Vallapai Ganesar Pirasata Malai  Vallalar Song

திருவருட்பா

ஐந்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. திரு நெடுமால் அன்று ஆலிடை நினது சேவடித் துணை மலர்த் துகளான்
பெரு நெடு மேனி-தனில் படப் பாம்பின் பேர்_உரு அகன்றமை மறவேன்
கரு நெடும் கடலைக் கடத்து நல் துணையே கண்கள் மூன்று உடைய செங்கரும்பே
வரு நெடு மருப்பு ஒன்று இலகு வாரணமே வல்லபைக் கணேச மா மணியே

2. நளின மா மலர் வாழ் நான்முகத்து ஒருவன் நண்ணி நின் துணை அடி வழுத்திக்
களி நலன் உடன் இவ்வுலகெலாம் படைக்கக்க டைக்கணித்ததை உளம்மறவேன்
அளி நலன் உறு பேர்_ஆனந்தக் கடலே அரு_மருந்தே அருள் அமுதே
வளி நிறை உலகுக்கு ஒரு பெரும் துணையே வல்லபைக் கணேச மா மணியே

3. சீர் உருத்திரமூர்த்திகட்கு முத்தொழிலும் செய்து அருள் இறைமை தந்து அருளில்
பேர் உருத்திரம் கொண்டிடச் செயும் நினது பெருமையை நாள்-தொறும் மறவேன்
ஆர் உருத்திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மை எற்கு அருளிய அரசே
வார் உருத்திடு பூண் மணி முகக் கொங்கை வல்லபைக் கணேச மா மணியே

4. விண்ணவர் புகழும் மெய்கண்டநாதன் வித்தகக் கபிலன் ஆதியர்க்கே
கண் அருள்செயும் நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன்
தண் அருள்_கடலே அருள் சிவபோக சாரமே சராசர நிறைவே
வண்ண மா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேச மா மணியே

5. நாரையூர் நம்பி அமுது கொண்டு ஊட்ட நல் திருவாய்_மலர்ந்து அருளிச்
சீரை மேவுறச்செய்து அளித்திடும் நினது திரு_அருள் நாள்-தொறும் மறவேன்
தேரை ஊர் வாழ்வும் திரம் அல எனும் நல் திடம் எனக்கு அருளிய வாழ்வே
வாரை ஊர் முலையாள் மங்கை நாயகி எம் வல்லபைக் கணேச மா மணியே

6. கும்ப மா முனியின் கரக நீர் கவிழ்த்துக் குளிர் மலர் நந்தனம் காத்துச்
செம்பொன்_நாட்டு இறைவற்கு அருளிய நினது திரு_அருள் பெருமையை மறவேன்
நம்பனார்க்கு இனிய அருள் மகப் பேறே நல் குணத்தோர் பெரு வாழ்வே
வம்பு அறா மலர்த் தார் மழை முகில் கூந்தல் வல்லபைக் கணேச மா மணியே

7. அயன் தவத்து ஈன்ற சித்திபுத்திகளாம் அம்மையர் இருவரை மணந்தே
இயன்ற அண்டங்கள் வாழ்வுறச் செயும் நின் எழில் மணக்கோலத்தை மறவேன்
பயன் தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத்து எழு பரம்பரமே
வயன் தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேச மா மணியே

8. முன் அரும் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிது வீடு அடைய
இன் அருள் புரியும் நின் அருள் பெருமை இரவினும் பகலினும் மறவேன்
என் அரும் பொருளே என் உயிர்க்குயிரே என் அரசே என துறவே
மன் அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபைக் கணேச மா மணியே

9. துதி பெறும் காசி நகரிடத்து அனந்தம் தூய நல் உருவு கொண்டு ஆங்கண்
விதி பெறும் மனைகள்-தொறும் விருந்தினனாய் மேவிய கருணையை மறவேன்
நதி பெறும் சடிலப் பவள நல் குன்றே நான்மறை நாட அரு நலமே
மதி பெறும் உளத்தில் பதி பெறும் சிவமே வல்லபைக் கணேச மா மணியே

10. தடக்கை மா முகமும் முக்கணும் பவளச் சடிலமும் சதுர்ப் புயங்களும் கை
இடக்கை அங்குசமும் பாசமும் பதமும் இறைப் பொழுதேனும் யான் மறவேன்
விடக் களம் உடைய வித்தகப் பெருமான் மிக மகிழ்ந்திட அருள் பேறே
மட கொடி நங்கை மங்கை நாயகி எம் வல்லபைக் கணேச மா மணியே

11. பெருவயல் ஆறுமுகன் நகல் அமர்ந்து உன் பெருமைகள் பேசிடத் தினமும்
திரு வளர் மேன்மைத் திறம் உறச் சூழும் திரு_அருள் பெருமையை மறவேன்
மரு வளர் தெய்வக் கற்பக மலரே மனம் மொழி கடந்த வான் பொருளே
வரு மலை வல்லிக்கு ஒரு முதல் பேறே வல்லபைக் கணேச மா மணியே