Unmai Kural Vallalar Songs

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. தனிப் பெரும் தலைவரே தாயவரே என்
தந்தையரே பெரும் தயவு_உடையவரே
பனிப்பு அறுத்து எனை ஆண்ட பரம்பரரே எம்
பார்வதிபுர ஞானப் பதி சிதம்பரரே
இனிச் சிறுபொழுதேனும் தாழ்த்திடல் வேண்டா
இறையவரே உமை இங்கு கண்டு அல்லால்
அனிச்சய உலகினைப் பார்க்கவும்_மாட்டேன்
அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

2. பெறுவது நுமை அன்றிப் பிறிது ஒன்றும் விரும்பேன்
பேசல் நும் பேச்சு அன்றிப் பிறிது ஒன்றும் பேசேன்
உறுவது நும் அருள் அன்றிப் பிறிது ஒன்றும் உவவேன்
உன்னல் உம் திறன் அன்றிப் பிறிது ஒன்றும் உன்னேன்
மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்துக் கொண்டீர்
வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால்
அறுசுவை_உண்டி கொண்டு அருந்தவும்_மாட்டேன்
அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

3. கரும்பிடை இரதமும் கனியில் இன் சுவையும்
காட்டி என் உள்ளம் கலந்து இனிக்கின்றீர்
விரும்பி நும் பொன் அடிக்கு ஆட்பட்டு நின்றேன்
மேல் விளைவு அறிகிலன் விச்சை ஒன்று இல்லேன்
துரும்பினும் சிறியனை அன்று வந்து ஆண்டீர்
தூய நும் பேர்_அருள் சோதி கண்டு அல்லால்
அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன்
அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

4. தடுத்து எனை ஆட்கொண்ட தந்தையரே என்
தனிப் பெரும் தலைவரே சபை நடத்தவரே
தொடுத்து ஒன்று சொல்கிலேன் சொப்பனத்தேனும்
தூய நும் திரு_அருள் நேயம் விட்டு அறியேன்
விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை
வெருவு உளக் கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர்
அடுத்து இனிப் பாயலில் படுக்கவும்_மாட்டேன்
அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

5. காசையும் பணத்தையும் கன்னியர்-தமையும்
காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால்
நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ
ஏசறல் அகற்றி வந்து என்னை முன் ஆண்டீர்
இறையவரே உமை இன்று கண்டு அல்லால்
ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன்
அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

6. என் பொருள் என் உடல் என் உயிர் எல்லாம்
ஈந்தனன் உம்மிடத்து எம்பெருமானீர்
இன்பொடு வாங்கிக்கொண்டு என்னை ஆட்கொண்டீர்
என் செயல் ஒன்று இலை யாவும் நும் செயலே
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்
வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால்
அன்பொடு காண்பாரை முன்பிட_மாட்டேன்
அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

7. திருந்தும் என் உள்ளத் திரு_கோயில் ஞான
சித்திபுரம் எனச் சத்தியம் கண்டேன்
இருந்து அருள்கின்ற நீர் என் இரு கண்கள்
இன்புற அன்று வந்து எழில் உருக் காட்டி
வருந்தலை என்று எனைத் தேற்றியவாறே
வள்ளலே இன்று நும் வரவு கண்டு அல்லால்
அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன்
அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

8. கரைக் கணம் இன்றியே கடல் நிலை செய்தீர்
கருணை_கடற்குக் கரைக்கு அணம் செய்யீர்
உரைக்கு அணவாத உயர்வு_உடையீர் என்
உரைக்கு அணவிப் பல உதவி செய்கின்றீர்
வரைக் கண எண்_குண மா நிதி ஆனீர்
வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால்
அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன்
அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

9. மடுக்க நும் பேர்_அருள் தண் அமுது எனக்கே
மாலையும் காலையும் மத்தியானத்தும்
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்
காலையினும் தந்து என் கடும் பசி தீர்த்து
எடுக்கும் நல் தாயொடும் இணைந்து நிற்கின்றீர்
இறையவரே உம்மை இங்கு கண்டு அல்லால்
அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன்
அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

10. கறுத்து உரைக்கின்றவர் களித்து உரைக்கின்ற
காலை ஈது என்றே கருத்துள் அறிந்தேன்
நிறுத்து உரைக்கின்ற பல் நேர்மைகள் இன்றி
நீடு ஒளிப் பொன் பொது நாடகம் புரிவீர்
செறுத்து உரைக்கின்றவர் தேர்வதற்கு அரியீர்
சிற்சபையீர் எனைச் சேர்ந்திடல் வேண்டும்
அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன்
அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.