திருவருட்பா
ஆறாம் திருமுறை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் இச்சையால் எருதுநோ வறியாக்
காகமேஎனப்போய்ப்பிறர் தமைவருத்திக்களித்தபாதகத்தொழிற்கடையேன்
மோகமேஉடையேன் என்னினும்எந்தாய் முனிந்திடேல்காத்தருள் எனையே.
2. பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப்புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார்
பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன்அன்பினால்அடுத்தவர்கரங்கள்
கூப்பினுங்கூப்பாக் கொடுங்கையேன் எனினும் கோபியேல் காத்தருள் எனையே.
3. விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிகஇனிக் கின்றநின் புகழ்கள்
வழுத்தலை அறியேன் மக்களே மனையே வாழ்க்கையே துணைஎனமதித்துக்
கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன் கொக்கனேன் செக்கினைப் பலகால்
இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்தருள் எனையே.
4. புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில்
தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த தயவிலாச் சழக்கனேன் சழக்கர்
உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில் உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன்
இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன் என்னினும் காத்தருள் எனையே.
5. கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன் கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும்
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அறவுண்டு குப்பைமேற் போட்ட
நெட்டிலை அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்தருள் எனையே.
6. நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில்
போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனைகலை இலர்க்கொரு கலையில்
ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன்
ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன் என்னினும் காத்தருள்எனையே.
7. அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன்அசடனேன் அறிவிலேன்உலகில்
குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க் குழியிலே குளித்தவெங் கொடியேன்
வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க மனங்கொணட சிறியேனன் மாயைக்
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்தருள் எனையே.
8. தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத் துதித்திலேன் தூய்மைஒன் றறியேன்
கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில் கலந்துணக் கருதிய கருத்தேன்
பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும்
எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன் என்னினும் காத்தருள் எனையே.
9. வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனைகவர் கருத்தினேன் ஓட்டைச்
சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன் தயவிலேன் சூதெலாம் அடைத்த
பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம்வெறுக் கச்செய்
எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன் என்னினும் காத்தருள் எனையே.
10. உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந் தோதிய வறிஞருக் கேதும்
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில் குணம்பெரி துடையநல் லோரை
அடுத்திலேன் அடுத்தற்காசையும் இல்லேன் அவனிமேல் நல்லவன் எனப்பேர்
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன் றிருக்கின்றேன் காத்தருள் எனையே.