Adiyar Peru Vallalar Songs

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. அடியார் வருத்தம்-தனைக் கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
வடியாக் கருணைப் பெரும் கடலார் என்ற பெரியர் வார்த்தை எலாம்
நெடியார்க்கு அரியாய் கொடியேன் என் ஒருவன்-தனையும் நீக்கியதோ
கடியாக் கொடு மா_பாதகன் முன் கண்ட பரிசும் கண்டிலனே.

2. பை ஆர் பாம்பு கொடியது எனப் பகர்வார் அதற்கும் பரிந்து முன்_நாள்
ஐயா கருணை அளித்தனை என்னளவில் இன்னும் அளித்திலையே
மை ஆர் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்_வினையேன்
நையாநின்றேன் ஐயோ நான் பாம்பில் கொடியன் ஆனேனே.

3. பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிது அளிப்பான்
ஊழை அகற்றும் பெரும் கருணை உடையான் என்பார் உனை ஐயோ
மோழை மனத்தால் குரங்கு எறிந்த விளங்காய் ஆகி மொத்துண்ணும்
ஏழை அடியேன் வருத்தம் கண்டு இருத்தல் அழகோ எம் கோவே.

4. மருள் நாடு உலகில் கொலை_புரிவார் மனமே கரையாக் கல் என்று
பொருள் நாடிய நின் திரு_வாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
கருணாநிதி நின் திருவுளமும் கல் என்று உரைக்க அறிந்திலனே
இருள் நாடிய இச் சிறியேனுக்கு இன்னும் இரங்காது இருந்தாயே.

5. முன்னும் கொடுமை பல புரிந்து முடுகிப் பின்னும் கொடுமை செய
உன்னும் கொடியர்-தமக்கும் அருள் உதவும் கருணை உடையானே
மன்னும் பதமே துணை என்று மதித்து வருந்தும் சிறியேனுக்கு
இன்னும் கருணை புரிந்திலை நான் என்ன கொடுமை செய்தேனோ.

6. அங்கே அடியர்-தமக்கு எல்லாம் அருளார் அமுதம் அளித்து ஐயோ
இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்-தான் அளிக்க இசைந்தாயேல்
செம் கேழ் இதழிச் சடைக் கனியே சிவமே அடிமைச் சிறு நாயேன்
எங்கே புகுவேன் என் செய்வேன் எவர் என் முகம் பார்த்திடுவாரே.

7. அளியே அன்பர் அன்பே நல் அமுதே சுத்த அறிவான
வெளியே வெளியில் இன்ப நடம் புரியும் அரசே விதி ஒன்றும்
தெளியேன் தீங்கு பிறர் செயினும் தீங்கு நினையாத் திருவுளம்-தான்
எளியேன் அளவில் நினைக்க ஒருப்படுமோ கருணை எந்தாயே.

8. தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத் தெளிந்து
வாது நினைக்கும் மனக் கடையேன் மகிழ்வுற்று இருந்தேன் என்னளவில்
சூது நினைப்பாய் எனில் யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
ஏது நினைப்பேன் ஐயோ நான் பாவி உடம்பு ஏன் எடுத்தேனே.

9. பொது என்று அறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவது அன்றிக்
கதுவென்று அழுங்க நினையா நின் கருணை உளம்-தான் அறிவு என்பது
இது என்று அறியா எனை வருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
எது என்று அறிவேன் என் புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.

10. வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர்-தமையும் வினைத் துயர்கள்
பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளம்-தான்
நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
துடிக்கப் பார்த்து இங்கு இருந்தது காண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.

11. கல்லும் கனியத் திரு_நோக்கம் புரியும் கருணைக் கடலே நான்
அல்லும்_பகலுந் திரு_குறிப்பை எதிர்பார்த்து இங்கே அயர்கின்றேன்
கொல்லும் கொடியார்க்கு உதவுகின்ற குறும்புத் தேவர் மனம் போலச்
சொல்லும் இரங்கா வன்மை கற்க எங்கே ஐயோ துணிந்தாயோ.

12. படி மேல் ஆசை பல வைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்து சுகக்
கொடி மேல் உறச்செய்து அருள்கின்றாய் என்-பால் இரக்கம் கொண்டிலையே
பொடி மேல் அணி நின் அருட்கு இது-தான் அழகோ பொதுவில் நடிக்கும் உன்றன்
அடி மேல் ஆசை அல்லால் வேறு ஆசை ஐயோ அறியேனே.

13. நாயேன் உலகில் அறிவு வந்த நாள் தொட்டு இந்த நாள் வரையும்
ஏயேன் பிறிதில் உன் குறிப்பே எதிர்பார்த்து இருந்தேன் என்னுடைய
தாயே பொதுவில் நடம் புரி எந்தாயே தயவு தாராயேல்
மாயேன் ஐயோ எது கொண்டு வாழ்ந்து இங்கு இருக்கத் துணிவேனே.

14. நயத்தால் உனது திரு_அருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை
உய-தான் வையேன் மடித்திடுவேன் மடித்தால் பின்னர் உலகத்தே
வயத்தால் எந்த உடம்பு உறுமோ என்ன வருமோ என்கின்ற
பயத்தால் ஐயோ இ உடம்பைச் சுமக்கின்றேன் எம் பரஞ்சுடரே.

15. இன்பம் மடுத்து உன் அடியர் எலாம் இழியாது ஏறி இருக்கின்றார்
வன்பரிடத்தே பல கால் சென்று அவரோடு உறவு வழங்கி உன்றன்
அன்பர் உறவை விடுத்து உலகில் ஆடிப் பாடி அடுத்த வினைத்
துன்பம் முடுகிச் சுடச்சுடவும் சோறு உண்டு இருக்கத் துணிந்தேனே.

16. எ நாள் கருணைத் தனி முதல் நீ என்-பால் இரங்கி அருளுதலோ
அ நாள் இ நாள் இ நாள் என்று எண்ணிஎண்ணி அலமந்தேன்
செல் நாள்களில் ஓர் நல் நாளும் திரு_நாள் ஆனது இலை ஐயோ
முன்_நாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.

17. எந்த வகை செய்திடில் கருணை எந்தாய் நீ-தான் இரங்குவையோ
அந்த வகையை நான் அறியேன் அறிவிப்பாரும் எனக்கு இல்லை
இந்த வகை இங்கு ஐயோ நான் இருந்தால் பின்னர் என் செய்வேன்
பந்த வகை அற்றவர் உளத்தே நடிக்கும் உண்மைப் பரம் பொருளே.

18. அடுக்கும் தொண்டர்-தமக்கு எல்லாம் அருள் ஈந்து இங்கே என்னளவில்
கொடுக்கும் தன்மை-தனை ஒளித்தால் ஒளிக்கப்படுமோ குண_குன்றே
தடுக்கும் தடையும் வேறு இல்லை தமியேன்-தனை இத் தாழ்வு அகற்றி
எடுக்கும்துணையும் பிறிது இல்லை ஐயோ இன்னும் இரங்கிலையே.

19. எல்லாம் உடையாய் நின் செயலே எல்லாம் என்றால் என் செயல்கள்
எல்லாம் நினது செயல் அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல்
வல்லாய் என்னைப் புறம் விடுத்தால் புறத்தும் உன்றன் மயம் அன்றே
நல்லார் எங்கும் சிவமயம் என்று உரைப்பார் எங்கள் நாயகனே.

20. கூடும் கருணைத் திரு_குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
வாடும் சிறியேன் வாட்டம் எலாம் தீர்த்து வாழ்வித்திடல் வேண்டும்
பாடும் புகழோய் நினை அல்லால் துணை வேறு இல்லைப் பர வெளியில்
ஆடும் செல்வத் திரு_அடி மேல் ஆணை முக்கால் ஆணை அதே.