Vadivudai Manikka Malai Vallalar Songs

திருவருட்பா

முதல் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. சீர் கொண்ட ஒற்றிப் பதி_உடையானிடம் சேர்ந்த மணி
வார் கொண்ட கொங்கை வடிவாம்பிகை-தன் மலர்_அடிக்குத்
தார் கொண்ட செந்தமிழ்ப் பா_மாலை சாத்தத் தமியனுக்கே
ஏர்கொண்ட நல் அருள் ஈயும் குணாலய ஏரம்பனே.

2. கடல் அமுதே செங்கரும்பே அருள் கற்பகக் கனியே
உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே
அடல் விடையார் ஒற்றியார் இடம் கொண்ட அரு_மருந்தே
மடல் அவிழ் ஞான_மலரே வடிவுடை_மாணிக்கமே.

3. அணியே அணி பெறும் ஒற்றித் தியாகர்-தம் அன்புறு சற்
குணியே எம் வாழ்க்கைக் குல_தெய்வமே மலை_கோன் தவமே
பணியேன் பிழை பொறுத்து ஆட்கொண்ட தெய்வப் பதி கொள் சிந்தா
மணியே என் கண்ணுள் மணியே வடிவுடை_மாணிக்கமே.

4. மான் நேர் விழி மலை மானே எம்மான் இடம் வாழ் மயிலே
கான் ஏர் அளகப் பசும் குயிலே அருள் கண் கரும்பே
தேனே திருவொற்றி மா நகர் வாழும் சிவ_சத்தியே
வானே கருணை வடிவே வடிவுடை_மாணிக்கமே.

5. பொருளே அடியர் புகலிடமே ஒற்றிப் பூரணன் தண்
அருளே எம் ஆர்_உயிர்க்காம் துணையே விண்ணவர் புகழும்
தெருளே மெய்ஞ்ஞானத் தெளிவே மறை முடிச் செம்பொருளே
மருள் ஏதம் நீக்கும் ஒளியே வடிவுடை_மாணிக்கமே.

6. திருமாலும் நான்முகத் தேவும் முன்_நாள் மிகத் தேடி மனத்து
அரு மால் உழக்க அனல் உரு ஆகி அமர்ந்து அருளும்
பெருமான் எம்மான் ஒற்றிப் பெம்மான் கை மான் கொளும் பித்தன் மலை
மருமான் இடம் கொள் பெண் மானே வடிவுடை_மாணிக்கமே.

7. உன் நேர் அருள் தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
பொன்னே அப் பொன் அற்புத ஒளியே மலர்ப் பொன் வணங்கும்
அன்னே எம் ஆர்_உயிர்க்கு ஓர் உயிரே ஒற்றி அம் பதி வாழ்
மன்னேர் இடம் வளர் மின்னே வடிவுடை_மாணிக்கமே.

8. கண்ணே அக் கண்ணின் மணியே மணியில் கலந்து ஒளிசெய்
விண்ணே வியன் ஒற்றியூர் அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
பெண்ணே மலை பெறும் பெண் மணியே தெய்வப் பெண் அமுதே
மண் நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

9. மலையான் தவம் செய்து பெற்ற முத்தே ஒற்றி வாழ் கனகச்
சிலையான் மணக்க மணக்கும் தெய்வீகத் திரு_மலரே
அலையால் மலி கடல் பள்ளிகொண்டான் தொழும் ஆர்_அமுதே
வலையான் அருமை மகளே வடிவுடை_மாணிக்கமே.

10. காமம் படர் நெஞ்சு_உடையோர் கனவினும் காணப்படாச்
சேமம் படர் செல்வப் பொன்னே மதுரச் செழும் கனியே
தாமம் படர் ஒற்றியூர் வாழ் பவளத் தனி மலையின்
வாமம் படர் பைங்கொடியே வடிவுடை_மாணிக்கமே.

11. கோடா அருள் குண_குன்றே சிவத்தில் குறிப்பு_இலரை
நாடாத ஆனந்த நட்பே மெய் அன்பர் நயக்கும் இன்பே
பீடு ஆர் திருவொற்றிப் பெம்மான் இடம் செய் பெரும் தவமே
வாடா மணி மலர்க் கொம்பே வடிவுடை_மாணிக்கமே.

12. நாலே எனும் மறை அந்தங்கள் இன்னமும் நாடி எனைப்
போலே வருந்த வெளி ஒளியாய் ஒற்றிப் புண்ணியர்-தம்
பாலே இருந்த நினைத் தங்கையாகப் பகரப்பெற்ற
மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை_மாணிக்கமே.

13. கங்கை_கொண்டோன் ஒற்றியூர் அண்ணல் வாமம் கலந்து அருள்செய்
நங்கை எல்லா உலகும் தந்த நின்னை அ நாரணற்குத்
தங்கை என்கோ அன்றித் தாயர் என்கோ சொல் தழைக்கும் மலை
மங்கை அம் கோமள மானே வடிவுடை_மாணிக்கமே.

14. சோலையிட்டு ஆர் வயல் ஊர் ஒற்றி வைத்துத் தன் தொண்டர் அன்பின்
வேலையிட்டால் செயும் பித்தனை மெய்யிடை மேவு கரித்
தோலையிட்டு ஆடும் தொழில்_உடையோனைத் துணிந்து முன்_நாள்
மாலையிட்டாய் இஃது என்னே வடிவுடை_மாணிக்கமே.

15. தனை ஆள்பவர் இன்றி நிற்கும் பரமன் தனி அருளாய்
வினை ஆள் உயிர் மலம் நீக்கி மெய் வீட்டின் விடுத்திடும் நீ
எனை ஆள் அருள் ஒற்றியூர் வாழ் அவன்றன்னிடத்தும் ஒரு
மனையாள் என நின்றது என்னே வடிவுடை_மாணிக்கமே.

16. பின் ஈன்ற பிள்ளையின் மேல் ஆர்வம் தாய்க்கு எனப் பேசுவர் நீ
முன் ஈன்ற பிள்ளையின் மேல் ஆசை உள்ளவா மொய் அசுரர்
கொன் ஈன்ற போர்க்கு இளம்பிள்ளையை ஏவக் கொடுத்தது என்னே
மன் ஈன்ற ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே.

17. பை ஆளும் அல்குல் சுரர் மடவார்கள் பலருளும் இச்
செய்யாளும் வெண்ணிற_மெய்யாளும் எத் தவம் செய்தனரோ
கையாளும் நின் அடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய்
மை ஆளும் கண் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

18. இலை ஆற்றும் நீ மலர்_காலால் பணிக்கும் குற்றேவல் எலாம்
தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூ_மகள்-தன்னைத் தள்ளாய்
நிலையால் பெரிய நின் தொண்டர்-தம் பக்கம் நிலாமையினால்
மலையாற்கு அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

19. கலை_மகளோ நின் பணியை அன்போடும் கடைப்பிடித்தாள்
அலை_மகளோ அன்பொடு பிடித்தாள் எற்கு அறைதி கண்டாய்
தலை_மகளே அருள் தாயே செவ் வாய்க் கரும் தாழ் குழல் பொன்
மலை_மகளே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

20. பொன்னோடு வாணி என்போர் இருவோரும் பொருள் நல் கல்வி-
தன்னோடு அருளும் திறம் நின் குற்றேவலைத் தாங்கிநின்ற
பின்னோ அலது அதன் முன்னோ தெளிந்திடப் பேசுக நீ
மன்னோடு எழில் ஒற்றியூர் வாழ் வடிவுடை_மாணிக்கமே.

21. கா மட்டு அலர் திருவொற்றி நின் நாயகன் கந்தை சுற்றி
ஏம் அட்ட அரையொடு நிற்பது கண்டும் இரங்கலர் போல்
நீ மட்டுமே பட்டு உடுக்கின்றனை உன்றன் நேயம் என்னோ
மா மட்டு அலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

22. வீற்று ஆர் நின்றன் மணத்து அம்மியின் மேல் சிறு மெல் அனிச்சம்
ஆற்றா நின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத்தார் எனின் மால்
ஏற்றார் திருவொற்றியூரார் களக் கறுப்பு ஏற்றவரே
மாற்றா இயல் கொள் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

23. பொருப்பு உறு நீலி என்பார் நின்னை மெய் அது போலும் ஒற்றி
விருப்புறு நாயகன் பாம்பாபரணமும் வெண் தலையும்
நெருப்பு உறு கையும் கனல் மேனியும் கண்டு நெஞ்சம் அஞ்சாய்
மருப்பு உறு கொங்கை மயிலே வடிவுடை_மாணிக்கமே.

24. அனம்_பொறுத்தான் புகழ் ஒற்றி நின் நாயகன் அம் குமிழித்
தனம்_பொறுத்தாள் ஒரு மாற்றாளைத் தன் முடி-தன்னில் வைத்தே
தினம் பொறுத்தான் அது கண்டும் சினம் இன்றிச் சேர்ந்த நின் போல்
மனம் பொறுத்தார் எவர் கண்டாய் வடிவுடை_மாணிக்கமே.

25. ஓர் உருவாய் ஒற்றியூர் அமர்ந்தார் நின்னுடையவர் பெண்
சீர் உரு ஆகும் நின் மாற்றாளை நீ தெளியாத் திறத்தில்
நீர் உரு ஆக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே
வாருரு வார் கொங்கை நங்காய் வடிவுடை_மாணிக்கமே.

26. சார்ந்தே நின்-பால் ஒற்றியூர் வாழும் நாயகர் தாம் மகிழ்வு
கூர்ந்தே குலாவும் அக் கொள்கையைக் காணில் கொதிப்பள் என்று
தேர்ந்தே அக் கங்கையைச் செம் சடை மேல் சிறைசெய்தனர் ஒண்
வார்ந்தே குழை கொள் விழியாய் வடிவுடை_மாணிக்கமே.

27. நீயே எனது பிழை குறிப்பாய் எனில் நின் அடிமைப்
பேயேன் செயும் வண்ணம் எவ்வண்ணமோ எனைப் பெற்று அளிக்கும்
தாயே கருணைத் தடம் கடலே ஒற்றிச் சார் குமுத
வாய் ஏர் சவுந்தர மானே வடிவுடை_மாணிக்கமே.

28. முப்போதும் அன்பர்கள் வாழ்த்து ஒற்றியூர் எம் முதல்வர் மகிழ்
ஒப்பு ஓத அரும் மலைப் பெண் அமுதே என்று வந்து நினை
எப்போதும் சிந்தித்து இடர் நீங்கி வாழ எனக்கு அருள்வாய்
மைப் போது அனைய கண் மானே வடிவுடை_மாணிக்கமே.

29. மீதலத்தோர்களுள் யார் வணங்காதவர் மேவு நடுப்
பூதலத்தோர்களுள் யார் புகழாதவர் போற்றி நிதம்
பாதலத்தோர்களுள் யார் பணியாதவர் பற்றி நின்றாள்
மா தலத்து ஓங்கு ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

30. சேய்க் குற்றம் தாய் பொறுத்து ஏடா வருக எனச் செப்புவள் இ
நாய்க் குற்றம் நீ பொறுத்து ஆளுதல் வேண்டும் நவில் மதியின்
தேய்க் குற்றம் மாற்றும் திருவொற்றி_நாதர்-தம் தேவி அன்பர்
வாய்க் குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

31. செங்கமலாசனன்_தேவி பொன்_நாணும் திரு முதலோர்
சங்கம்-அதாம் மிடற்று ஓங்கு பொன்_நாணும் தலைகுனித்துத்
துங்கமுறாது உளம் நாணத் திருவொற்றி_தோன்றல் புனை
மங்கலநாண்_உடையாளே வடிவுடை_மாணிக்கமே.

32. சேடு ஆர் இயல் மணம் வீசச் செயல் மணம் சேர்ந்து பொங்க
ஏடு ஆர் பொழில் ஒற்றியூர் அண்ணல் நெஞ்சம் இருந்து உவக்க
வீடா இருளும் முகிலும் பின்னிட்டு வெருவவைத்த
வாடா_மலர்க் குழலாளே வடிவுடை_மாணிக்கமே.

33. புரம் நோக்கினால் பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர் களக்
கரம் நோக்கி நல் அமுது ஆக்கி நின் போற்றும் கருத்தினர் ஆ
தரம் நோக்கி உள் இருள் நீக்கி மெய்ஞ்ஞானத் தனிச் சுகம்-தான்
வர நோக்கி ஆள் விழி மானே வடிவுடை_மாணிக்கமே.

34. உன்னும் திருவொற்றியூர்_உடையார் நெஞ்சு உவப்ப எழில்
துன்னும் உயிர்ப் பயிர் எல்லாம் தழைக்கச் சுகக் கருணை
என்னும் திரு_அமுது ஓயாமல் ஊற்றி எமது உளத்தின்
மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

35. வெள்ளம் குளிரும் சடை_முடியோன் ஒற்றி வித்தகன்-தன்
உள்ளம் குளிர மெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
தெள்ளம் குளிர் இன் அமுதே அளிக்கும் செவ் வாய்க் குமுத
வள்ளம் குளிர் முத்த மானே வடிவுடை_மாணிக்கமே.

36. மா நந்தம் ஆர் வயல் காழிக் கவுணியர் மா மணிக்கு அன்று
ஆநந்த இன் அமுது ஊற்றும் திரு_முலை ஆர்_அணங்கே
கா நந்த ஓங்கும் எழில் ஒற்றியார் உள் களித்து இயலும்
வானம் தரும் இடை மானே வடிவுடை_மாணிக்கமே.

37. வான் தேட நான்கு மறை தேட மாலுடன் வாரிச_மே
லான் தேட மற்றை அரும் தவர் தேட என் அன்பு இன்மையால்
யான் தேட என் உளம் சேர் ஒற்றியூர் எம் இரு_நிதியே
மான் தேடும் வாள் கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

38. முத்தேவர் விண்ணன் முதல் தேவர் சித்தர் முனிவர் மற்றை
எத்தேவரும் நின் அடி நினைவார் நினைக்கின்றிலர் தாம்
செத்தே பிறக்கும் சிறியர் அன்றோ ஒற்றித் தேவர் நல் தா
மத் தேவர் வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே.

39. திரு_நாள் நினைத் தொழும் நல் நாள் தொழாமல் செலுத்திய நாள்
கரு நாள் என மறை எல்லாம் புகலும் கருத்து அறிந்தே
ஒருநாளினும் நின்றனை மறவார் அன்பர் ஒற்றியில் வாழ்
மரு நாள்_மலர்க் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

40. வாணாள் அடைவர் வறுமையுறார் நல் மனை மக்கள் பொன்
பூண் ஆள் இடம் புகழ் போதம் பெறுவர் பின் புன்மை ஒன்றும்
காணார் நின் நாமம் கருதுகின்றோர் ஒற்றிக் கண்_நுதல்-பால்
மாண் ஆர்வம் உற்ற மயிலே வடிவுடை_மாணிக்கமே.

41. சீர் அறிவாய்த் திருவொற்றிப் பரமசிவத்தை நினைப்
போர் அறிவாய் அ அறிவாம் வெளிக்கு அப்புறத்து நின்றாய்
யார் அறிவார் நின்னை நாயேன் அறிவது அழகு உடைத்தே
வார் எறி பூண் முலை மானே வடிவுடை_மாணிக்கமே.

42. போற்றிடுவோர்-தம் பிழை ஆயிரமும் பொறுத்து அருள்செய்
வீற்று ஒளிர் ஞான விளக்கே மரகத மென் கரும்பே
ஏற்று ஒளிர் ஒற்றி_இடத்தார் இடத்தில் இலங்கும் உயர்
மாற்று ஒளிரும் பசும்பொன்னே வடிவுடை_மாணிக்கமே

43. ஆசை_உள்ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நின் தாள்
பூசை உள்ளார் எனில் எங்கே உலகர் செய் பூசை கொள்வார்
தேசை உள்ளார் ஒற்றியூர்_உடையார் இடம் சேர் மயிலே
மாசை உள்ளார் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே.

44. அண்டாரை வென்று உலகு ஆண்டு மெய்ஞ்ஞானம் அடைந்து விண்ணில்
பண் தாரை சூழ் மதி போல் இருப்போர்கள் நின் பத்தர் பதம்
கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்_நுதல் சேர்
வண் தாரை வேல் அன்ன மானே வடிவுடை_மாணிக்கமே.

45. அடியார் தொழும் நின் அடிப் பொடி தான் சற்று அணியப்பெற்ற
முடியால் அடிக்குப் பெருமை பெற்றார் அ முகுந்தன் சந்தக்
கடி ஆர் மலர் அயன் முன்னோர் தென் ஒற்றிக் கடவுள் செம்பால்
வடியாக் கருணைக் கடலே வடிவுடை_மாணிக்கமே.

46. ஓவாது அயன் முதலோர் முடி கோடி உறழ்ந்துபடில்
ஆஆ அனிச்சம் பொறா மலர்ச் சிற்றடி ஆற்றும்-கொலோ
காவாய் இமயப் பொன் பாவாய் அருள் ஒற்றிக் காமர் வல்லி
வாவா எனும் அன்பர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

47. இட்டு ஆர் மறைக்கும் உபநிடதத்திற்கும் இன்னும் சற்றும்
எட்டா நின் பொன்_அடிப் போது எளியேன் தலைக்கு எட்டும்-கொலோ
கட்டு ஆர் சடை முடி ஒற்றி எம்மான் நெஞ்சகத்து அமர்ந்த
மட்டு ஆர் குழல் மட மானே வடிவுடை_மாணிக்கமே.

48. வெளியாய் வெளிக்குள் வெறுவெளியாய்ச் சிவமே நிறைந்த
ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரை நினை ஒப்பவர் ஆர்
எளியார்க்கு எளியர் திருவொற்றியார் மெய் இனிது பரி
மளியாநின்று ஓங்கும் மருவே வடிவுடை_மாணிக்கமே.

49. விண் அம் காதல் அன்பர்-தம் அன்பிற்கும் நின் புலவிக்கும் அன்றி
வணங்கா மதி முடி எங்கள் பிரான் ஒற்றி_வாணனும் நின்
குணம் காதலித்து மெய்க்கூறு தந்தான் எனக் கூறுவர் உன்
மணம் காதலித்தது அறியார் வடிவுடை_மாணிக்கமே.

50. பன்னும் பல்வேறு அண்டம் எல்லாம் அ அண்டப் பரப்பினின்று
துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை
இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பது என்னே
மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

51. சினம்_கடந்தோர் உள்ளச் செந்தாமரையில் செழித்து மற்றை
மனம் கடந்து ஓதும் அ வாக்கும் கடந்த மறை அன்னமே
தினம் கடந்தோர் புகழ் ஒற்றி எம்மான் இடம் சேர் அமுதே
வனம்_கடந்தோன் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே.

52. வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர் முதல்
எல்லாரும் நின் செயல் அல்லாது அணுவும் இயக்கிலரேல்
இல்லாமையால் உழல் புல்லேன் செய் குற்றங்கள் ஏது கண்டாய்
மல் ஆர் வயல் ஒற்றி நல்லாய் வடிவுடை_மாணிக்கமே.

53. எழுதா எழில் உயிர்ச் சித்திரமே இன் இசைப் பயனே
தொழுது ஆடும் அன்பர்-தம் உள் களிப்பே சிற்சுக_கடலே
செழு ஆர் மலர்ப் பொழில் ஒற்றி எம்மான்-தன் திரு_துணையே
வழுவா மறையின் பொருளே வடிவுடை_மாணிக்கமே.

54. தெருள் பால் உறும் ஐங்கை_செல்வர்க்கும் நல் இளம் சேய்க்கும் மகிழ்ந்து
அருள்_பால் அளிக்கும் தனத் தனமே எம் அகம் கலந்த
இருள் பால் அகற்றும் இரும் சுடரே ஒற்றி எந்தை உள்ளம்
மருள் பால் பயிலும் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

55. அயில் ஏந்தும் பிள்ளை நல் தாயே திருவொற்றி ஐயர் மலர்க்
கயில் ஏந்து அரும்_பெறல் முத்தே இசையில் கனிந்த குரல்
குயிலே குயின் மென் குழல் பிடியே மலை_கோன் பயந்த
மயிலே மதி முக மானே வடிவுடை_மாணிக்கமே.

56. செய்யகம் ஓங்கும் திருவொற்றியூரில் சிவபெருமான்
மெய்யகம் ஓங்கு நல் அன்பே நின்-பால் அன்பு மேவுகின்றோர்
கையகம் ஓங்கும் கனியே தனி மெய்க் கதி நெறியே
வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை_மாணிக்கமே.

57. தரும் பேர் அருள் ஒற்றியூர்_உடையான் இடம் சார்ந்த பசுங்
கரும்பே இனிய கற்கண்டே மதுரக் கனி நறவே
இரும் பேய் மனத்தினர்-பால் இசையாத இளம் கிளியே
வரும் பேர் ஒளிச் செம் சுடரே வடிவுடை_மாணிக்கமே.

58. சேல் ஏர் விழி அருள் தேனே அடியர் உள் தித்திக்கும் செம்
பாலே மதுரச் செம் பாகே சொல் வேதப் பனுவல் முடி
மேலே விளங்கும் விளக்கே அருள் ஒற்றி வித்தகனார்
மாலேகொளும் எழில் மானே வடிவுடை_மாணிக்கமே.

59. எம்-பால் அருள்வைத்து எழில் ஒற்றியூர் கொண்டிருக்கும் இறைச்
செம் பால் கலந்த பைந்தேனே கதலிச் செழும் கனியே
வெம் பாலை நெஞ்சர் உள் மேவா மலர்ப் பத மென் கொடியே
வம்பால் அணி முலை மானே வடிவுடை_மாணிக்கமே.

60. ஏமம் உய்ப்போர் எமக்கு என்றே இளைக்கில் எடுக்கவைத்த
சேம வைப்பே அன்பர் தேடும் மெய்ஞ்ஞானத் திரவியமே
தாமம் அமைக் கார் மலர்க் கூந்தல் பிடி மென் தனி நடையாய்
வாம நல் சீர் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே.

61. மன் ஏர் மலையன்_மனையும் நல் காஞ்சனமாலையும் நீ
அன்னே எனத் திருவாயால் அழைக்கப்பெற்றார் அவர்-தாம்
முன்னே அரும் தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
வல் நேர் இளம் முலை மின்னே வடிவுடை_மாணிக்கமே.

62. கணம் ஒன்றிலேனும் என் உள்ளக் கவலை_கடல் கடந்தே
குணம் ஒன்று இலேன் எது செய்கேன் நின் உள்ளக் குறிப்பு அறியேன்
பணம் ஒன்று பாம்பு அணி ஒற்றி எம்மானிடப் பாலில் தெய்வ
மணம் ஒன்று பச்சைக் கொடியே வடிவுடை_மாணிக்கமே.

63. கரு வேதனை அற என் நெஞ்சகத்தில் களிப்பொடு ஒற்றிக்
குருவே எனும் நின் கணவனும் நீயும் குலவும் அந்தத்
திருவே அருள் செந்திருவே முதல் பணி செய்யத் தந்த
மருவே மருவு மலரே வடிவுடை_மாணிக்கமே.

64. எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்கு உன் அருள்
பண்ணிய உள்ளம் கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
புண்ணிய மல்லிகைப் போதே எழில் ஒற்றிப் பூரணர் பால்
மண்ணிய பச்சை மணியே வடிவுடை_மாணிக்கமே.

65. தீது செய்தாலும் நின் அன்பர்கள்-தம் முன் செருக்கி நின்று
வாதுசெய்தாலும் நின் தாள் மறந்தாலும் மதி_இலியேன்
ஏது செய்தாலும் பொறுத்து அருள்வாய் ஒற்றியின்னிடைப் பூ_
மாது செய் தாழ் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

66. மருந்தில் நின்றான் ஒற்றியூர் வாழும் நின்றன் மகிழ்நன் முன்னும்
திருந்தி நின்றார் புகழ் நின் முன்னும் நல் அருள் தேன் விழைந்தே
விருந்தில் நின்றேன் சற்றும் உள் இரங்காத விதத்தைக் கண்டு
வருந்தி நின்றேன் இது நன்றோ வடிவுடை_மாணிக்கமே.

67. என் போல் குணத்தில் இழிந்தவர் இல்லை எப்போதும் எங்கும்
நின் போல் அருளில் சிறந்தவர் இல்லை இ நீர்மையினால்
பொன் போலும் நின் அருள் அன்னே எனக்கும் புரிதி கண்டாய்
மன் போல் உயர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

68. துன்பே மிகும் இ அடியேன் மனத்தில் நின் துய்ய அருள்
இன்பே மிகுவது எந்நாளோ எழில் ஒற்றி எந்தை உயிர்க்கு
அன்பே மெய்த் தொண்டர் அறிவே சிவ நெறிக்கு அன்பு_இலர்-பால்
வன்பே மெய்ப் போத வடிவே வடிவுடை_மாணிக்கமே.

69. சற்றே எனினும் என் நெஞ்சத் துயரம் தவிரவும் நின்
பொன் தே மலர்_பதம் போற்றவும் உள்ளம் புரிதி கண்டாய்
சொல் தேர் அறிஞர் புகழ் ஒற்றி மேவும் துணைவர்-தம் செம்
மல் தேர் புயத்து அணை மானே வடிவுடை மாணிக்கமே.

70. சந்தோடமாப் பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
அந்தோ ஒரு தமியேன் மட்டும் வாடல் அருட்கு அழகோ
நம் தோடம் நீக்கிய நங்காய் எனத் திரு நான்முகன் மால்
வந்து ஓதும் ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே.

71. அடியேன் மிசை எப் பிழை இருந்தாலும் அவை பொறுத்துச்
செடி ஏதம் நீக்கி நல் சீர் அருள்வாய் திகழ் தெய்வ மறைக்
கொடியே மரகதக் கொம்பே எழில் ஒற்றிக் கோமளமே
வடி ஏர் அயில் விழி மானே வடிவுடை_மாணிக்கமே.

72. கண்ணப்பன் ஏத்தும் நல் காளத்தியார் மங்கலம் கொள் ஒற்றி
நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நல் நறவே
எண்ணப்படா எழில் ஓவியமே எமை ஏன்றுகொண்ட
வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை_மாணிக்கமே.

73. கற்பே விகற்பம் கடியும் ஒன்றே எங்கள் கண் நிறைந்த
பொற்பே மெய்த் தொண்டர்-தம் புண்ணியமே அருள் போத இன்பே
சொல் பேர் அறிவுள் சுகப் பொருளே மெய்ச் சுயம் சுடரே
மல் பேர் பெறும் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே.

74. மிகவே துயர்_கடல் வீழ்ந்தேனை நீ கைவிடுதல் அருள்
தகவே எனக்கு நல் தாயே அகில சராசரமும்
சுக வேலை மூழ்கத் திருவொற்றியூரிடம் துன்னிப் பெற்ற
மகவே எனப் புரக்கின்றோய் வடிவுடை_மாணிக்கமே.

75. வேதங்களாய் ஒற்றி மேவும் சிவத்தின் விளைவு அருளாய்ப்
பூதங்களாய்ப் பொறியாய்ப் புலனாகிப் புகல் கரண
பேதங்களாய் உயிர் ஆகிய நின்னை இப் பேதை என் வாய்
வாதங்களால் அறிவேனோ வடிவுடை_மாணிக்கமே.

76. மதியே மதி முக மானே அடியர் மனத்து வைத்த
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள் நிலையே
கதியே கதி வழி காட்டும் கண்ணே ஒற்றிக் காவலர் பால்
வதி ஏர் இள மட மானே வடிவுடை_மாணிக்கமே.

77. ஆறாத் துயரத்து அழுந்துகின்றேனை இங்கு அஞ்சல் என்றே
கூறாக் குறை என் குறையே இனி நின் குறிப்பு அறியேன்
தேறாச் சிறியர்க்கு அரிதாம் திருவொற்றித் தேவர் மகிழ்
மாறாக் கருணை_மழையே வடிவுடை_மாணிக்கமே.

78. எற்றே நிலை ஒன்றும் இல்லாது உயங்கும் எனக்கு அருளச்
சற்றே நின் உள்ளம் திரும்பிலை யான் செயத்தக்கது என்னே
சொல் தேன் நிறை மறைக் கொம்பே மெய்ஞ்ஞானச் சுடர்க் கொழுந்தே
மல் தேர் அணி ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

79. செவ் வேலை வென்ற கண் மின்னே நின் சித்தம் திரும்பி எனக்கு
எவ்வேலை செய் என்றிடினும் அ வேலை இயற்றுவல் காண்
தெவ் வேலை வற்றச்செய் அ வேலை ஈன்று ஒற்றித் தேவர் நெஞ்சை
வவ்வு ஏல வார் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

80. தாயே மிகவும் தயவு_உடையாள் எனச் சாற்றுவர் இச்
சேயேன் படும் துயர் நீக்க என்னே உளம் செய்திலையே
நாயேன் பிழை இனி நாடாது நல் அருள் நல்க வரு
வாயே எம் ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே.

81. நானே நினைக் கடியேன் என் பிழைகளை நாடிய நீ
தானே எனை விடில் அந்தோ இனி எவர் தாங்குகின்றோர்
தேனே நல் வேதத் தெளிவே கதிக்குச் செலு நெறியே
வான் ஏர் பொழில் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே.

82. கல்லாரிடத்தில் என் இல்லாமை சொல்லிக் கலங்கி இடா
நல்லாண்மை உண்டு அருள் வல்லாண்மை உண்டு எனின் நல்குவையோ
வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி_வாணரொடு
மல் ஆர் பொழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

83. சுந்தர வாள் முகத் தோகாய் மறைகள் சொலும் பைங்கிள்ளாய்
கந்தர வார் குழல் பூவாய் கருணைக் கடைக்கண் நங்காய்
அந்தர நேர் இடைப் பாவாய் அருள் ஒற்றி அண்ணல் மகிழ்
மந்தர நேர் கொங்கை மங்காய் வடிவுடை_மாணிக்கமே.

84. பத்தர்-தம் உள்ளத் திரு_கோயில் மேவும் பரம் பரையே
சுத்த மெய்ஞ்ஞான ஒளிப் பிழம்பே சிற்சுகாநந்தமே
நித்தம் நின் சீர் சொல எற்கு அருள்வாய் ஒற்றி நின் மலர் உன்
மத்தர்-தம் வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே.

85. பூவாய் மலர்க் குழல் பூவாய் மெய் அன்பர் புனைந்த தமிழ்ப்
பாவாய் நிறைந்த பொன் பாவாய் செந்தேனில் பகர் மொழியாய்
காவாய் என அயன் கா_ஆய்பவனும் கருதும் மலர்
மா வாய் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

86. தாதா உணவு உடை தாதா எனப் புல்லர்-தம்மிடைப் போய்
மா தாகம் உற்றவர் வன் நெஞ்சில் நின் அடி வைகும்-கொலோ
காது ஆர் நெடும் கண் கரும்பே நல் ஒற்றிக் கருத்தர் நட
வாதாரிடம் வளர் மாதே வடிவுடை_மாணிக்கமே.

87. களம் திரும்பா இக் கடையேனை ஆளக் கருணைகொண்டு உன்
உளம் திரும்பாமைக்கு என் செய்கேன் துயர்_கடலூடு அலைந்தேன்
குளம் திரும்பா விழிக் கோமானொடும் தொண்டர் கூட்டமுற
வளம் திரும்பா ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

88. ஆரணம் பூத்த அருள் கோமளக் கொடி அந்தரி பூந்
தோரணம் பூத்த எழில் ஒற்றியூர் மகிழ் சுந்தரி சற்
காரணம் பூத்த சிவை பார்ப்பதி நம் கவுரி என்னும்
வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை_மாணிக்கமே.

89. திரு_வல்லி ஏத்தும் அபிடேக_வல்லி எம் சென்னியிடை
வரு வல்லி கற்பக_வல்லி ஒண் பச்சை மணி_வல்லி எம்
கரு வல்லி நீக்கும் கருணாம்பக_வல்லி கண்கொள் ஒற்றி
மரு வல்லி என்று மறை தேர் வடிவுடை_மாணிக்கமே.

90. உடை என்ன ஒண் புலித்தோல்_உடையார் கண்டு உவக்கும் இள
நடை அன்னமே மலர்ப் பொன் முதலாம் பெண்கள் நாயகமே
படை அன்ன நீள் விழி மின் நேர் இடைப் பொன் பசுங்கிளியே
மடை மன்னும் நீர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

91. கற்பதும் கேட்பதும் எல்லாம் நின் அற்புதக் கஞ்ச_மலர்ப்
பொன்_பதம் காணும் பொருட்டு என எண்ணுவர் புண்ணியரே
சொல் பதமாய் அவைக்கு அப்புறமாய் நின்ற தூய்ச் சுடரே
மல் பதம் சேர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

92. நின்னால் எனக்கு உள எல்லா நலனும் நினை அடைந்த
என்னால் உனக்கு உளது என்னை கண்டாய் எமை ஈன்றவளே
முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான் கண் முழு மணியே
மன் நான்மறையின் முடிவே வடிவுடை_மாணிக்கமே.

93. நன்றே சிவநெறி நாடும் மெய்த் தொண்டர்க்கு நன்மை செய்து
நின்றே நின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈது
என்றே முடிகுவது இன்றே முடியில் இனிது கண்டாய்
மன்று ஏர் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

94. அத்தனை ஒற்றிக்கு இறைவனை அம்பலத்து ஆடுகின்ற
முத்தனைச் சேர்ந்த ஒண் முத்தே மதிய முக அமுதே
இத்தனை என்று அளவு ஏலாத குற்றம் இழைத்திடும் இ
மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை_மாணிக்கமே.

95. கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும் என்
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திரு_செவியில்
ஏறாத வண்ணம் என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின்
மாறாது அமர்ந்த மயிலே வடிவுடை_மாணிக்கமே.

96. ஓயா இடர்கொண்டு உலைவேனுக்கு அன்பர்க்கு உதவுதல் போல்
ஈயாவிடினும் ஓர் எள்ளளவேனும் இரங்கு கண்டாய்
சாயா அருள்தரும் தாயே எழில் ஒற்றித் தற்பரையே
மாயா நலம் அருள் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

97. பெரும் பேதையேன் சிறு வாழ்க்கைத் துயர் எனும் பேர் அலையில்
துரும்பே என அலைகின்றேன் புணை நின் துணை பதமே
கரும்பே கருணைக் கடலே அருள் முக்கனி நறவே
வரும் பேர் அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

98. காதரவால் உள் கலங்கி நின்றேன் நின் கடைக்கண் அருள்
ஆதரவால் மகிழ்கின்றேன் இனி உன் அடைக்கலமே
சீதரன் ஏத்தும் திருவொற்றி_நாதர்-தம் தேவி எழில்
மாதரசே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

99. பொன்_உடையார் அன்றிப் போற்றும் நல் கல்விப் பொருள்_உடையார்
என்_உடையார் என ஏசுகின்றார் இஃது என்னை அன்னே
மின்_உடையாய் மின்னில் துன் இடையாய் ஒற்றி மேவும் முக்கண்
மன்_உடையாய் என்னுடையாய் வடிவுடை_மாணிக்கமே.

100. பொய்விட்டிடாதவன் நெஞ்சகத்தேனைப் புலம்பும் வண்ணம்
கைவிட்டிடாது இன்னும் காப்பாய் அது நின் கடன் கரும்பே
மெய்விட்டிடார் உள் விளை இன்பமே ஒற்றி வித்தகமே
மை விட்டிடா விழி மானே வடிவுடை_மாணிக்கமே.

101. நேயானுகூல மனம்_உடையாய் இனி நீயும் என்றன்
தாய் ஆகில் யான் உன் தனையனும் ஆகில் என்றன் உளத்தில்
ஓயாது உறும் துயர் எல்லாம் தவிர்த்து அருள் ஒற்றியில் செவ்
வாய் ஆர் அமுத வடிவே வடிவுடை_மாணிக்கமே.

102. வாழி நின் சேவடி போற்றி நின் பூம்_பத வாரிசங்கள்
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர்
வாழி என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் நீ
வாழி என் ஆர் உயிர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

.