Varampil Viyappu Vallalar Songs

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. பொன் புனை புயனும் அயனும் மற்றவரும்
புகல அரும் பெரிய ஓர் நிலையில்
இன்பு உரு ஆகி அருளொடும் விளங்கி
இயற்றலே ஆதி ஐந்தொழிலும்
தன் பொதுச் சமுகத்து ஐவர்கள் இயற்றத்
தனி அரசு இயற்றும் ஓர் தலைவன்
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் ஆனால்
அவன்றனை மறுப்பவர் யாரே.

2. மன்பதை வகுக்கும் பிரமர் நாரணர்கள்
மன் உருத்திரர்களே முதலா
ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்கு
உறு பெரும் தொழில் பல இயற்றி
இன்புறச் சிறிதே கடைக்கணித்து அருளி
இலங்கும் ஓர் இறைவன் இன்று அடியேன்
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் அந்தோ
அவன்றனை மறுப்பவர் யாரே.

3. தன் நிகர் இல்லாத் தலைவ என்று அரற்றித்
தனித்தனி மறைகள் ஆகமங்கள்
உன்னி நின்று ஓடி உணர்ந்துணர்ந்து உணரா
ஒரு தனிப் பெரும் பதி உவந்தே
புல் நிகர் இல்லாப் புலையனேன் பிழைகள்
பொறுத்து அருள் பூரண வடிவாய்
என் உளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ
எந்தையைத் தடுப்பவர் யாரே.

4. பால் வகை ஆணோ பெண்-கொலோ இருமை
பாலதோ பால் உறா அதுவோ
ஏல் வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
இயற்கையோ ஆதியின் இயல்போ
மேல் வகை யாதோ என மறை முடிகள்
விளம்பிட விளங்கும் ஓர் தலைவன்
மால் வகை மனத்தேன் உளக் குடில் புகுந்தான்
வள்ளலைத் தடுப்பவர் யாரே.

5. வரம் பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
வரு பர உணர்ச்சியும் மாட்டாப்
பரம்பர உணர்ச்சி-தானும் நின்று அறியாப்
பராபர உணர்ச்சியும் பற்றா
உரம் பெற உணர்வார் யார் எனப் பெரியர்
உரைத்திட ஓங்கும் ஓர் தலைவன்
கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான்
கடவுளைத் தடுப்பவர் யாரே.

6. படைத்திடல் முதல் ஐந்தொழில் புரிந்து இலங்கும்
பரம்பர ஒளி எலாம் அணுவில்
கிடைத்திடக் கீழ் மேல் நடு எனக் காட்டாக்
கிளர் ஒளியாய் ஒளிக்கு எல்லாம்
அடைத்த காரணமாய்க் காரணம் கடந்த
அருள்_பெரும்_ஜோதியாம் ஒருவன்
கடைத் தனிச் சிறியேன் உளம் புகுந்து அமர்ந்தான்
கடவுளைத் தடுப்பவர் யாரே.

7. அளவு எலாம் கடந்த பெரும் தலை அண்ட
அடுக்கு எலாம் அம்ம ஓர் அணுவின்
பிளவில் ஓர் கோடிக் கூற்றில் ஒன்று ஆகப்
பேச நின்று ஓங்கிய பெரியோன்
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பிக்
கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம்
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
வள்ளலைத் தடுப்பவர் யாரே.

8. உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
உள உயிர் முழுவதும் ஒருங்கே
கொள்ளைகொண்டிடினும் அணுத்துணை எனினும்
குறைபடாப் பெரும் கொடைத் தலைவன்
கள்ள நெஞ்சகத்தேன் பிழை எலாம் பொறுத்துக்
கருத்து எலாம் இனிது தந்து அருளித்
தள்ள அரும் திறத்து என் உள்ளகம் புகுந்தான்
தந்தையைத் தடுப்பவர் யாரே.

9. அறிந்தன அறிந்தாங்கு அறிந்தறிந்து அறியாது
ஐயகோ ஐயகோ அறிவின்
மறிந்தனம் அயர்ந்தேம் என மறை அனந்தம்
வாய் குழைந்து உரைத்துரைத்து உரையும்
முறிந்திட வாளா இருந்த என்று அறிஞர்
மொழியும் ஓர் தனிப் பெரும் தலைவன்
செறிந்து எனது உளத்தில் சேர்ந்தனன் அவன்றன்
திருவுளம் தடுப்பவர் யாரே.

10. கரு முதல் கருவாய்க் கருவினுள் கருவாய்க்
கரு எலாம் காட்டும் ஓர் கருவாய்க்
குரு முதல் குருவாய்க் குரு எலாம் கிடைத்த
கொள்கையாய்க் கொள்கையோடு அளவா
அரு முதல் அருவாய் அல்லவாய் அப்பால்
அருள்_பெரும்_ஜோதியாம் தலைவன்
மருவி என் உளத்தில் புகுந்தனன் அவன்றன்
வண்மையைத் தடுப்பவர் யாரே.