திருவருட்பா
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1.அவ்வவ் இடை வந்து அகற்றி அருள்தரலால்
எவ்வெவ் இடையூறும் எய்தல் இலம் தெவ்வர்-தமைக்
கன்றும் மத_மா முகமும் கண் மூன்றும் கொண்டு இருந்தது
ஒன்று அது நம் உள்ளம் உறைந்து
2.சொல்_பெறும் மெய்ஞ்ஞானச் சுயம் சோதியாம் தில்லைச்
சிற்சபையில் வாழ் தலைமைத் தெய்வமே நல் சிவையாம்
3.தாயின் உலகு அனைத்தும் தாங்கும் திருப்புலியூர்க்
கோயில் அமர்ந்த குண_குன்றமே மாயம் மிகும்
4.வாள்_களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ்
வேட்களம் உற்று ஓங்கும் விழு_பொருளே வாழ்க்கை மனை
5.நல் வாயில் எங்கும் நவமணி_குன்று ஓங்கும் திரு
நெல்வாயில் நின்று ஒளிரும் நீள் ஒளியே செல்வாய்த்
6.தெழிப்பால் ஐ வேலைத் திரை ஒலி போல் ஆர்க்கும்
கழிப்பாலை இன்பக் களிப்பே விழிப்பாலன்
7.கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதி தரும்
நல்லூர்ப் பெருமணம் வாழ் நல் நிலையே சொல்லும்
8.தயேந்திரர் உள்ளத் தடம் போல் இலங்கும்
மயேந்திரப்பள்ளி இன்ப வாழ்வே கயேந்திரனைக்
9.காயலுறாது அன்று வந்து காத்தோன் புகழ் முல்லை
வாயிலின் ஓங்கும் மணி_விளக்கே மேய
10.பலிக்கா ஊர்-தோறும் பதம் சேப்பச் சென்று
கலிக்காமூர் மேவும் கரும்பே வலிக் கால்_இல்
11.பாய்க்கு ஆடுகின்ற ஒரு பச்சை முகில் பரவும்
சாய்க்காடு மேவும் தடம் கடலே வாய்க்கு அமையச்
12.சொல்ல அல் நீச்சர் அங்கு தோய உம்பர் ஆம் பெருமைப்
பல்லவனீச்சரத்து எம் பாவனமே நல்லவர்கள்
13.கண் காட்டும் நெற்றிக் கடவுளே என்று தொழ
வெண்காட்டில் மேவுகின்ற மெய்ப்பொருளே தண் காட்டிக்
14.கார் காட்டித் தையலர்-தம் கண் காட்டிச் சோலைகள் சூழ்
சீர்காட்டுப்பள்ளிச் சிவ_கொழுந்தே பார் காட்டு
15.உருகா ஊர் எல்லாம் ஒளி நயக்க ஓங்கும்
குருகாவூர் வெள்ளடை எம் கோவே அருகாத
16.கார் காழ் இல் நெஞ்சக் கவுணியர்க்குப் போதம் அருள்
சீர்காழி ஞானத் திரவியமே ஓர் காழிப்
17.பாலற்கா அன்று பசும்பொன் தாளம் கொடுத்த
கோலக்கா மேவும் கொடையாளா கோலக் கா
18.உள் இருக்கும் புள் இருக்கும் ஓதும் புகழ் வாய்ந்த
புள்ளிருக்குவேளூர்ப் புரி சடையாய் கள் இருக்கும்
19.காவின் மருவும் கனமும் திசை மணக்கும்
கோவில் மருவு கண்ணார் கோயிலாய் மாவின்
20.இடை முடியின் தீம் கனி என்று எல்லில் முசுத் தாவும்
கடைமுடியின் மேவும் கருத்தா கொடை முடியா
21.நன்றி ஊர் என்று இந்த ஞாலம் எலாம் வாழ்த்துகின்ற
நின்றியூர் மேவும் நிலைமையனே ஒன்றிக்
22.கருப் புன் கூர் உள்ளக் கயவர் நயவாத்
திருப்புன்கூர் மேவும் சிவனே உருப் பொலிந்தே
23.ஈடு ஊர் இலாது உயர்ந்த ஏதுவினால் ஓங்கு திரு
நீடூர் இலங்கு நிழல் தருவே பீடு கொண்டு
24.மன்னி ஊர் எல்லாம் வணங்க வளம் கொண்ட
அன்னியூர் மேவும் அதிபதியே மன்னர் சுக
25.வாழ்வு இ குடிகள் அடி_மண் பூசலால் என்னும்
வேழ்விக்குடி அமர்ந்த வித்தகனே சூழ்வுற்றோர்
26.விண் எதிர்கொண்டு இந்திரன் போல் மேவி நெடுநாள் வாழப்
பண் எதிர்கொள்பாடிப் பரம்பொருளே நண் உ
27.வணம் சேர் இறைவன் மகிழ்ந்து வணங்கும்
மணஞ்சேரி நீங்கா மகிழ்வே மணம் சேர்ந்து
28.வார் அட்ட கொங்கை மலையாளொடும் கொறுக்கை
வீரட்டம் மேவும் வியன் நிறைவே ஓர் அட்ட
29.திக்கும் கதி நாட்டிச் சீர் கொள் திரு_தொண்டர் உளம்
ஒக்கும் கருப்பறியலூர் அரசே மிக்க திரு
30.மா வளரும் செந்தாமரை வளரும் செய் குரக்குக்
கா வளரும் இன்பக் கன சுகமே தாவு மயல்
31.காழ் கொள் இரு மனத்துக் கார்_இருள் நீத்தோர் மருவும்
வாழ்கொளிபுத்தூர் மணிச் சுடரே தாழ்வு அகற்ற
32.நண் இப் படிக்கு அரையர் நாள்-தோறும் வாழ்த்துகின்ற
மண்ணிப்படிக்கரை வாழ் மங்கலமே விண்ணினிடை
33.வாமாம் புலி ஊர் மலர்ச் சோலை சூழ்ந்து இலங்கும்
ஓமாம்புலியூர் வாழ் உத்தமமே நேம் ஆர்ந்த
34.வான்_நாட்டும் உள்ளூர் மருவுகின்றோர் போற்று திருக்
கானாட்டு முள்ளூர்க் கலைக் கடலே மேல்_நாட்டும்
35.தேரை ஊர்ச் செங்கதிர் போல் செம்மணிகள் நின்று இலங்கும்
நாரையூர் மேவும் நடு நிலையே பாரில்
36.உடம்பு ஊர் பவத்தை ஒழித்து அருளும் மேன்மைக்
கடம்பூர் வாழ் என் இரண்டு கண்ணே தடம் பொழிலில்
37.கொந்து அணவும் கார்_குழலார் கோல மயில் போல் உலவும்
பந்தணநல்லூர்ப் பசுபதியே கந்த மலர்
38.அஞ்சன் ஊர் செய்த தவத்தால் அப் பெயர்கொண்ட
கஞ்சனூர் வாழும் என்றன் கண்மணியே அஞ்சுகங்கள்
39.நாடிக் கா உள்ளே நமச்சிவாயம் புகலும்.
கோடிக்கா மேவும் குளிர் மதியே ஓடிக்
40.கருமங்கல் அ குடியில் காண்டும் என ஓதும்
திருமங்கலக்குடியில் தேனே தரும
41.மனம் தாள்_மலரை மருவுவிப்போர் வாழும்
பனந்தாளில் பால் உகந்த பாகே தினம் தாளில்
42.சூழ் திருவாய்ப் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர்
வாழ் திருவாய்ப்பாடி இன்ப_வாரிதியே ஏழ் புவிக்குள்
43.வாய்ஞ்ஞல் ஊர் ஈதே மருவ என வானவர் சேர்
சேய்ஞ்ஞலூர் இன்பச் செழும் கனியே வாஞ்சையுறும்
44.சீவன் குடியுற இச் சீர் நகர் ஒன்றே எனும் சீர்த்
தேவன்குடி மகிழ்ந்த தெள் அமுதே ஓவு இல்
45.மயல் ஊர் மனம் போல் வயலில் கயல் ஊர்
வியலூர் சிவானந்த வெற்பே அயல் ஆம்பல்
46.மட்டை ஊர் வண்டு இனங்கள் வாய்ந்து விருந்து கொளும்
கொட்டையூர் உள் கிளரும் கோமளமே இட்டமுடன்
47.என் நம்பர் என் அம்பர் என்று அயன் மால் வாது கொள
இன்னம்பர் மேவிநின்ற என் உறவே முன் நம்பு
48.மாற்கும் புறம்பு இயலா வாய்மை அருள்செய்ய உளம்
ஏற்கும் புறம்பியம் வாழ் என் உயிரே மால் கருவின்-
49.கண் விசையம் அங்கைக் கனி போல் பெறத் தொண்டர்
எண் விசையமங்கையில் வாழ் என் குருவே மண் உலகில்
50.வைகா ஊர் நம் பொருட்டான் வைகியது என்று அன்பர் தொழும்
வைகாவூர் மேவிய என் வாழ்_முதலே உய்யும் வகைக்
51.காத்தும் படைத்தும் கலைத்தும் நிற்போர் நாள்-தோறும்
ஏத்தும் குரங்காட்டின் என் நட்பே மாத் தழைத்த
52.வண் பழம் நத்தின் குவி வெண் வாயில் தேன் வாக்கியிட
உண் பழனத்து என்றன் உயிர்க்குயிரே பண்பு அகன்ற
53.வெய் ஆற்றில் நின்றவரை மெய் ஆற்றின் ஏற்று திரு
வையாற்றின் மேவிய என் ஆதரவே பொய் ஆற்றி
54.மெய்த் தானம் நின்றோர் வெளித் தானம் மேவு திரு
நெய்த்தானத்துள் அமர்ந்த நித்தியமே மைத்த
55.கரும் புலி ஊர்க் காளையொடும் கண்ணோட்டம் கொள்ளும்
பெரும்புலியூர் வாழ் கருணைப் பேறே விரும்பி நிதம்
56.பொன்னும் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்து அருளை
மன்னும் மழபாடி வச்சிரமே துன்னுகின்ற
57.நாய்க்கும் கடையேன் நவை தீர நல் கருணை
வாய்க்கும் பழுவூர் மரகதமே தேய்க் களங்கு_இல்
58.வான் ஊர் மதி போல் மணியால் குமுத_மலர்
கானூர் உயர் தங்கக்கட்டியே நானூறு
59.கோலம் துறை கொண்ட கோவை அருள் கோவை மகிழ்
ஆலந்துறையின் அணி முத்தே நீலம் கொள்
60.தேம் துறையில் அன்னம் மகிழ் சேக்கை பல நிலவும்
மாந்துறை வாழ் மாணிக்க மா மலையே ஏந்து அறிவாம்
61.நூல் துறையில் நின்றவர்கள் நோக்கி மகிழ்வு எய்து திருப்
பாற்றுறையில் நின்ற பரஞ்சுடரே நால்_திசையும்
62.தேனைக் கா உள் மலர்கள் தேம் கடல் என்று ஆக்குவிக்கும்
ஆனைக்கா மேவி அமர் அற்புதமே மானைப் போல்
63.மை ஞீல வாள் கண் மலராள் மருவு திருப்
பைஞ்ஞீலி மேவும் பரம்பரமே எஞ்ஞான்றும்
64.ஏச்சு இரா மங்கலத்தோடு இன்பம் தரும் பாச்சி
லாச்சிராமம் சேர் அருள் நிலையே நீச்சு அறியாது
65.ஆங்கு ஓய் மலைப் பிறவி ஆர்கலிக்கு ஓர் வார் கலமாம்
ஈங்கோய்மலை வாழ் இலஞ்சியமே ஓங்காது
66.நாள் போக்கி நிற்கும் நவை_உடையார் நாட அரிதாம்
வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே கோள் போக்கி
67.நில்லுங்கள் தம்ப நெறி போல் எனப் பூவை
சொல்லும் கடம்பந்துறை நிறைவே மல்லலொடு
68.வாழ் உம்பர் ஆய்த் துறை வான் மன்னவரும் மன்னவரும்
சூழும் பராய்த்துறை வாழ் தோன்றலே கூழும் பல்
69.நல் குடியும் ஓங்கி நலம் பெருகும் மேன்மை திருக்
கற்குடியில் சந்தான கற்பகமே சிற்சுகத்தார்
70.பின் சநநம் இல்லாப் பெருமை தரும் உறையூர்ச்
சற்சனர் சேர் மூக்கீச்சரத்து அணியே மல் செய்
71.அரா_பள்ளி மேவும் அவன் நின்று வாழ்த்தும்
சிராப்பள்ளி ஞானத் தெளிவே இராப் பள்ளி
72.நின்று எழல் மெய் அன்று எனவே நேர்ந்து உலகு வாழ்த்துகின்ற
நன்று எறும்பியூர் இலங்கு நல் நெறியே துன்று கயல்_கண்ணார்
73.நெடும் களத்தைக் கட்டு அழித்த மெய்_தவர் சூழ்
தண் ஆர் நெடுங்கள மெய்த் தாரகமே எண்ணார்
74.தருக்கு ஆள் துப்பு அள்ளித் தகை கொண்டோர் சூழும்
திருக்காட்டுப்பள்ளியில் வாழ் தேவே மருக் காட்டும்
75.நீலம் பொழிற்குள் நிறை தடங்கட்கு ஏர் காட்டும்
ஆலம்பொழில் சிவயோகப் பயனே சீலம் நிறைவு
76.ஆம் துருத்தி கொண்டு உள் அனல் எழுப்புவோர் புகழும்
பூந்துருத்தி மேவு சிவ புண்ணியமே காந்த அருவத்
77.தண்டி ஊர் போற்றும் தகை காசிக்-கண் செய்து
கண்டியூர் வாழும் களைகண்ணே கொண்டு இயல்பின்
78.வேற்றுத் துறையுள் விரவாதவர் புகழும்
சோற்றுத்துறையுள் சுக வளமே ஆற்றல் இலாத்
79.தீது இக் குடி என்று செப்பப்படார் மருவும்
வேதிக்குடி இன்ப_வெள்ளமே கோது இயலும்
80.வன் குடித் திட்டை மருவார் மருவு திரு_
தென்குடித்திட்டைச் சிவ பதமே நன்கு உடைய
81.உள்ளம் மங்கைமார் மேல் உறுத்தாதவர் புகழும்
புள்ளமங்கை வாழ் பரம போகமே கள்ளம் இல் அஞ்சு_
82.அக்கரப் பள்ளி-தனில் தாம் பயின்ற மைந்தர்கள் சூழ்
சக்கரப்பள்ளி-தனில் தண் அளியே மிக்க
83.அருகா ஊர் சூழ்ந்தே அழகுபெற ஓங்கும்
கருகாவூர் இன்பக் கதியே முருகு ஆர்ந்த
84.சோலைத் துறையில் சுகம் சிவ_நூல் வாசிக்கும்
பாலைத்துறையின் பரிமளமே சீலத்தர்
85.சொல் ஊர் அடி அப்பர் தூய முடி மேல் வைத்த
நல்லூர் அமர்ந்த நடு நாயகமே மல் ஆர்ந்த
86.மா ஊர் இரவியின் பொன் வையம் அளவும் சிகரி
ஆவூரில் உற்ற எங்கள் ஆண்தகையே ஓவாது
87.சித்தி முற்ற யோகம் செழும் பொழிலில் பூவை செயும்
சத்திமுற்றம் மேவும் சதாசிவமே பத்தி_உற்றோர்
88.முள் தீச் சுரத்தின் முயலா வகை அருளும்
பட்டீச்சரத்து எம் பராபரமே துட்ட மயல்
89.தீங்கு விழையார்-தமை வான் சென்று அமரச்செய்விக்க
ஓங்கு பழையாறையில் என் உள் உவப்பே பாங்குபெற
90.ஆர்ந்த வட_இலையான் அன்னத்தான் போற்றி நிதம்
சார்ந்த வடதளி வாழ் தற்பரமே சேர்ந்த
91.மலம் சுழிகின்ற மனத்தர்க்கு அரிதாம்
வலஞ்சுழி வாழ் பொன்_மலையே நிலம் சுழியாது
92.ஓணத்தில் வந்தோன் உடன் துதித்து வாழ் கும்ப
கோணத்தில் தெய்வக் குல_கொழுந்தே மாணுற்றோர்
93.காழ்க் கோட்டம் நீங்கக் கருதும் குடமூக்கில்
கீழ்க்கோட்டம் மேவும் அன்பர் கேண்மையே வாழ்க் கோட்டத்
94.தேர் ஓணம் மட்டும் திகழ் குடந்தை மட்டும் இன்றிக்
காரோணம் மட்டும் கமழ் மலரே சீர் ஓங்கும்
95.யோகீச்சுரர் நின்று வந்து வணங்கு திரு
நாகீச்சுரம் ஓங்கும் நம் கனிவே ஓகை உளம்
96.தேக்கும் வரகுணனாம் தென்னவன்-கண் சூழ் பழியைப்
போக்கும் இடைமருதில் பூரணமே நீக்கம் இலா
97.நன்கு உரம் காணும் நடையோர் அடைகின்ற
தென்குரங்காடுதுறைச் செம்மலே புன் குரம்பை
98.ஏலக் குடிபுகுந்த எம்மனோர்க்கு உண்மை தரு
நீலக்குடி இலங்கு நிட்களமே ஞாலத்து
99.நீள் தக்கோர் நாளும் நினைந்து ஏத்திடும் வைகல்
மாடக்கோயிற்குள் மதுரமே பாடச் சீர்
100.வல்ல தமிழ்ப் புலவர் மன்னி வணங்கு திரு
நல்லம் மகிழ் இன்ப நவ வடிவே இல்ல மயல்
101.ஆழம் பங்கு என்ன அறிந்தோர் செறிந்து ஏத்தும்
கோழம்பம் வாழ் கருணைக் கொண்டலே வீழும் பொய்
102.தீரா வடு_உடையார் சேர்தற்கு அரும் தெய்வச்
சீர் ஆவடுதுறை எம் செல்வமே பேராக்
103.கருத் திருத்தி ஏத்தும் கருத்தர்க்கு அருள்செய்
திருத்துருத்தி இன்பச் செழிப்பே வருத்து மயல்
104.நாளும் எழுந்து ஊர் நவை அறுக்கும் அன்பர் உள்ளம்
நீளும் அழுந்தூர் நிறை தடமே வேள் இமையோர்
105.வாயூரத் தேமா மலர் சொரிந்து வாழ்த்துகின்ற
மாயூரத்து அன்பர் மனோரதமே தேயா
106.வள நகர் என்று எவ்வுலகும் வாழ்த்தப்படும் சீர்
விளநகர் வாழ் எங்கள் விருந்தே இளமைச்
107.செறியல் ஊர் கூந்தல் திரு_அனையார் ஆடும்
பறியலூர் வாழ் மெய்ப் பரமே நெறி கொண்டே
108.அன்பு அள்ளி ஓங்கும் அறிவு_உடையோர் வாழ்த்தும் செம்
பொன்பள்ளி வாழ் ஞான போதமே இன்பு உள்ளித்
109.தெள்ளியார் போற்றித் திகழும் திருநன்னிப்
பள்ளி ஆர்ந்து ஓங்கும் பரசிவமே எள்ளுறு நோய்
110.ஏய் அவலம் புரத்தை எண்ணாமல் எண்ணுகின்றோர்
மேய வலம்புரத்து மேதகவே தூய கொடி
111.அங்கு ஆடு கோபுரம் வான் ஆற்று ஆடுகின்ற தலைச்
சங்காடு மேவும் சயம்புவே பொங்கும் இருள்
112.கூறு திரு ஆக்கு ஊர் கொடுப்பன போல் சூழ்ந்து மதில்
வீறு திரு_ஆக்கூர் விளக்கமே மாறு அகற்றி
113.நன்கு அடை ஊர் பற்பலவும் நன்றி மறவாது ஏத்தும்
தென்கடையூர் ஆனந்தத் தேறலே வன்மை இலாச்
114.சொல் கடவி மேலோர் துதித்தல் ஒழியாது ஓங்கும்
நல் கடவூர் வீரட்ட நாயகனே வற்கடத்தும்
115.வாட்டக் குடி சற்றும் வாய்ப்பதே இல்லை எனும்
வேட்டக்குடி மேவும் மேலவனே நாட்டமுற்ற
116.வாக்கு தெளிச்சு ஏர் இ மா தவத்தர்க்கு இன்ப நலம்
ஆக்கும் தெளிச்சேரி அங்கணனே நீக்கும்
117.கரும புரத்தில் கலவாது அருள்செய்
தருமபுரம் செய் தவமே இருமையினும்
118.எள் ஆற்றின் மேவாத ஏற்பு_உடையோர் சூழ்ந்து இறைஞ்சும்
நள்ளாற்றின் மேவிய என் நல் துணையே தெள் ஆற்றின்
119.நீள் தாறு கொண்டு அரம்பை நின்று கவின் காட்டும்
கோட்டாறு மேவும் குளிர் துறையே கூட்டாக்
120.கரு வம்பர்-தம்மைக் கலவாத மேன்மைத்
திரு_அம்பர் ஞானத் திரட்டே ஒருவந்தம்
121.மா காளம் கொள்ள மதனைத் துரத்துகின்ற
மாகாளாத்து அன்பர் மனோலயமே யோகு ஆளக்
122.காயச் சூர் விட்டுக் கதி சேர வேட்டவர் சூழ்
மீயச்சூர் தண் என்னும் வெள் நெருப்பே மாயக்
123.களம் கோயில் நெஞ்சக் கயவர் மருவா
இளங்கோயில் ஞான இனிப்பே வளம் கோவை
124.நாடும் திலத நயப் புலவர் நாள்-தோறும்
பாடும் திலதைப் பதி நிதியே ஆடு மயில்
125.காம்பு உரம் கொள் தோளியர் போல் காவில் பயில்கின்ற
பாம்புரம் கொள் உண்மைப் பரம்பொருளே ஆம் புவனம்
126.துன்னும் பெரும் குடிகள் சூழ்ந்து வலம்செய்து உவகை
மன்னும் சிறுகுடி ஆன்மார்த்தமே முன் அரசும்
127.காழி மிழலையரும் கண்டு தொழக் காசு அளித்த
வீழிமிழலை விராட்டு உருவே ஊழி-தொறும்
128.மன்னி ஊர் மால் விடையாய் வானவா என்று தொழ
வன்னியூர் வாழு மணி_கண்டா இ நிமிடம்
129.சிந்தும் கருவலியின் திண்மை என்று தேர்ந்தவர்கள்
முந்தும் கருவிலி வாழ் முக்கண்ணா மந்தணத்தைக்
130.காணும் அரும் துறை இக் காமர் தலம் என்று எவரும்
பேணு பெருந்துறையில் பெம்மானே ஏணுடன் கா
131.ஈட்டும் பெரு நறை ஆறு என்ன வயல் ஓடி
நாட்டும் பெருநறையூர் நம்பனே காட்டும்
132.பரிசில் கரைப்புற்றோர் பாங்கு பெற ஓங்கும்
அரிசிற்கரை_புத்தூரானே தரிசனத்து எக்
133.காலும் சிவபுரத்தைக் காதலித்தோர்-தங்கள் துதி
ஏலும் சிவபுரத்தில் எம்மானே மாலும் கொள்
134.வெப்பும் கலைய நல்லோர் மென் மதுரச் சொல்_மாலை
செப்பும் கலயநல்லூர்ச் சின்மயனே செப்பமுடன்
135.ஓங்கும் திரு_தொண்டர் உள் குளிர நல் அருளால்
தாங்கும் கருக்குடி வாழ் சங்கரனே ஆம் ககனம்
136.தாம் சியத்தை வேங்கைத் தலையால் தடுக்கின்ற
வாஞ்சியத்தின் மேவும் மறையோனே ஆஞ்சி இலாது
137.இ நிலத்தும் வான் ஆதி எந்நிலத்தும் ஓங்கும் பெரு
நன்னிலத்து வாழ் ஞான நாடகனே மன்னும் மலர்
138.வண்டு ஈ சுரம் பாடி வார் மது உண்டு உள் களிக்கும்
கொண்டீச்சுரத்து அமர்ந்த கோமானே கண்டு ஈச
139.நண்பன் ஐ ஊரன் புகழும் நம்ப என உம்பர் தொழத்
தண் பனையூர் மேவும் சடாதரனே பண்புடனே
140.எற்குள் தியானம் கொண்டு இருக்க மகிழ்ந்து அளித்த
விற்குடியின் வீரட்டம் மேயவனே சொல் கொடிய
141.வன் புகலா நெஞ்சின் மருவும் ஒரு தகைமைத்
தென் புகலூர் வாழ் மகாதேவனே இன்ப மறை
142.அர்த்தமா நீக்க அரிய ஆதாரம் ஆகி நின்ற
வர்த்தமாநேச்சரத்து வாய்ந்தவனே மித்தையுற்ற
143.காமனது ஈசம் கெடவே கண் பார்த்து அருள்செய்த
ராமனது ஈசம் பெறும் நிராமயனே தோம் உள்
144.மயல் தூர் பறித்த மனத்தில் விளைந்த
பயற்றூர் திசை அம்பரனே இயற்றும் சீர்
145.ஆச்சிரம் மேவும் செங்காட்டங்குடியின் அம் கணப
தீச்சரம் வாழும் சந்த்ரசேகரனே ஏச்சு அகல
146.விண் மருவினோனை விடம் நீக்க நல் அருள்செய்
வண் மருகல் மாணிக்க வண்ணனே திண்மை கொண்ட
147.மாத் தமம் கை உள்ளம் மருவிப் பிரியாத
சாத்தமங்கைக் கங்கைச் சடா_முடியோய் தூத் தகைய
148.பாகைக் கார் என்னும் பணி_மொழியார் வாழ்த்து ஓவா
நாகைக்காரோணம் நயந்தோனே ஓகை அற
149.விக்கல் வருங்கால் விடாய் தீர்த்து உலகிடை நீ
சிக்கல் எனும் சிக்கல் திறலோனே மிக்க மினார்
150.வாள் ஊர் தடம் கண் வயல் காட்டி ஓங்கும் கீழ்
வேளூரில் செம் கண் விடையோனே நீள் உவகைப்
151.பா ஊர் இசையின் பயன் சுவையின் பாங்கு உடைய
தேவூர் வளர் தேவதேவனே பூவினிடை
152.இக் கூடல் மைந்த இனிக் கூடல் என்று பள்ளி
முக்கூடல் மேவி அமர் முன்னவனே தக்க நெடும்
153.தேர் ஊர் அணி வீதிச் சீர் ஊர் மணி மாட
ஆரூரில் எங்கள் அரு_மருந்தே நீர் ஊர்ந்த
154.கார் ஊர் பொழிலும் கனி ஈந்து இளைப்பு அகற்றும்
ஆரூர் அரனெறி வேளாண்மையே ஏர் ஆர்ந்த
155.மண் மண்டலிகர் மருவும் ஆரூர்ப் பரவை
யுள் மண்தளி எம் உடைமையே திண்மைக்
156.களமர் மகிழக் கடைசியர் பாடும்
விளமர் கொளும் எம் விருப்பே வளமை
157.எருக்கு அரவு ஈரம் சேர் எழில் வேணி கொண்டு
திருக்கரவீரம் சேர் சிறப்பே உருக்க
158.வரு வேள் ஊர் மா எல்லாம் மா ஏறும் சோலைப்
பெருவேளூர் இன்பப் பெருக்கே கருமை
159.மிலை ஆலம் காட்டும் மிடற்றாய் என்று ஏத்தும்
தலையாலங்காட்டுத் தகவே நிலை கொள்
160.தட வாயில் வெண் மணிகள் சங்கங்கள் ஈனும்
குடவாயில் அன்பர் குறிப்பே மடவாட்கு ஓர்
161.கூறை உவந்து அளித்த கோவே என்று அன்பர் தொழச்
சேறை உவந்து இருந்த சிற்பரமே வேறுபடாப்
162.பால் ஊர் நிலவில் பணிலங்கள் தண் கதிர் செய்
நாலூரில் அன்பர் பெறும் நல் நயமே மேல் ஊரும்
163.நோய்க் கரை உள் செய்யாத நோன்மையோர் சூழ்ந்த கடு
வாய்க்கரையுள் மேவுகின்ற வண்மையே வாய்த்த
164.பெரும் பூகம் தெங்கின் பிறங்க வளம் கொள்ளும்
இரும்பூளை மேவி இருந்தோய் விரும்பும்
165.விரதப் பெரும் பாழி விண்ணவர்கள் ஏத்தும்
அரதைப் பெரும்பாழி ஆர்ந்தோய் சரதத்தால்
166.ஏதும் அவண் இவண் என்று எண்ணாதவர் இறைஞ்சி
ஓதும் அவளிவள் நல்லூர்_உடையோய் கோது அகன்ற
167.நீட்டும் சுருதி நியமத்தோர்க்கு இன் அருளை
நீட்டும் பரிதி நியமத்தோய் காட்டிய நம்
168.தேவன் ஊர் என்று திசைமுகன் மால் வாழ்த்துகின்ற
பூவனூர் மேவும் புகழ்_உடையோய் பூ_உலகாம்
169.ஈங்கும் பாதாளம் முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும்
தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய் ஓங்கு புத்தி
170.மான்கள் அரில் ஓட்டி மகிழ்வோடு இருந்து ஏத்தும்
வான் களரில் வாழும் மறை முடிபே மேன்மை தரும்
171.முற்று ஏமம் வாய்ந்த முனிவர் தினம் பரவும்
சிற்றேமம் வாய்ந்த செழும் கதிரே கற்றவர்கள்
172.எங்கும் உசாத்தானம் இரும் கழகம் மன்றம் முதல்
தங்கும் உசாத்தானத் தனி முதலே பொங்கு பவ
173.அல்லல் இடும் பாவு அநத்தம் அட்டு ஒளிசெய்கின்ற திரு
மல்லல் இடும்பாவனத்து மாட்சிமையே தொல்லைப்
174.படிக்குள் நோவாத பண்பு_உடையோர் வாழ்த்தும்
கடிக்குளத்து அன்பர் களிப்பே கடிக் குளத்தின்
175.வண்டு அலைக்கத் தேன் அலரின் வார்ந்து ஓர் தடம் ஆக்கும்
தண்டலைக்குள் நீள் நெறிச் சிந்தாமணியே கொண்டல் என
176.மன் கோட்டு ஊர் சோலை வளர் கோட்டு ஊர் தண் பழன
தென்கோட்டூர் தேவ சிகாமணியே தென் கூட்டிப்
177.போய் வண்டு உறை தடமும் பூம் பொழிலும் சூழ்ந்து அமரர்
ஆய் வெண்துறை மாசு இலா மணியே தோய்வுண்ட
178.கள்ளம் பூதாதி நிலை கண்டு உணர்வு கொண்டவர் சூழ்
கொள்ளம்பூதூர் வான் குல மணியே வெள்ளிடை வான்
179.வாம் பேர் எயில் சூழ்ந்த மாண்பால் திரு_நாமம்
ஆம் பேரெயில் ஒப்பு இலா மணியே தாம் பேரா
180.வீட்டில் அன்பர் ஆனந்தம் மேவச்செயும் கொள்ளிக்
காட்டில் அமர்ந்த என் கண் காட்சியே நீட்டும் ஒளி
181.யாம் கூர் இலை வேலவன் ஆதியர் சூழத்
தேங்கூரில் வாழ் தேவ சிங்கமே ஓங்கு மலை
182.வல்லிக்கு ஆதார மணிப் புய என்று அன்பர் தொழ
நெல்லிக்கா வாழ் மெய் நியமமே எல் அல்-கண்
183.சேட்டு இயத்தானே தெரிந்து சுரர் வந்து ஏத்தும்
நாட்டியத்தான்குடி வாழ் நல் இனமே நாட்டும் ஒரு
184.நூல் தாயில் அன்பர்-தமை நோக்கி அருள்செய் திருக்
காறாயில் மேலோர் கடைப்பிடியே வீறு ஆகும்
185.இன்றாப் பூர்வம் தொட்டு இருந்தது இ ஊர் என்ன உயர்
கன்றாப்பூர் பஞ்சாக்கரப் பொருளே துன்று ஆசை
186.வெய்ய வலி வலத்தை வீட்டி அன்பர்க்கு இன் அருள்செய்
துய்ய வலிவலத்துச் சொல் முடிபே நையும் மனம்
187.மைச் சினத்தை விட்டோர் மனத்தில் சுவை கொடுத்துக்
கைச்சினத்தின் உள் கரையாக் கற்கண்டே நெல் சுமக்க
188.ஆள் இலை என்று ஆரூரனார் துதிக்கத் தந்து அருளும்
கோளிலியின் அன்பர் குலம் கொள் உவப்பே நீள் உலகம்
189.காய் மூர்க்கரேனும் கருதில் கதி கொடுக்கும்
வாய்மூர்க்கு அமைந்த மறைக் கொழுந்தே நேயம் உணத்
190.தேடு எலியை மூவுலகும் தேர்ந்து தொழச்செய்து அருளும்
ஈடு இல் மறைக்காட்டில் என்றன் எய்ப்பு இல் வைப்பே நாடும் எனை
191.நின் அகத்து யான் பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட
தென் அகத்தியான்பள்ளிச் செம்பொன்னே தொல்_நெறியோர்
192.நாடிக் குழக நலம் அருள் என்று ஏத்துகின்ற
கோடிக் குழகர் அருள் கோலமே நீடு உலகில்
193.நாட்டும் புகழ் ஈழ நாட்டில் பவ இருளை
வாட்டும் திருக்கோண மா மலையாய் வேட்டு உலகின்
194.மூதீச்சரம் என்று முன்னோர் வணங்கு திருக்
கேதீச்சரத்தில் கிளர்கின்றோய் ஓதுகின்றோர்-
195.பால் அவாய் நிற்கும் பரையோடு வாழ் மதுரை
ஆலவாய்ச் சொக்கழகு ஆனந்தமே சீலர்-தமைக்
196.காப்பன் ஊரு இல்லாக் கருணையால் என்று புகும்
ஆப்பனூர் மேவு சதானந்தமே மாப் புலவர்
197.ஞான பரம் குன்றம் என நண்ணி மகிழ் கூர்ந்து ஏத்த
வான பரங்குன்றில் இன்பானந்தமே வானவர்_கோன்
198.தேம் ஏடகத்தனொடு சீதரனும் வாழ்த்தும் சீ
ராம் ஏடகத்து அறிவானந்தமே பூ மீதில்
199.நல் தவரும் கற்ற நவசித்தரும் வாழ்த்தி
உற்ற கொடுங்குன்றத்து எம் ஊதியமே முற்று கதி
200.இத் தூரம் அன்றி இனித் தூரம் இல்லை எனப்
புத்தூர் வரும் அடியார் பூரிப்பே சித்து ஆய்ந்து
201.நாம் ஈசர் ஆகும் நலம் தரும் என்று உம்பர் தொழும்
ராமீசம் வாழ் சீவ ரத்தினமே பூ மீது
202.நீள் தானை சூழும் நில மன்னர் வாழ்த்து திரு
வாடானை மேவு கருணாகரமே சேடான
203.வானப் பேர்_ஆற்றை மதியை முடி சூடும்
கானப்பேர் ஆனந்தக் காளையே மோனர் உளே
204.பூ வணமும் பூ மணமும் போல அமர்ந்து திருப்
பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே தீ வணத்தில்
205.கண் சுழியல் என்று கருணை அளித்து என் உளம் சேர்
தண் சுழியல் வாழ் சீவ சாக்ஷியே பண் செழிப்பக்
206.கற்றால் அங்கு உண்மைக் கதி தரும் என்று அற்றவர் சூழ்
குற்றாலத்து அன்பர் குதுகலிப்பே பொன் தாம
207.நல் வேலி சூழ்ந்து நயன் பெறும் ஒண் செஞ்சாலி
நெல்வேலி உண்மை நிலயமே வல் வேலை
208.நஞ்சைக் களத்து வைத்த நாத எனத் தொண்டர் தொழ
அஞ்சைக்களம் சேர் அருவுருவே நெஞ்சு அடக்கி
209.ஆன்று நிறைந்தோர்க்கு அருள் அளிக்கும் புக்கொளியூர்த்
தோன்றும் அவிநாசிச் சுயம்புவே சான்றவர்கள்-
210.தம் உருகு அன்பு ஊண் உள் தலம் போல வாழ்கின்ற
எம் முருகன் பூண்டி இரு_நிதியே செம்மையுடன்
211.அம் குன்றாது ஓங்கும் அணி கொள் கொடி மாடச்
செங்குன்றூர் வாழும் சஞ்சீவியே தங்கு மன
212.வஞ்சம் ஆக்கு ஊடல் வரையாதவர் சூழும்
வெஞ்சமாக்கூடல் விரி சுடரே துஞ்சல் எனும்
213.இன்னல் அகற்ற இலங்கு பவானிக்கூடல்
என்னும் நணாவினிடை இன் இசையே துன்னி அருள்
214.வேண்டிக்கொடு முடியா மேன்மை பெறு மா தவர் சூழ்
பாண்டிக்கொடுமுடியில் பண் மயமே தீண்ட அரிய
215.வெம் கருவூர் வஞ்ச வினை தீர்த்தவர் சூழ்ந்த
நம் கருவூர்ச் செய்யுள் நவரசமே தங்கு அளற்றின்
216.தீங்கு ஆர் பிற தெய்வத் தீ குழியில் வீழ்ந்தவரைத்
தாங்கா அரத்துறையில் தாணுவே பூம் குழலார்
217.வீங்கு ஆனை மாடம் சேர் விண் என்று அகல் கடந்தைத்
தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே நீங்காது
218.நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_
கூடலை ஆற்றூர்க் குண நிதியே நாடிய வான்
219.அம்புலி ஊர் சோலை அணி வயல்கள் ஓங்கு எருக்கத்
தம்புலியூர் வேத சமரசமே நம்பு விடை
220.ஆங்கு உந்தினை ஊர்ந்து அருளாய் என்று அன்பர் தொழுது
ஓங்கும் தினையூர் உமாபதியே தீங்கு உறும் ஒன்
221.னார் புரத்தை வெண்_நகைத் தீயால் அழித்தாய் என்று தொழச்
சோபுரத்தின் வாழ் ஞான தீவகமே வார் கெடிலச்
222.செல் நதி கையோங்கித் திலதவதியார் பரவும்
மன் அதிகை வீரட்ட மா தவமே பன்ன அரிதாம்
223.ஆவல் ஊர் எங்களுடை ஆரூரன் ஆர் ஊராம்
நாவலூர் ஞானியர் உள் ஞாபகமே தேவு அகமாம்
224.மன்றம் அமர்ந்த வளம் போல் திகழ்ந்த முது
குன்றம் அமர்ந்த அருள் கொள்கையே அன்று அகத்தின்
225.நல் வெண்ணெய் உண்டு ஒளித்த நாரணன் வந்து ஏத்துகின்ற
நெல்வெண்ணெய் மேவு சிவ நிட்டையே சொல் வண்ணம்
226.நாவலர் போற்றி நலம் பெறவே ஓங்கு திருக்
கோவலூர் வீரட்டம் கொள் பரிசே ஆவலர் மா
227.தேவா இறைவா சிவனே எனும் முழக்கம்
ஓவா அறையணி நல்லூர் உயர்வே தாவாக்
228.கடை ஆற்றின் அன்பர்-தமைக் கல் ஆற்றின் நீக்கும்
இடையாற்றின் வாழ் நல் இயல்பே இடையாது
229.சொல் ஊரன்-தன்னைத் தொழும்புகொளும் சீர் வெண்ணெய்
நல்லூர் அருள் துறையின் நல் பயனே மல் ஆர்ந்து
230.மாசு உந்து உறையூர் மகிபன் முதல் மூவரும் சீர்
பேசும் துறையூர்ப் பிறை_சூடீ நேசம் உறவு
231.ஏற்றா வடு கூர் இதயத்தினார்க்கு என்றும்
தோற்றா வடுகூர்ச் சுயம் சுடரே ஆற்ற மயல்
232.காணிக் குழி வீழ் கடையர்க்குக் காண்பு அரிய
மாணிக்குழி வாழ் மகத்துவமே மாண் உற்ற
233.பூப் பாதிரி கொன்றை புன்னை முதல் சூழ்ந்து இலங்கும்
ஏர்ப் பாதிரிப்புலியூர் ஏந்தலே சீர்ப் பொலியப்
234.பண்டு ஈச்சுரன் இப் பதியே விழைந்தது எனும்
முண்டீச்சுரத்தின் முழு_முதலே பெண்தகையார்
235.ஏர்ப் பன் அம் காட்டு ஊர் என்று இரு நிலத்தோர் வாழ்த்துகின்ற
சீர்ப் பனங்காட்டூர் மகிழ் நிக்ஷேபமே சூர்ப் புடைத்தது
236.ஆம் மாத் தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும்
ஆமாத்தூர் வாழ் மெய் அருள் பிழம்பே யாம் ஏத்தும்
237.உண்ணாமுலையாள் உமையோடு மேவு திரு
வண்ணாமலை வாழ் அருள் சுடரே கண் ஆர்ந்த
238.நாகம் பராம் தொண்ட நாட்டில் உயர் காஞ்சி
ஏகம்பம் மேவும் பேர்_இன்பமே ஆகும் தென்
239.காற்று அளி வள் பூ மணத்தைக் காட்டும் பொழில் கச்சி
மேல்தளி வாழ் ஆனந்த வீட்டு உறவே நாற்ற மலர்ப்
240.பூந் தண்டு அளி விரித்துப் புக்கு இசைக்கும் சீர் ஓண
காந்தன்தளி அருள் ப்ரகாசமே சேர்ந்தவர்க்கே
241.இங்கு ஆபதம் சற்றும் இல்லாத அனேக
தங்காபதம் சேர் தயாநிதியே மங்காது
242.மெச்சி நெறிக்கு ஆர்வம் மேவிநின்றோர் சூழ்ந்த திரு_
கச்சி_நெறிக்காரைக்காட்டு இறையே முச்சகமும்
243.ஆயும் குரங்கணில்_முட்டப் பெயர் கொண்டு ஓங்கு புகழ்
ஏயும் தலம் வாழ் இயல் மொழியே தோயும் மன
244.யோகு அறல் இலாத் தவத்தோர் உன்ன விளங்கு திரு_
மாகறலில் அன்பர் அபிமானமே ஓகை இலா
245.வீத் தூரமா ஓட மெய்த் தவர்கள் சூழ்ந்த திரு
வோத்தூரில் வேதாந்த உண்மையே பூத் தவிசின்
246.ஆர்த்தான் பனகத்தவன் இந்திரன் புகழ் வன்
பார்த்தான் பனங்காட்டூர் பாக்கியமே பார்த்து உலகில்
247.இல்லம் எனச் சென்று இரவாதவர் வாழும்
வல்லம் மகிழ் அன்பர் வசித்துவமே சொல் அரிக்குக்
248.கால் பேறு கச்சியில் முக்கால் பேறு இவண் என்னும்
மால்பேற்றின் அன்பர் மனோபலமே ஏற்பு உடை வாய்
249.ஊறல் அடியார் உறத் தொழுது மேவு திரு
வூறல் அழியா உவகையே மாறுபடு
250.தீதும் இலம் பயம் கோள் தீர் என்று அடியர் புகழ்
ஓதும் இலம்பயம்கோட்டூர் நலமே தீது உடைய
251.பொன் கோலம் ஆம் எயிற்குப் போர்_கோலம் கொண்ட திரு
விற்கோலம் மேவு பர மேட்டிமையே சொல்_போரில்
252.ஓலம் காட்டும் பழையனூர் நீலி வாது அடக்கும்
ஆலங்காட்டில் சூழ் அருள் மயமே ஞாலம் சேர்
253.மாசு ஊர் அகற்றும் மதி_உடையோர் சூழ்ந்த திருப்
பாசூரில் உண்மைப் பரத்துவமே தேசு_ஊரன்
254.கண் பார்க்க வேண்டும் எனக் கண்டு ஊன்றுகோல் கொடுத்த
வெண்பாக்கத்து அன்பர் பெறும் வீறாப்பே பண்பார்க்கு
255.நள் இப் பதியே நலம் தரும் என்று அன்பர் புகும்
கள்ளில்பதி நம் கடப்பாடே எள்ளலுறும்
256.கோள் அத்தி நீக்கும் குணத்தோர்க்கு அருள்செய் திரு_
காளத்தி ஞானக் களஞ்சியமே ஆள் அத்தா
257.வெற்றி ஊர் என்ன வினையேன் வினை தவிர்த்த
ஒற்றியூர் மேவிய என் உள் அன்பே தெற்றிகளில்
258.பொங்கு மணிக் கால்கள் பொலம் செய் திருவொற்றி நகர்
தங்கும் சிவபோக சாரமே புங்கவர்கள்
259.சேர்ந்து வலம்கொள்ளுந் திருவொற்றியூர்க் கோயில்
சார்ந்து மகிழ் அமுத சாரமே தேர்ந்து உலகர்
260.போற்றும் திருவொற்றிப் பூம் கோயிற்குள் பெரியோர்
சாற்றும் புகழ் வேத சாரமே ஊற்றுறு மெய்
261.அன்பு மிகும் தொண்டர் குழு ஆயும் வலிதாயத்தில்
இன்பம் மிகு ஞான இலக்கணமே துன்பம் அற
262.எல்லை வாயற்கு உள் மட்டும் ஏகில் வினை ஏகும் எனும்
முல்லைவாயிற்கு உள் வைத்த முத்தி வித்தே மல்லல் பெறு
263.வேல் காட்டர் ஏத்து திருவேற்காட்டில் மேவிய முன்
நூல் காட்டு உயர் வேத நுட்பமே பால் காட்டும்
264.ஆர்த்தி பெற்ற மாது மயிலாய்ப் பூசித்து ஆர் மயிலைக்
கீர்த்திபெற்ற நல் வேத கீதமே கார்த் திரண்டு
265.வாவுகின்ற சோலை வளர் வான்மியூர்த் தலத்தில்
மேவுகின்ற ஞான விதரணமே தூவி மயில்
266.ஆடும் பொழில் கச்சூர் ஆல_கோயிற்குள் அன்பர்
நீடும் கன தூய நேயமே ஈடு_இல்லை
267.என்னும் திரு_தொண்டர் ஏத்தும் இடைச்சுரத்தின்
மன்னும் சிவானந்த வண்ணமே நல் நெறியோர்
268.துன்னு நெறிக்கு ஓர் துணையாம் தூய கழுக்குன்றினிடை
முன்னும் அறிவு ஆனந்த மூர்த்தமே துன்னு பொழில்
269.அம் மதுரத் தேன் பொழியும் அச்சிறுபாக்கத்து உலகர்
தம்மதம் நீக்கும் ஞான சம்மதமே எம்மதமும்
270.சார்ந்தால் வினை நீக்கித் தாங்கு திருவக்கரையுள்
நேர்ந்தார் உபநிடத நிச்சயமே தேர்ந்தவர்கள்
271.தத்தமது மதியால் சாரும் அரசிலியூர்
உத்தம மெய்ஞ்ஞான ஒழுக்கமே பத்தி_உள்ளோர்
272.எண்ணும் புகழ் கொள் இரும்பை மாகாளத்து
நண்ணும் சிவயோக நாட்டமே மண்ணகத்துள்
273.கோ பலத்தில் காண்பு அரிய கோகரணம் கோயில்கொண்ட
மா பலத்து மா பலமா மாபலமே தாபம் இலாப்
274.பாகு இயல் சொல் மங்கையொடும் பாங்கு ஆர் பருப்பதத்தில்
யோகியர்கள் ஏத்திட வாழ் ஒப்புரவே போகி முதல்
275.பாடி உற்ற நீல_பருப்பதத்தில் நல்லோர்கள்
தேடி வைத்த தெய்வத் திலகமே நீடு பவம்
276.தங்காத அனேகதங்காபதம் சேர்ந்த
நம் காதலான நயப்பு உணர்வே சிங்காது
277.தண் நிறைந்து நின்றவர்-தாம் சார் திருக்கேதாரத்தில்
பண் நிறைந்த கீதப் பனுவலே எண் நிறைந்த
278.சான்றோர் வணங்கும் நொடித்தான்மலையில் வாழ்கின்ற
தேன் தோய் அமுதச் செழும் சுவையே வான் தோய்ந்த
279.இந்திரரும் நாரணரும் எண்_இல் பிரமர்களும்
வந்து இறைஞ்சும் வெள்ளி_மலையானே தந்திடும் நல்
280.தாய்க்கும் கிடையாத தண் அருள் கொண்டு அன்பர் உளம்
வாய்க்கும் கயிலை_மலையானே தூய்க் குமரன்
281.தந்தையே என் அருமைத் தந்தையே தாயே என்
சிந்தையே கோயில்கொண்ட தீர்த்தனே சந்தம் மிகும்
282.எண் தோள் உடையாய் எனை_உடையாய் மார்பகத்தில்
வண்டு ஓலிடும் கொன்றை_மாலையாய் தொண்டர் விழி
283.உண்ணற்கு எளியாய் உருத்திரன் மால் ஆதியர்-தம்
கண்ணில் கனவினிலும் காண்பு அரியாய் மண்_உலகில்
284.என்_போன்றவர்க்கும் இருள் நீக்கி இன்பு உதவும்
பொன் போன்ற மேனிப் புராதனனே மின் போன்ற
285.செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கும் யாவருக்கும்
அஞ்சு அடையா வண்ணம் அளிப்போனே விஞ்சு உலகில்
286.எல்லார்க்கும் நல்லவனே எல்லாம் செய் வல்லவனே
எல்லார்க்கும் ஒன்றாய் இருப்போனே தொல் ஊழி
287.ஆர்ந்த சராசரங்கள் எல்லாம் அடி நிழலில்
சேர்ந்து ஒடுங்க மா நடனம் செய்வோனே சார்ந்து உலகில்
288.எத் தேவர் மெய்த் தேவர் என்று உரைக்கப்பட்டவர்கள்
அத் தேவர்க்கு எல்லாம் முன் ஆனோனே சத்து ஆன
289.வெண்மை முதல் ஐவணமும் மேவி ஐந்து தேவர்களாய்த்
திண்மை பெறும் ஐந்தொழிலும் செய்வோனே மண் முதலாம்
290.ஐந்தாய் இரு சுடராய் ஆன்மாவாய் நாதமுடன்
விந்து ஆகி எங்கும் விரிந்தோனே அம் தண வெள்
291.நீறு_உடையாய் ஆறு உடைய நீள் முடியாய் தேட அரிய
வீறு_உடையாய் நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மாறுபட
292.எள்ளல் அடியேன் எனக்குள் ஒளியாமல்
உள்ளபடியே உரைக்கின்றேன் விள்ளுறும் யான்
293.வன் சொலுடன் அன்றி வள்ளல் உனது அன்பர்-தமக்கு
இன் சொலுடன் பணிந்து ஒன்று ஈந்தது இலை புன் சொல் எனும்
294.பொய் உரைக்க என்றால் புடை எழுவேன் அன்றி ஒரு
மெய் உரைக்க என்றும் விழைந்தது இலை வையகத்தில்
295.பொல்லா விரதத்தைப் போற்றி உவந்து உண்பது அல்லால்
கொல்லா விரதத்தைக் கொண்டது இலை அல்லாதார்
296.வன்புகழைக் கேட்க மனம்கொண்டது அல்லாமல்
நின் புகழைக் கேட்க நினைந்ததிலை வன்பு கொண்டே
297.இல் நடிக்கும் நுண்_இடையார்க்கு ஏவல் புரிந்தேன் அலது உன்
பொன் அடிக்குத் தொண்டு புரிந்தது இலை பன்னுகின்ற
298.செக்கு உற்ற எள் எனவே சிந்தை நசிந்தேன் அலது
முக்குற்றம்-தன்னை முறித்தது இலை துக்கம் மிகு
299.தா இல் வலம்கொண்டு சஞ்சரித்தேன் அல்லது நின்
கோவில் வலம்கொள்ளக் குறித்தது இலை பூ_உலகில்
300.வன் நிதியோர் முன் கூப்பி வாழ்த்தினேன் அன்றி உன்றன்
சன்னிதியில் கை கூப்பித் தாழ்ந்தது இலை புன் நெறி சேர்
301.மிண்டரொடு கூடி வியந்தது அல்லால் ஐயா நின்
தொண்டரொடும் கூடிச் சூழ்ந்தது இலை கண்டவரைக்
302.கன்றும் முகம் கொண்டு கடுகடுத்துப் பார்ப்பது அல்லால்
என்றும் முகமலர்ச்சி ஏற்றது இலை நன்று பெறு
303.நல் நெஞ்சர் உன் சீர் நவில அது கேட்டுக்
கல்_நெஞ்சைச் சற்றும் கரைத்தது இலை பின் எஞ்சாப்
304.பண் நீர்மை கொண்ட தமிழ்ப் பா_மாலையால் துதித்துக்
கண்ணீர் கொண்டு உன்-பால் கனிந்தது இலை தண்ணீர் போல்
305.நெஞ்சம் உருகி நினைக்கும் அன்பர் போல் எனை நீ
அஞ்சல் என நின் தாள் அடுத்தது இலை விஞ்சு உலகர்
306.மெய் அடியன் என்று உரைக்க வித்தக நின் பொன் அடிக்குப்
பொய் அடிமை வேடங்கள் பூண்டது உண்டு நைய மிகு
307.மையல் வினைக்கு உவந்த மாதர் புணர்ச்சி எனும்
வெய்ய வினைக் குழியில் வீழ்ந்தது உண்டு துய்யர்-தமை
308.என் ஒன்றும் இல்லாது இயல்பாகப் பின் ஒன்று
முன் ஒன்றுமாக மொழிந்தது உண்டு மன்னுகின்ற
309.மானம் செயாது மனம் நொந்து இரப்போர்க்குத்
தானம் செய்வாரைத் தடுத்தது உண்டு ஈனம் இலா
310.வாரம் உரையாது வழக்கினிடை ஓர
வாரம் உரைத்தே மலைந்தது உண்டு ஈரம் இலா
311.நெஞ்சருடன் கூடி நேசம் செய்தும் அடியே
தஞ்சம் எனத் தாழாது தாழ்ந்தது உண்டு எஞ்சல் இலாத்
312.தாய்_அனையாய் உன்றனது சந்நிதி நேர் வந்தும் ஒரு
நேயமும் இல்லாது ஒதி போல் நின்றது உண்டு தீய வினை
313.மாளாக் கொடிய மனச் செல்வர் வாயிலில் போய்க்
கேளாச் சிவ_நிந்தை கேட்டது உண்டு மீளாத
314.பொல்லாப் புலையரைப் போல் புண்ணியரை வன் மதத்தால்
சொல்லா வசை எல்லாம் சொன்னது உண்டு நல்லோரைப்
315.போற்றாது பொய் உடம்பைப் போற்றிச் சிவ_பூசை
ஆற்றாது சோற்றுக்கு அலைந்தது உண்டு தேற்றாமல்
316.ஈ பத்தா என்று இங்கு இரப்போர்-தமைக் கண்டு
கோபத்தால் நாய் போல் குரைத்தது உண்டு பாபத்தால்
317.சிந்தை ஒன்று வாக்கு ஒன்று செய்கை ஒன்றாய்ப் போகவிட்டே
எந்தை நினை ஏத்தாது இருந்தது உண்டு புந்தி இந்த
318.சொல்லைக் கல் என்று நல்லோர் சொன்ன புத்தி கேளாமல்
எல்லை_கல் ஒத்தே இருந்தது உண்டு தொல்லை வினை
319.ஆழ்த்து ஆமய உலகில் அற்ப மகிழ்ச்சியினால்
வாழ்த்தாமல் உன்னை மறந்தது உண்டு தாழ்த்தாமல்
320.பூணா எலும்பு அணியாய்ப் பூண்டோய் நின் பொன் வடிவம்
காணாது வீழ் நாள் கழித்தது உண்டு மாணாத
321.காடு போல் ஞாலக் கடு நடையிலே இரு கால்
மாடு போல் நின்று உழைத்து வாழ்ந்தது உண்டு நாடு அகன்ற
322.கள்ளி வாய் ஓங்கு பெரும் காமக் கடும் காட்டில்
கொள்ளிவாய்ப்பேய் போல் குதித்தது உண்டு ஒள்ளியரால்
323.எள்ளுண்ட மாயா இயல்புறு புன் கல்வி எலாம்
கள் உண்ட பித்தனைப் போல் கற்றது உண்டு நள் உலகில்
324.சீர் ஆசை எங்கும் சொல் சென்றிடவே வேண்டும் எனும்
பேர்_ஆசைப் பேய்-தான் பிடித்தது உண்டு தீரா என்
325.சாதகமோ தீ_வினையின் சாதனையோ நான் அறியேன்
பாதகம் என்றால் எனக்குப் பால்_சோறு தீது அகன்ற
326.தூய்மை நன்றாம் என்கின்ற தொன்மையினார் வாய்க்கு இனிய
வாய்மை என்றால் என்னுடைய வாய் குமட்டும் காய்மை தரும்
327.கற்கு நிகராம் கடும் சொல் அன்றி நல் மதுரச்
சொற்கும் எனக்கும் வெகு தூரம் காண் பொற்பு மிக
328.நண்ணி உனைப் போற்றுகின்ற நல்லோர்க்கு இனிய சிவ
புண்ணியம் என்றால் எனக்குப் போராட்டம் அண்ணல் உனை
329.நாள் உரையாது ஏத்துகின்ற நல்லோர் மேல் இல்லாத
கோள்_உரை என்றால் எனக்குக் கொண்டாட்டம் நீள நினை
330.நேசிக்கும் நல்ல நெறியாம் சிவாகம நூல்
வாசிக்க என்றால் என் வாய் நோகும் காசிக்கு
331.நீள் திக்கில் ஆனாலும் நேர்ந்து அறிவது அல்லது வீண்
வேடிக்கை என்றால் விடுவதிலை நாடு அயலில்
332.வீறாம் உனது விழாச் செயினும் அவ்விடம்-தான்
ஆறாயிரம் காதமாம் கண்டாய் மாறான
333.போகம் என்றால் உள்ளம் மிகப் பூரிக்கும் அன்றி சிவ
யோகம் என்றால் என்னுடைய உள் நடுங்கும் சோகமுடன்
334.துள்ளல் ஒழிந்து என் நெஞ்சம் சோர்ந்து அழியும் காலத்தில்
கள்ளம் என்றால் உள்ளே களித்து எழும்பும் அள்ளல் நெறி
335.செல் என்றால் அன்றிச் சிவசிவா என்று ஒரு கால்
சொல் என்றால் என்றனக்குத் துக்கம் வரும் நல்ல நெறி
336.வாம் பலன் கொண்டோர்கள் மறந்தும் பெறாக் கொடிய
சோம்பல் என்பது என்னுடைய சொந்தம் காண் ஏம்பலுடன்
337.எற்றோ இரக்கம் என்பது என்றனைக் கண்டு அஞ்சி எனை
உற்றோரையும் உடன் விட்டு ஓடும் காண் சற்றேனும்
338.ஆக்கமே சேராது அறத் துரத்துகின்ற வெறும்
தூக்கமே என்றனக்குச் சோபனம் காண் ஊக்கம் மிகும்
339.ஏறு_உடையாய் நீறு அணியா ஈனர் மனை ஆயினும் வெண்
சோறு கிடைத்தால் அதுவே சொர்க்கம் காண் வீறுகின்ற
340.வாழ்வு உரைக்கும் நல்ல மனத்தர்-தமை எஞ்ஞான்றும்
தாழ்வு உரைத்தல் என்னுடைய சாதகம் காண் வேள்வி செயும்
341.தொண்டர்-தமைத் துதியாத் துட்டரைப் போல் எப்பொழுதும்
சண்டை என்பது என்றனக்குத் தாய்_தந்தை கொண்ட எழு
342.தாது ஆட ஓங்கித் தலை ஆட வஞ்சரொடு
வாதாட என்றால் என் வாய் துடிக்கும் கோது ஆடச்
343.சிந்தை திரிந்து உழலும் தீயரைப் போல் நல் தரும
நிந்தை என்பது என் பழைய நேசம் காண் முந்த நினை
344.எண் என்றால் அன்றி இடர் செய்திடும் கொடிய
பெண் என்றால் தூக்கம் பிடியாது பெண்கள் உடல்
345.புல் என்றால் தேகம் புளகிக்கும் அன்றி விட்டு
நில் என்றால் என் கண்ணில் நீர் அரும்பும் புல்லர் என்ற
346.பேர்க்கும் விருப்பு எய்தாத பெண் பேய்கள் வெய்ய சிறு
நீர்க் குழியே யான் குளிக்கும் நீர்ப் பொய்கை சீர்க்கரையின்
347.ஏறாப் பெண் மாதர் இடைக்குள் அளிந்து என்றும்
ஆறாப் புண்ணுக்கே அடிமை நான் தேறாத
348.வெம் சலம்செய் மாயா விகாரத்தினால் வரும் வீண்
சஞ்சலம் எல்லாம் எனது சம்பந்தம் அஞ்செழுத்தை
349.நேர்ந்தார்க்கு அருள் புரியும் நின் அடியர் தாமேயும்
சார்ந்தால் அது பெரிய சங்கட்டம் ஆர்ந்திடும் மான்
350.காந்தும் விழிப் புலியைக் கண்டது போல் நல்ல குண
சாந்தம் எனைக் கண்டால் தலை சாய்க்கும் ஆம் தகையோர்
351.சேர மனத்தில் செறிவித்திடும் புருட
தீரம் எனைக் கண்டால் சிரிக்கும் காண் கோரம்-அதைக்
352.காணில் உலகில் கருத்து_உடையோர் கொள்ளுகின்ற
நாணம் எனைக் கண்டு நாணும் காண் ஏண் உலகில்
353.ஞானம் கொளா எனது நாமம் உரைத்தாலும் அபி
மானம் பயம்கொண்டு மாய்ந்துவிடும் ஆன உன்றன்
354.கேண்மைக் குலத் தொண்டர் கீர்த்திபெறக் கொண்ட
ஆண்மைக்கு நான் என்றால் ஆகாது வாண்மை பெறும்
355.ஐய நின் தாள் பூசிக்கும் அன்பர் உள்ளத்து அன்பிற்கும்
பொய்யன் எனக்கும் பொருத்தம் இலை வையகத்தோர்
356.இல் எனினும் சும்மா நீ ஈகின்றேன் என்று ஒரு சொல்
சொல் எனினும் சொல்லத் துணிவுகொளேன் நல்லை எமக்கு
357.ஈ என்பார் அன்றி அன்னை என் பயத்தால் நின் சோற்றில்
ஈ என்பதற்கும் இசையாள் காண் ஈ என்பார்க்கு
358.எண்ணும் சிலர் மண் இடுவார் எனக்கு அந்த
மண்ணும் கொடுக்க மனம்வாராது அண்ணுறும் என்
359.இல்லை அடைந்தே இரப்பவருக்கு எப்போதும்
இல்லை என்பது என் வாய்க்கு இயல்பு காண் தொல் உலகை
360.ஆண்டாலும் அன்றி அயலார் புன் கீரைமணிப்
பூண்டாலும் என் கண் பொறுக்காது நீண்ட எழு
361.தீபம் உறுவோர் திசையோர் மற்று யாவர்க்கும்
கோபம்-அது நான் கொடுக்கில் உண்டு ஆபத்தில்
362.வீசம் கொடுத்து எட்டு வீசம் எனப் பிறரை
மோசம்செய நான் முதல் பாதம் பாசம் உளோர்
363.கைக் குடையவே எழுதிக் கட்டிவைத்த இ உலகப்
பொய்_கதையே யான் படிக்கும் புத்தகங்கள் மெய்ப்படு நின்
364.மந்திரத்தை உச்சரியா வாய்_உடையேன் என் போலத்
தந்திரத்தில் கைதேர்ந்தவர் இல்லை எந்தை இனி
365.ஏது என்று உரைப்பேன் இரும் கடல் சூழ் வையகத்தில்
சூது என்பது எல்லாம் என் சுற்றம் காண் ஓதுகின்ற
366.நஞ்சம் எலாம் கூட்டி நவின்றிடினும் ஒவ்வாத
வஞ்சம் எலாம் என் கைவசம் கண்டாய் அஞ்ச வரும்
367.வீண் அவமாம் வஞ்ச வினைக்கு முதல் ஆகி நின்ற
ஆணவமே என் காணி ஆட்சி-அதாம் மாண் நிறைந்த
368.நல் அறிவே என்னை நெடுநாள் பகைத்தது அன்றி மற்றைப்
புல்_அறிவே என் உள் பொருள் கண்டாய் சொல்லவொணா
369.வேடருக்கும் கிட்டாத வெம் குணத்தால் இங்கு உழலும்
மூடருக்குள் யானே முதல்வன் காண் வீடு அடுத்த
370.மேதையர்கள் வேண்டா விலங்காய்த் திரிகின்ற
பேதை என்பது என் உரிமைப் பேர் கண்டாய் பேதம் உற
371.ஓதுவது என் பற்பலவாய் உற்ற தவத்தோர் நீத்த
தீதுகள் எல்லாம் எனது செல்வம் காண் ஆதலினால்
372.பேயினை ஒத்து இ உலகில் பித்தாகி நின்ற இந்த
நாயினை நீ ஆண்டிடுதல் நன்கு அன்றே ஆயினும் உன்
373.மண்ணார் உயிர்களுக்கும் வானவர்க்கும் தான் இரங்கி
உண்ணாக் கொடு விடமும் உண்டனையே எண்ணாமல்
374.வேய்த் தவள வெற்பு எடுத்த வெய்ய அரக்கன்-தனக்கும்
வாய்த்த வரம் எல்லாம் வழங்கினையே சாய்த்த மன
375.வீம்பு உடைய வன் முனிவர் வேள்வி செய்து விட்ட கொடும்
பாம்பை எல்லாம் தோளில் பரித்தனையே நாம் பெரியர்
376.எஞ்சேம் என்று ஆணவத்தால் ஏற்ற இருவரையும்
அஞ்சேல் என்று ஆட்கொண்டு அருளினையே துஞ்சு பன்றித்
377.தோயாக் குருளைகளின் துன்பம் பொறாது அன்று
தாயாய் முலை_பாலும் தந்தனையே வாய் இசைக்குப்
378.பாண்டியன் முன் சொல்லி வந்த பாணன் பொருட்டு அடிமை
வேண்டி விறகு எடுத்து விற்றனையே ஆண்டு ஒரு நாள்
379.வாய் முடியாத் துன்பு கொண்ட வந்திக்கு ஓர் ஆளாகித்
தூய் முடி மேல் மண்ணும் சுமந்தனையே ஆய் துயரம்
380.மா அகம் சேர் மாணிக்கவாசகருக்காய்க் குதிரைச்
சேவகன் போல் வீதி-தனில் சென்றனையே மா விசயன்
381.வில் அடிக்கு நெஞ்சம் விரும்பியது அல்லால் எறிந்த
கல் அடிக்கும் உள்ளம் களித்தனையே மல்லல் உறும்
382.வில்வக் கிளை உதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே சொல் அகலின்
383.நீளுகின்ற நெய் அருந்த நேர் எலியை மூவுலகும்
ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே கோள் அகல
384.வாய்ச்சு அங்கு நூல் இழைத்த வாய்ச் சிலம்பி-தன்னை உயர்
கோச்செங்கண் சோழன் எனக் கூட்டினையே ஏச்சு அறும் நல்
385.ஆறு அடுத்த வாகீசர்க்கு ஆம் பசியைக் கண்டு கட்டுச்
சோறு எடுத்துப் பின்னே சுமந்தனையே கூறுகின்ற
386.தொன்மை பெரும் சுந்தரர்க்குத் தோழன் என்று பெண் பரவை
நல் மனைக்குத் தூது நடந்தனையே நன்மை பெற
387.இற்று என்ற இற்று என்னா எத்தனையோ பேர்கள் செய்த
குற்றம் குணம் ஆகக் கொண்டனையே பற்று உலகில்
388.அன்பு உடைய தாயர்கள் ஓர் ஆயிரம் பேர் ஆனாலும்
அன்பு_உடையாய் நின்னைப் போல் ஆவாரோ இன்பமுடன்
389.ஈண்ட வரும் தந்தையர்கள் எண்_இலரே ஆயினும் என்
ஆண்டவனே நின்னைப் போல் ஆவாரோ பூண் தகை கொள்
390.ஏண் உடைய நின்னை அன்றி எந்தை பிரானே உன்
ஆணை எனக்கு உற்ற_துணை யாரும் இல்லை நாணம் உளன்
391.ஆனேன் பிழைகள் அனைத்தினையும் ஐயா நீ-
தானே பொறுக்கத் தகும் கண்டாய் மேல் நோற்ற
392.மால்-தனக்கும் மெட்டா மலர்_கழலோய் நீ என்னைக்
கூற்றனுக்குக் காட்டிக்கொடுக்கற்க பால் தவள
393.நந்து அ கடல் புவியில் நான் இன்னும் வன் பிறவிப்
பந்தக் கடல் அழுந்தப்பண்ணற்க முந்தை நெறி
394.நின்றே உன் பொன்_தாள் நினையாதார் பாழ் மனையில்
சென்றே உடல் ஓம்பச்செய்யற்க நன்றே நின்று
395.ஓங்கு நெறியோர் உளத்து அமர்ந்தோய் என்றன்னைத்
தீங்கு நெறியில் செலுத்தற்க ஈங்கு அடங்கி
396.வாழி எனத் தான் வழுத்தினும் என் சொற்கு அடங்கா
ஏழை மனத்தால் இளைக்கின்றேன் வாழும் மரக்
397.கோடு ஏறும் பொல்லாக் குரங்கு எனவே பொய் உலகக்
காடு ஏறும் நெஞ்சால் கலங்குகின்றேன் பாடு ஏறும்
398.உள் அறியா மாயை எனும் உட்பகை ஆர்க் காமம் எனும்
கள் அறியாது உண்டு கவல்கின்றேன் தெள் உறும் என்
399.கண்_அனையாய் நின் தாள்_கமலங்களை வழுத்தா
மண்_அனையார்-பால் போய் மயங்குகின்றேன் திண்ணம் இலாக்
400.காதரவாம் துன்பக் கவலைக் கடல் வீழ்ந்தே
ஆதரவு ஒன்று இன்றி அலைகின்றேன் ஓது மறை
401.ஆத்தர் எனும் உன் அடியார்-தமைக் கண்டு
நாத்திகம் சொல்வார்க்கு நடுங்குகின்றேன் பாத்து உண்டே
402.உய்வது அறியா உளத்தினேன் உய்யும் வகை
செய்வது அறியேன் திகைக்கின்றேன் சைவ நெறி
403.யுள் நிரம்பும் நின் கருணை உண்டோ இலையோ என்று
எண்ணிஎண்ணி உள்ளம் இளைக்கின்றேன் மண்ணினிடைக்
404.கொன் செய்கை கொண்ட கொடும் கூற்றன் குறுகில் அதற்கு
என் செய்வோம் என்று எண்ணி எய்க்கின்றேன் முன் செய் வினை
405.யாம் அறையா நோயால் அகம் மெலிவுற்று ஐயோ நான்
தாமரையின் நீர் போல் தயங்குகின்றேன் தாமம் முடி
406.வள்ளல் அருள் கொடுக்க வந்திலனே இன்னும் என
உள்ளம்-அது நீராய் உருகுகின்றேன் எள்ளலுறு
407.மாலை பாய்ந்து இன்னும் என்ன வந்திடுமோ என்று நெஞ்சம்
ஆலை பாய்ந்து உள்ளம் அழிகின்றேன் ஞாலம் மிசைக்
408.கோள் பார வாழ்க்கைக் கொடும் சிறையில் நின்று என்னை
மீட்பார் இலாது விழிக்கின்றேன் மீட்பு ஆகும்
409.ஆற்றில் ஒரு காலும் அடங்காச் சமுசாரச்
சேற்றில் ஒரு காலும் வைத்துத் தேய்கின்றேன் தோற்றும் மயல்
410.பாகமுறு வாழ்க்கை எனும் பாலைவனத்து உன் அருள் நீர்த்
தாகம்-அது கொண்டே தவிக்கின்றேன் மோகம்-அதில்
411.போய்ப்படும் ஓர் பஞ்ச_பொறிகளால் வெம் பாம்பின்
வாய்ப்படும் ஓர் தேரையைப் போல் வாடுகின்றேன் மாய்ப்ப வரும்
412.மீன் போலும் மாதர் விழியால் வலைப்பட்ட
மான் போலும் சோர்ந்து மடங்குகின்றேன் கான் போல
413.வீற்றும் உலக விகாரப் பிரளயத்தில்
தோற்றும் சுழியுள் சுழல்கின்றேன் ஆற்றவும் நான்
414.இப் பாரில் உன் மேல் அன்பு இல் எனினும் அன்பன் என
ஒப்பாரியேனும் உடையேன் காண் தப்பு ஆய்ந்த
415.மட்டு விடேன் உன் தாள் மறக்கினும் வெண் நீற்று நெறி
விட்டுவிடேன் என்றனைக் கைவிட்டுவிடேல் துட்டன் என
416.மாலும் திசைமுகனும் வானவரும் வந்து தடுத்
தாலும் சிறியேனைத் தள்ளிவிடேல் சால் உலக
417.வாதனை கொண்டோன் என்று மற்று எவரானாலும் வந்து
போதனைசெய்தாலும் எனைப் போக்கிவிடேல் நீ தயவு
418.சூழ்ந்திடுக என்னையும் நின் தொண்டருடன் சேர்த்து அருள்க
வாழ்ந்திடுக நின் தாள்_மலர்