Adiyar Peru

திருவருட்பா

ஆறாம் திருமுறை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்
நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ
கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே.

2. பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்
ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே
மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்
நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே.

3. பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான்
ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ
மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும்
ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே.

4. மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று
பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே
இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே.

5. முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய
உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே
மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்
கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ.

6. அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ
இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்
செங்கேழ் இதழிச் சடைக்கனியே சிவமே அடிமைச் சிறுநாயேன்
எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே.

7. அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே.

8. தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.

9. பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக்
கழுதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப
திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.

10. வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.

11. கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான்
அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன்
கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச்
சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ.

12. படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக்
கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே
பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன்
அடிமேல் அசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே.

13. நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும்
ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய
தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல்
மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே.

14. நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை
உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே
வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற
பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே.

15. இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார்
வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன்
அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத்
துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே.

16. எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ
அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன்
சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ
முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.

17. எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ
அந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை
இந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்
பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே203.

18. அடுக்குந் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந் திங்கே என்னளவில்
கொடுக்குந் தன்மை தனைஒளித்தால் ஒளிக்கப் படுமோ குணக்குன்றே
தடுக்குந் தடையும் வேறில்லை தமியேன் தனைஇத் தாழ்வகற்றி
எடுக்குந் துணையும் பிறிதில்லை ஐயோ இன்னும் இரங்கிலையே.

19. எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம் என்றால் என்செயல்கள்
எல்லாம் நினது செயல்அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல்
வல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும் உன்றன் மயம்அன்றே
நல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார் எங்கள் நாயகனே.

20. கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்
பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்
ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே.