத
மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
6. மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.
7. எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே
எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே
இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்
மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்
வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்
விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்
வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.
8. கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்
கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே
அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே
தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே
சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின்
நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது
நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே.
9. அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே
அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான்
கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற தரசே
கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம்
பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில்
புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ
இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்
றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே.
10. இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்
இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான்
மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி
வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய்
குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது
குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை
பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.
திருச்சிற்றம்பலம்
1. படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரம நடம் புரியும்
பதியை அடைவித்தீர் அப் பதி நடுவே விளங்கும்
கொடிகள் நிறை மணி மாடக் கோயிலையும் காட்டிக்கொடுத்தீர்
அக் கோயிலிலே கோபுர வாயிலிலே
செடிகள் இலாத் திரு_கதவம் திறப்பித்துக் காட்டித்
திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
அடிகள் இது தருணம் இனி அரை_கணமும் தரியேன்
அம்பலத்தே நடம் புரிவீர் அளித்து அருள்வீர் விரைந்தே.
2. பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ
பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும்
எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர்
இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன்
அட்டி செய நினையாதீர் அரை_கணமும் தரியேன்
அரை_கணத்துக்கு ஆயிரமாயிரம் கோடி ஆக
வட்டி இட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை
மணி மன்றில் நடம்புரிவீர் வந்து அருள்வீர் விரைந்தே.
3. கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே
காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன
மெய்க்கு இசைந்து அன்று உரைத்தது நீர் சத்தியம் சத்தியமே
விடுவேனோ இன்று அடியேன் விழற்கு இறைத்தேன் அலவே
செய்க்கு இசைந்த சிவ போகம் விளைத்து உணவே இறைத்தேன்
தினம்-தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
மைக்கு இசைந்த விழி அம்மை சிவகாமவல்லி
மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே.
4. பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர்
பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர்
இரு நிலத்தே பசித்தவர்க்குப் பசி நீக்க வல்லார்
இவர் பெரியர் இவர் சிறியர் என்னல் வழக்கு அலவே
உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர்
உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது எனக் கொண்டீர்
திரிவு அகத்தே நான் வருந்தப் பார்த்து இருத்தல் அழகோ
சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகரே.
5. பொய் கொடுத்த மன மாயைச் சேற்றில் விழாது எனக்கே
பொன் மணி மேடையில் ஏறிப் புந்தி மகிழ்ந்து இருக்கக்
கைகொடுத்தீர் உலகம் எலாம் களிக்க உலவாத
கால் இரண்டும் கொடுத்தீர் எக்காலும் அழியாத
மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர்
மேல் ஏறினேன் இனிக் கீழ் விழைந்து இறங்கேன் என்றும்
மை கொடுத்த விழி அம்மை சிவகாமவல்லி
மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே.
6. மின் போலே வயங்குகின்ற விரி சடையீர் அடியேன்
விளங்கும் உமது இணை அடிகள் மெய் அழுந்தப் பிடித்தேன்
முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர்
முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே
என் போலே இரக்கம் விட்டுப் பிடித்தவர்கள் இலையே
என் பிடிக்குள் இசைந்தது போல் இசைந்தது இலை பிறர்க்கே
பொன் போலே முயல்கின்ற மெய்த் தவர்க்கும் அரிதே
பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே.
7. எது தருணம் அது தெரியேன் என்னினும் எம்மானே
எல்லாம் செய் வல்லவனே என் தனி நாயகனே
இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ
எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும்
மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம்
வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில்
விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும்
வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ.
8. கோள் அறிந்த பெரும் தவர்-தம் குறிப்பு அறிந்தே உதவும்
கொடையாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா
ஆள் அறிந்து இங்கு எனை ஆண்ட அரசே என் அமுதே
அம்பலத்தே நடம் புரியும் அரும் பெரும் சோதியனே
தாள் அறிந்தேன் நின் வரவு சத்தியம் சத்தியமே
சந்தேகம் இல்லை அந்தத் தனித்த திரு_வரவின்
நாள் அறிந்துகொளல் வேண்டும் நவிலுக நீ எனது
நனவிடையாயினும் அன்றிக் கனவிடையாயினுமே.
9. அன்று எனக்கு நீ உரைத்த தருணம் இது எனவே
அறிந்திருக்கின்றேன் அடியேன் ஆயினும் என் மனம்-தான்
கன்று எனச் சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே
கண்ணுடைய கரும்பே என் கவலை மனக் கலக்கம்
பொன்றிடப் பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில்
புண்ணியர்கள் உளம் களிப்புப் பொருந்தி விளங்கிட நீ
இன்று எனக்கு வெளிப்பட என் இதய_மலர் மிசை நின்று
எழுந்தருளி அருள்வது எலாம் இனிது அருள்க விரைந்தே.
10. இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம்
இனித் தடை ஒன்று இலை கண்டாய் என் மனனே நீ-தான்
மது விழும் ஓர் ஈப் போலே மயங்காதே கயங்கி
வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய்
குதுகலமே இது தொடங்கிக் குறைவு இலை காண் நமது
குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை
பொதுவில் நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
புணர்ந்து உரைத்த திரு_வார்த்தை பொன் வார்த்தை இதுவே.