Arutperunjothi Agaval

திருவருட்பா

ஆறாம் திருமுறை

நிலைமண்டில ஆசிரியப்பா

திருச்சிற்றம்பலம்

1. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

2. அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி

3. ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

4. இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி

5. ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

6. உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி

7. ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்
ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி

8. எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

9. ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி

10. ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்
ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

11. ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை
யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி

12. ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி

13. ஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி

14. திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி

15. சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

16. சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு
அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி

17. தூயக லாந்த சுகந்தரு வெளியெனும்
ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

18. ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்
ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

19. விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

20. பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி

21. சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

22. சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்
அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

23. தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி

24. தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி

25. சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி

26. சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி

27. காரண காரியங் காட்டிடு வெளியெனும்
ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

28. ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

29. வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்
ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

30. என்றா தியசுடர்க் கியனிலை யாயது
வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி

31. சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி

32. முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

33. துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி

34. எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்
அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

35. இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

36. சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

37. சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

38. நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்
அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

39. உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய
அபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

40. சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

41. மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

42. ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்
ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

43. வாரமு மழியா வரமுந் தருந்திரு
வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

44. இழியாப் பெருநல மெல்லா மளித்தருள்
அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

45. கற்பம் பலபல கழியினு மழிவுறா
அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

46. எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய
வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

47. பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி
ஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி

48. எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி
அம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி

49. தம்பர ஞான சிதம்பர மெனுமோர்
அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி

50. எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்
அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி

51. வாடுத னீக்கிய மணிமன் றிடையே
ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி

52. நாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே
ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி

53. கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர்
அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

54. ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய
வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

55. இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்
கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி

56. எம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா
தம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி

57. பிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்
னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி

58. சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி

59. தநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர்
அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி

60. உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி

61. பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே
அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி

62. உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி

63. என்னையும் பணிகொண் டிறவா வரமளித்
தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி

64. ஓதியோ தாம லுறவெனக் களித்த
ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி

65. படியடி வான்முடி பற்றினுந் தோற்றா
அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி

66. பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்
அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி

67. திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும்
அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி

68. மதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும்
அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி

69. எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்
அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி

70. வல்லதா யெல்லா மாகியெல் லாமும்
அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் சோதி

71. எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர்
அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி

72. தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

73. சத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத்
தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி

74. சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்
அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி

75. முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி

76. பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்
அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி

77. காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்
ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி

78. இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென்
றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

79. இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி

80. நானந்த மில்லா நலம்பெற வெனக்கே
ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி

81. எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை
யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி

82. மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது
வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி

83. எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென
அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி

84. சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி
லைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

85. எங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும்
அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி

86. சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம்
அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி

87. சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி

88. உபரச வேதியி னுபயமும் பரமும்
அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி

89. மந்தண மிதுவென மறுவிலா மதியால்
அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி

90. எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய
வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி

91. செடியறுத் தேதிட தேகமும் போகமும்
அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி

92. துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை
அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி

93. பொதுவது சிறப்பது புதியது பழயதென்
றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி

94. சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை
யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி

95. ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்
காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி

96. எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக்
கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி

97. எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்
கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி

98. இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக்
கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி

99. பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென்
ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி

100. தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென
தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி

101. எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்
அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

102. வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்
ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி

103. சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே
ஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி

104. சத்திய மாஞ்சிவ சத்த்’யை யீந்தெனக்
கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி

105. சாவா நிலையிது தந்தன முனக்கே
ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி

106. சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி

107. மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்
அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி

108. தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி

109. காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்
ஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி

110. எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா
றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி

111. எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி

112. கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி

113. எண்டர முடியா திலங்கிய பற்பல
அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி

114. சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை
யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி

115. வாழிநீ டூழி வாழியென் றோங்குபே
ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி

116. மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை
யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி

117. எச்சநி னக்கிலை யெல்லாம் பெருகவென்று
அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி

118. நீடுக நீயே நீளுல கனைத்தும்நின்
றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி

119. முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு
மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

120. மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

121. கருமசித் திகளின் கலைபல கோடியும்
அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

122. யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்
ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

123. ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்
ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

124. புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

125. முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி

126. சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்
அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி

127. ஏகசிற் சித்தியே யியலுற வனேகம்
ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி

128. இன்பசித் தியினிய லேக மனேகம்
அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி

129. எட்டிரண் டென்பன வியலுமுற் படியென
அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி

130. இப்படி கண்டனை யினியுறு படியெலாம்
அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி

131. படிமுடி கடந்தனை பாரிது பாரென
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி

132. ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த
மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

133. இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி
யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

134. ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

135. நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

136. கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே
அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

137. கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

138. அருளொளி யென்றனி யறிவினில் விரித்தே
அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி

139. பரையொளி யென்மனப் பதியினில் விரித்தே
அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

140. வல்லப சத்திகள் வகையெலா மளித்தென
தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

141. ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம்
ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

142. சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி

143. பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்
மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி

144. எஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி

145. மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி

146. பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

147. சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த
அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி

148. வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால்
ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி

149. எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை
யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி

150. நவையிலா வுளத்தி னாடிய நாடிய
வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி

151. கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண்
டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி

152. நன்றறி வறியா நாயினேன் றனையும்
அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி

153. நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்
ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி

154. தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்
ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி

155. எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே
அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி

156. ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்
டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி

157. தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா
ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

158. மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி

159. உருவமு மருவமு முபயமு மாகிய
அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி

160. இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி
அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி

161. தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்துள
அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி

162. பொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய
அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி

163. உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை
அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி

164. வெருள்மன மாயை வினையிருணீக்கியுள்
அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி

165. சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே
அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி

166. விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே
அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி

167. அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட
அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி

168. உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே
அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி

169. விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி

170. விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி

171. காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி

172. காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

173. அனலினு ளனலா யனனடு வனலாய்
அனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

174. அனலுறு மனலா யனனிலை யனலாய்
அனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி

175. புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி

176. புனலுறு புனலாய்ப் புனனிலைப் புனலாய்
அனையெனப் பெருகு மருட்பெஞ் ஜோதி

177. புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்
அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி

178. புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்
அவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி

179. விண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

180. வளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

181. நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

182. நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

183. புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி
அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

184. மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

185. மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை
யண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

186. மண்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

187. மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை
அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

188. மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல்
அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

189. மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

190. மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

191. மண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண்
டண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

192. மண்ணியற் சத்திகள் மண்செயற் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

193. மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

194. மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

195. மண்கணச் சத்திகள் வகைபல பலவும்
அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி

196. மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

197. மண்கரு வுயிர்த்தொகை வகைவிரி பலவா
அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி

198. மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே
றண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

199. மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

200. மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

201. மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

202. நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

203. நீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல
வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

204. நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல்
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

205. நீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பல்வகை
ஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

206. நீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

207. நீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

208. நீரிடை யடிநடு நிலையுற வகுத்தன
லார்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

209. நீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல்
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

210. நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

211. நீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை
ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

212. நீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

213. நீரிடை நிலைபல நிலையுறு செயல்பல
ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி

214. நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

215. நீரியல் பலபல நிரைத்ததிற் பிறவும்
ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

216. தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

217. தீயினில் வெண்மைத் திகழியல் பலவா
வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

218. தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

219. தீயிடை யொளியே திகழுற வமைத்ததில்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

220. தீயிடை யருநிலை திருநிலை கருநிலை
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

221. தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

222. தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

223. தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

224. தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

225. தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

226. தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

227. தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

228. தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

229. தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

230. தீயியல் பலபல செறித்ததிற் பலவும்
ஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

231. காற்றிடை யசையியல் கலையிய லுயிரியல்
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

232. காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்
ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

233. காற்றினி லூறியல் காட்டுறு பலபல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

234. காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

235. காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

236. காற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

237. காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

238. காற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில
ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி

239. காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

240. காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

241. காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

242. காற்றிடை யுணரியல் கருதிய லாதிய
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

243. காற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

244. காற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித்
தாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

245. காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

246. காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

247. வெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

248. வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

249. வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

250. வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை
அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி

251. வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி

252. வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்
அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

253. வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல
அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

254. வெளியிடை பலவே விரித்ததிற் பற்பல
அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

255. வெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல்
அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

256. வெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

257. புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

258. புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை
அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

259. அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்
அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

260. அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை
அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி

261. கருதக நடுவொடு கடையணைந் தகமுதல்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

262. தணியக நடுவொடு தலையணைந் தகக்கடை
அணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

263. அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்
அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

264. அகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை
அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

265. அகநடு வதனா லகப்புற நடுவை
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

266. அகப்புற நடுவா லணிபுற நடுவை
அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி

267. புறநடு வதனாற் புறப்புற நடுவை
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

268. புகலரு மகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி

269. புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

270. புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

271. அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்
அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

272. அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம்
அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

273. வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

274. நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

275. நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும்
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

276. புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

277. பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத
வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி

278. உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி
அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி

279. உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

280. கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த
அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி

281. சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

282. பரவெளி யதனைப் பரம்பர வெளியில்
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

283. பரம்பர வெளியைப் பராபர வெளியில்
அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

284. பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

285. பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்
அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

286. குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

287. மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

288. காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

289. துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

290. இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்
அவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

291. ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

292. சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை
அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

293. காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை
ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

294. அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை
அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

295. மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை
அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி

296. தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை
அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

297. விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை
அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

298. ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை
ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி

299. சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

300. நாதமாம் பிரமமும் நாதவண் டங்களை
ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

301. பகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களும்
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

302. பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

303. எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

304. அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை
அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

305. உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

306. களவில கடல்வகை கங்கில கரையில
அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி

307. கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற
அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி

308. கடல்களு மலைகளுங் கதிகளு நதிகளும்
அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

309. கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர்
அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

310. மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர்
அலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

311. ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்
அன்றற வகுத்த வருட்பெஞ் ஜோதி

312. பத்திடை யாயிரம் பகரதிற் கோடி
அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

313. நூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்
ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

314. கோடியி லனந்த கோடிபல் கோடி
ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

315. வித்திய லொன்றா விளைவியல் பலவா
அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

316. விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க
அளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி

317. வித்தும் பதமும் விளையுப கரிப்பும்
அத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி

318. வித்திடை முளையும் முளையிடை விளைவும்
அத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி

319. வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்
அத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

320. விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்
அளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

321. முளையதின் முளையும் முளையினுண் முளையும்
அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

322. வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
அத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

323. பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்
அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

324. ஒற்றுமை வேற்றுமை யுரிமைக ளனைத்தும்
அற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி

325. பொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய
அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

326. உறவினி லுறவும் உறவினிற் பகையும்
அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

327. பகையினிற் பகையும் பகையினி லுறவும்
அகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

328. பாதியு முழுதும் பதிசெயு மந்தமும்
ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

329. துணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும்
அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

330. உருவதி னுருவும் உருவினுள் ளுருவும்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

331. அருவினுள் ளருவும் மருவதி லருவும்
அருளிய லமைத்த வருட்பெருஞ் ஜோதி

332. கரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்
அரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

333. உருவதி லருவும் மருவதி லுருவும்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

334. வண்ணமு வடிவு மயங்கிய வகைபல
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

335. சிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

336. பெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும்
அருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

337. திண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும்
அண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

338. மென்மையின் மென்மையும் மென்மையில் வன்மையும்
அன்மையற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி

339. அடியினுள் ளடியும் மடியிடை யடியும்
அடியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

340. நடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும்
அடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

341. முடியினுண் முடியும் முடியினின் முடியும்
அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

342. அகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை
அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி

343. புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட
அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

344. அகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட
அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

345. புறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற
அறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

346. பாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில்
ஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி

347. ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

348. அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல
அசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

349. அறிவொரு வகைமுத லைவகை யறுவகை
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

350. வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற
அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி

351. சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

352. பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

353. பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

354. பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

355. பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

356. பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும்
அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

357. பெண்ணியன் மனமு மாணிய லறிவும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

358. தனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணியல்
அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

359. உனற்கரு முயிருள வுடலுள வுலகுள
வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

360. ஓவுறா வெழுவகை யுயிர்முத லனைத்தும்
ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

361. பைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில்
ஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

362. தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை
ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

363. முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை
அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

364. நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்
அலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

365. வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

366. உடலுறு பிணியா லுயிருடல் கெடாவகை
அடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

367. சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை
அசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

368. உயிருறு முடலையு முடலுறு முயிரையும்
அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

369. பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை
ஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

370. முச்சுட ராதியா லெச்சக வுயிரையும்
அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

371. வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயிர்
ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

372. இன்புறு சத்தியா லெழின்மழை பொழிவித்
தன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

373. எண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும்
அண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

374. அண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர்
அண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

375. தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்
தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

376. அகப்புற வமுதளித் தைவரா திகளை
அகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

377. தருமக வமுதாற் சத்திசத் தர்களை
அருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி

378. காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்
ஆலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

379. விச்சையை யிச்சையை விளைவித் துயிர்களை
அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

380. போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை
ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி

381. கலையறி வளித்துக் களிப்பினி லுயிரெலாம்
அலைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

382. விடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும்
அடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

383. துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை
அன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

384. கரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை
அரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி

385. எத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
கத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி

386. எப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
கப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி

387. ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன
ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி

388. சொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை
அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

389. சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்
அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

390. வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்
ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

391. எவையெலா மெவையெலா மீண்டின வீண்டின
அவையெலாங் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

392. அண்டத் துரிசையு மகிலத் துரிசையும்
அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

393. பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்
அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

394. உயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும்
அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

395. உயிருறு மிருவினை யுறுவிரி வனைத்தும்
அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

396. காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை
ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

397. பொங்குறு வெகுளிப் புடைப்புக ளெல்லாம்
அங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

398. மதம்புரை மோகமு மற்றவு மாங்காங்
கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

399. வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும்
அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

400. சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி

401. நால்வயிற் றுரிசும் நண்ணுயி ராதியில்
ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

402. நால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும்
ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

403. மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்
ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி

404. மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்
ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி

405. தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும்
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி

406. சுத்தமா நிலையிற் சூழுறு விரிவை
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி

407. கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

408. பேருறு நீலப் பெருந்திரை யதனால்
ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

409. பச்சைத் திரையாற் பரவெளி யதனை
அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

410. செம்மைத் திரையாற் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

411. பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

412. வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

413. கலப்புத் திரையாற் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

414. விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

415. தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

416. திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி

417. தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி
னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி

418. சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை
அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி

419. எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே
அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி

420. விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை
அடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

421. சொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை
அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி

422. மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே
அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

423. எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே
அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

424. கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

425. சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

426. சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி

427. படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை
அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி

428. காக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை
ஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி

429. அடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும்
அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

430. மறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை
அறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

431. தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை
அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

432. ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை
ஐந்தொழி லாதிசெய் யருட்பெருஞ் ஜோதி

433. இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில்
அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி

434. செத்தவ ரெல்லாஞ் சிரித்தாங் கெழுதிறல்
அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி

435. இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட
அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

436. செத்தவ ரெழுகெனச் செப்பியாங் கெழுப்பிட
அத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

437. சித்தெலாம் வல்ல திறலளித் தெனக்கே
அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி

438. ஒன்றதி ரண்டது வொன்றினி ரண்டது
ஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே

439. ஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல
ஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே

440. ஒன்றினி லொன்றுள வொன்றினி லொன்றில
ஒன்றற வொன்றிய வொன்றெனு மொன்றே

441. களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி
விளங்கவென் னுள்ளே விளங்குமெய்ப் பொருளே

442. மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே

443. எழுநிலை மிசையே யின்புரு வாகி
வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே

444. நவநிலை மிசையே நடுவுறு நடுவே
சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே

445. ஏகா தசநிலை யாததி னடுவே
ஏகா தனமிசை யிருந்தமெய்ப் பொருளே

446. திரையோ தசநிலை சிவவெளி நடுவே
வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே

447. ஈரெண் ணிலையென வியம்புமே னிலையிற்
பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே

448. எல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே
எல்லா மாகி யிலங்குமெய்ப் பொருளே

449. மனாதிகள் பொருந்தா வானடு வானாய்
அனாதியுண் மையதா யமர்ந்தமெய்ப் பொருளே

450. தானொரு தானாய்த் தானே தானாய்
ஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே

451. அதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே

452. இயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா
உயலுற விளங்கு மொருதனிப் பொருளே

453. அருவினு ளருவா யருவரு வருவாய்
உருவினுள் விளங்கு மொருபரம் பொருளே

454. அலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய்
உலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே

455. பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளா
யொருமையின் விளங்கு மொருதனிப் பொருளே

456. ஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு
கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே

457. கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே

458. அறிவுறு சித்திக ளனந்தகோ டிகளும்
பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே

459. வீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க
ஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே

460. பற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க
உற்றரு ளாடல்செய் யொருதனிப் பொருளே

461. பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே
பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே

462. பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே
பரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே

463. பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே
பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே

464. பரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே
தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே

465. வரம்பரா பரமே வணம்பரா பரமே
பரம்பரா பரமே பதம்பரா பரமே

466. சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே

467. தத்துவ பதமே தற்பத பதமே
சித்துறு பதமே சிற்சுக பதமே

468. தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே
அம்பரம் பதமே யருட்பரம் பதமே

469. தந்திர பதமே சந்திர பதமே
மந்திர பதமே மந்தண பதமே

470. நவந்தரு பதமே நடந்தரு பதமே
சிவந்தரு பதமே சிவசிவ பதமே

471. பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே
பிரமநிற் குணமே பிரமசிற் குணமே

472. பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்
பரமமே பரம பதந்தருஞ் சிவமே

473. அவனோ டவளா யதுவா யலவாய்
நவமா நிலைமிசை நண்ணிய சிவமே

474. எம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ்
செம்பொரு ளாகிய சிவமே சிவமே

475. ஒருநிலை யிதுவே வுயர்நிலை யெனுமொரு
திருநிலை மேவிய சிவமே சிவமே

476. மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு
தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே

477. புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்
சிரமுற நாட்டிய சிவமே சிவமே

478. கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்
செல்வமு மளித்த சிவமே சிவமே

479. அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்
தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே

480. சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே

481. எங்கே கருணை யியற்கையி னுள்ளன
அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே

482. யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்
சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே

483. பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே

484. கொல்லா நெறியே குருவரு ணெறியெனப்
பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே

485. உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே

486. பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே

487. உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே

488. இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே

489. அருளலா தணுவு மசைந்திடா ததனால்
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே

490. அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
அருளுற முயல்கவென் றருளிய சிவமே

491. அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே

492. அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
தெருளிது வெனவே செப்பிய சிவமே

493. அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே

494. அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே

495. அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே

496. அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே

497. அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே

498. அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே

499. அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே

500. அருளே நம்மிய லருளே நம்முரு
அருளே நம்வடி வாமென்ற சிவமே

501. அருளே நம்மடி யருளே நம்முடி
அருளே நம்நடு வாமென்ற சிவமே

502. அருளே நம்மறி வருளே நம்மனம்
அருளே நங்குண மாமென்ற சிவமே

503. அருளே நம்பதி யருளே நம்பதம்
அருளே நம்மிட மாமென்ற சிவமே

504. அருளே நந்துணை யருளே நந்தொழில்
அருளே நம்விருப் பாமென்ற சிவமே

505. அருளே நம்பொரு ளருளே நம்மொளி
அருளே நாமறி வாயென்ற சிவமே

506. அருளே நங்குல மருளே நம்மினம்
அருளே நாமறி வாயென்ற சிவமே

507. அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென்ற சிவமே

508. அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே

509. அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே

510. உள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள்
வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே

511. நிகரிலா வின்ப நிலைநடு வைத்தெனைத்
தகவொடு காக்குந் தனிச்சிவ பதியே

512. சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச்
சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே

513. ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென்
கைவரப் புரிந்த கதிசிவ பதியே

514. துன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த
இன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே

515. சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை
ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே

516. கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி
வையமேல் வைத்த மாசிவ பதியே

517. இன்புறச் சிறியே னெண்ணுதோ றெண்ணுதோ
றன்பொடென் கண்ணுறு மருட்சிவ பதியே

518. பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை
மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே

519. உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது
குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே

520. பரமுட னபரம் பகர்நிலை யிவையெனத்
திரமுற வருளிய திருவருட் குருவே

521. மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்
றிதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே

522. கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே

523. பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே

524. பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே

525. பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே

526. சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே
நவநிலை காட்டிய ஞானசற் குருவே

527. சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்
அத்தகை தெரித்த வருட்சிவ குருவே

528. அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே
பிறிவற விளங்கும் பெரியசற் குருவே

529. கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே

530. காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே
மாண்பத மளித்து வயங்குசற் குருவே

531. செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே
உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே

532. உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே

533. சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே

534. சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்
மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே

535. எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
வல்லா னெனவெனை வைத்தசற் குருவே

536. சீருற வருளாந் தேசுற வழியாப்
பேருற வென்னைப் பெற்றநற் றாயே

537. பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப்
பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே

538. ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்
ஈன்றமு தளித்த வினியநற் றாயே

539. பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால்
வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே

540. தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை
உளந்தெளி வித்த வொருமைநற் றாயே

541. அருளமு தேமுத லைவகை யமுதமும்
தெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே

542. இயலமு தேமுத லெழுவகை யமுதமும்
உயலுற வெனக்கரு ளுரியநற் றாயே

543. நண்புறு மெண்வகை நவவகை யமுதமும்
பண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே

544. மற்றுள வமுத வகையெலா மெனக்கே
உற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே

545. கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே
அலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே

546. துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக்
கெய்ப்பெலாந் தவிர்த்த வின்புடைத் தாயே

547. சித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே
சத்தியை யளித்த தயவுடைத் தாயே

548. சத்திநி பாதந் தனையளித் தெனைமேல்
வைத்தமு தளித்த மரபுடைத் தாயே

549. சத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய்
சித்தியை யளித்த தெய்வநற் றாயே

550. தன்னிக ரில்லாத் தலைவனைக் காட்டியே
என்னைமே லேற்றிய வினியநற் றாயே

551. வெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே
யளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே

552. எண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங்
கண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே

553. இன்னரு ளமுதளித் திறவாத் திறல்புரிந்
தென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே

554. என்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம்
தன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே

555. தெரியா வகையாற் சிறியேன் றளர்ந்திடத்
தரியா தணைத்த தயவுடைத் தாயே

556. சினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங்
கனவினும் பிரியாக் கருணைநற் றாயே

557. தூக்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும்
ஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே

558. துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே

559. எல்லா நன்மையு மென்றனக் களித்த
எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே

560. நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய
தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே

561. அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
பிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே

562. புன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த
தன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே

563. அகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி
சகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையே

564. இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே
துணையடி சென்னியிற் சூட்டிய தந்தையே

565. ஆதியீ றறியா வருளர சாட்சியிற்
ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே

566. எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே

567. தங்கோ லளவது தந்தருட் ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே

568. தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே

569. தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்வடி வாக்கிய என்றனித் தந்தையே

570. தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில்
என்சித் தாக்கிய என்றனித் தந்தையே

571. தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே

572. தன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை
என்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே

573. தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும்
என்னையு மொன்றென வியற்றிய தந்தையே

574. தன்னிய லென்னியல் தன்செய லென்செயல்
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே

575. தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே

576. சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்
றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே

577. மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே
இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே

578. உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை
யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே

579. துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்
பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே

580. ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே

581. எவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம்
அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே

582. இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய
தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே

583. பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்
சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே

584. தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்
கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே

585. துறையிது வழியிது துணிவிது நீசெயும்
முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே

586. எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை
கங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே

587. வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே
யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே

588. இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா
தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே

589. அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென்
னுயிரினுஞ் சிறந்த வொருமையென் னட்பே

590. அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே
இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே

591. நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே
வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே

592. உள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண்
டெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே

593. செற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த
குற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே

594. குணங்குறி முதலிய குறித்திடா தெனையே
அணங்கறக் கலந்த அன்புடை நட்பே

595. பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே

596. சவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமும்
கவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே

597. களைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்
கிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே

598. தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா
வென்னைத் தழுவிய வென்னுயி ருறவே

599. மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்
எனக்குற வாகிய என்னுயி ருறவே

600. துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா
தென்னுற வாகிய வென்னுயி ருறவே

601. என்றுமோர் நிலையாய் என்றுமோ ரியலாய்
என்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே

602. அனைத்துல கவைகளு மாங்காங் குணரினும்
இனைத்தென வறியா வென்றனிச் சத்தே

603. பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்
இதுவெனற் கரிதா மென்றனிச் சத்தே

604. ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும்
ஏகுதற் கரிதா மென்றனிச் சத்தே

605. சத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே
இத்தகை வழுத்து மென்றனிச் சத்தே

606. துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென
உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே

607. அன்றத னப்பா லதன்பரத் ததுதான்
என்றிட நிறைந்த வென்றனிச் சத்தே

608. என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய்
என்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே

609. சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்
இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே

610. தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே

611. படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்
இடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே

612. மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
ஏற்பட விளக்கிடு மென்றனிச் சித்தே

613. உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே

614. அறிவவை பலவா யறிவன பலவாய்
எறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே

615. நினைவவை பலவாய் நினைவன பலவாய்
இனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே

616. காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
ஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே

617. செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்
எய்வற விளக்கிடு மென்றனிச் சித்தே

618. அண்ட சராசர மனைத்தையும் பிறவையும்
எண்டற விளக்கு மென்றனிச் சித்தே

619. எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட
எல்லாம் விளக்கிடு மென்றனிச் சித்தே

620. ஒன்றதி லொன்றன் றுரைக்கவும் படாதாய்
என்றுமோர் படித்தா மென்றனி யின்பே

621. இதுவது வென்னா வியலுடை யதுவாய்
எதிரற நிறைந்த வென்றனி யின்பே

622. ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல்
ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே

623. அறிவுக் கறிவினி லதுவது வதுவாய்
எறிவற் றோங்கிய வென்றனி யின்பே

624. விடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை
யிடையிடை யோங்கிய வென்றனி யின்பே

625. இம்மையு மறுமையு மியம்பிடு மொருமையும்
எம்மையு நிரம்பிடு மென்றனி யின்பே

626. முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
எத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே

627. எல்லா நிலைகளி னெல்லா வுயிருறும்
எல்லா வின்புமா மென்றனி யின்பே

628. கரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின்
விரும்புறு மிரதமு மிக்கதீம் பாலும்

629. குணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி
மணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய

630. உணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா
வணமுறு மின்ப மயமே யதுவாய்க்

631. கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய்
நலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்

632. உள்ளதா யென்று முள்ளதா யென்னுள்
உள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்

633. எல்லா மினிப்ப வியலுறு சுவையளித்
தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்

634. சாகா வரமுந் தனித்தபே ரறிவும்
மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்

635. செயற்கரு மனந்த சித்தியு மின்பமும்
மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப்

636. பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி
ஆரண முடியுட னாகம முடியுங்

637. கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு
நடந்திகழ் கின்றமெஞ் ஞானவா ரமுதே

638. சத்திய வமுதே தனித்திரு வமுதே
நித்திய வமுதே நிறைசிவ வமுதே

639. சச்சிதா னந்தத் தனிமுத லமுதே
மெய்ச்சிதா காச விளைவரு ளமுதே

640. ஆனந்த வமுதே யருளொளி யமுதே
தானந்த மில்லாத் தத்துவ வமுதே

641. நவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே
சிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே

642. பொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே

643. அகம்புற மகப்புற மாகிய புறப்புறம்
உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே

644. பனிமுத னீக்கிய பரம்பர வமுதே
தனிமுத லாய சிதம்பர வமுதே

645. உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே
அலகிலாப் பெருந்திற லற்புத வமுதே

646. அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள
பண்டமுங் காட்டிய பரம்பர மணியே

647. பிண்டமு மதிலுறு பிண்டமு மவற்றுள
பண்டமுங் காட்டிய பராபர மணியே

648. நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே

649. விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்
கண்பெற நடத்துங் ககனமா மணியே

650. பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ்
சார்புற நடத்துஞ் சரவொளி மணியே

651. அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்
கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே

652. சராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும்
விராவியுள் விளங்கும் வித்தக மணியே

653. மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்
தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே

654. தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா
வாழ்வெனக் களித்த வளரொளி மணியே

655. நவமணி முதலிய நலமெலாந் தருமொரு
சிவமணி யெனுமருட் செல்வமா மணியே

656. வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து
நான்பெற வளித்த நாதமந் திரமே

657. கற்பம் பலபல கழியினு மழியாப்
பொற்புற வளித்த புனிதமந் திரமே

658. அகரமு முகரமு மழியாச் சிகரமும்
வகரமு மாகிய வாய்மைமந் திரமே

659. ஐந்தென வெட்டென வாறென நான்கென
முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே

660. வேதமு மாகம விரிவுக ளனைத்தும்
ஓதநின் றுலவா தோங்குமந் திரமே

661. உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே

662. சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே

663. இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே

664. மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே

665. நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே

666. என்றே யென்னினு மிளமையோ டிருக்க
நன்றே தருமொரு ஞானமா மருந்தே

667. மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே

668. சிற்சபை நடுவே திருநடம் புரியும்
அற்புத மருந்தெனு மானந்த மருந்தே

669. இடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த்
தடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்

670. மாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய்
ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க்

671. காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்
ஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்

672. கைதவர் கனவினுங் காண்டற் கரிதாய்ச்
செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்

673. உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே
வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே

674. புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்
வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே

675. மும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய்
இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே

676. எடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையா
தடுத்தடுத் தோங்குமெய் யருளுடைப் பொன்னே

677. தளர்ந்திடே லெடுக்கின் வளர்ந்திடு வேமெனக்
கிளர்ந்திட வுரைத்துக் கிடைத்தசெம் பொன்னே

678. எண்ணிய தோறு மியற்றுக வென்றனை
யண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே

679. நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப்
போகே மெனவெனைப் பொருந்திய பொன்னே

680. எண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப்
பண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே

681. விண்ணியற் றலைவரும் வியந்திட வெனக்குப்
புண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே

682. நால்வகை நெறியினு நாட்டுக வெனவே
பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே

683. எழுவகை நெறியினு மியற்றுக வெனவே
முழுவகை காட்டி முயங்கிய பொன்னே

684. எண்ணிய படியெலா மியற்றுக வென்றெனைப்
புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே

685. ஊழிதோ றூழி யுலப்புறா தோங்கி
வாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே

686. இதமுற வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்
குதவினு முலவா தோங்குநன் னிதியே

687. இருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற்
றிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே

688. எவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை
அவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே

689. அற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே
கற்பனை கடந்த கருணைமா நிதியே

690. நற்குண நிதியே சற்குண நிதியே
நிற்குண நிதியே சிற்குண நிதியே

691. பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே
வளமெலா நிறைந்த மாணிக்க மலையே

692. மதியுற விளங்கு மரகத மலையே
வதிதரு பேரொளி வச்சிர மலையே

693. உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே
துரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே

694. புற்புதந் திரைநுரை புரைமுத லிலதோர்
அற்புதக் கடலே யமுதத்தண் கடலே

695. இருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய
அருட்பெருங் கடலே யானந்தக் கடலே

696. பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
உவப்புறு வளங்கொண் டோங்கிய கரையே

697. என்றுயர்ச் சோடைக ளெல்லாந் தவிர்த்துள
நன்றுற விளங்கிய நந்தனக் காவே

698. சேற்றுநீ ரின்றிநற் றீஞ்சுவை தருமோர்
ஊற்றுநீர் நிரம்ப வுடையபூந் தடமே

699. கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே
மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே

700. களைப்பறக் கிடைத்த கருணைநன் னீரே
இளைப்பற வாய்த்த வின்சுவை யுணவே

701. தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே
தென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே

702. நீர்நசை தவிர்க்கு நெல்லியங் கனியே
வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே

703. கட்டுமாம் பழமே கதலிவான் பழமே
இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே

704. புனிதவான் றருவிற் புதுமையாம் பலமே
கனியெலாங் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே

705. இதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே
பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே

706. சாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே
ஏலவே நாவுக் கினியகற் கண்டே

707. உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே
கலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே

708. நவையிலா தெனக்கு நண்ணிய நறவே
சுவையெலாந் திரட்டிய தூயதீம் பதமே

709. பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே
இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே

710. உலர்ந்திடா தென்று மொருபடித் தாகி
மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே

711. இகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும்
உகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே

712. யாழுறு மிசையே யினியவின் னிசையே
ஏழுறு மிசையே யியலரு ளிசையே

713. திவளொளிப் பருவஞ் சேர்ந்தநல் லவளே
அவளொடுங் கூடி யடைந்ததோர் சுகமே

714. நாதநல் வரைப்பி னண்ணிய பாட்டே
வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே

715. நன்மார்க்கர் நாவி னவிற்றிய பாட்டே
சன்மார்க்க சங்கந் தழுவிய பாட்டே

716. நம்புறு மாகம நவிற்றிய பாட்டே
எம்பல மாகிய வம்பலப் பாட்டே

717. என்மனக் கண்ணே என்னருட் கண்ணே
என்னிரு கண்ணே யென்கணுண் மணியே

718. என்பெருங் களிப்பே யென்பெரும் பொருளே
என்பெருந் திறலே யென்பெருஞ் செயலே

719. என்பெருந் தவமே என்றவப் பலனே
என்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே

720. என்பெரு வாழ்வே யென்றென்வாழ் முதலே
என்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே

721. என்பெரு நலமே யென்பெருங் குலமே
என்பெரு வலமே யென்பெரும் புலமே

722. என்பெரு வரமே யென்பெருந் தரமே
என்பெரு நெறியே யென்பெரு நிலையே

723. என்பெருங் குணமே என்பெருங் கருத்தே
என்பெருந் தயவே யென்பெருங் கதியே

724. என்பெரும் பதியே யென்னுயி ரியலே
என்பெரு நிறைவே யென்றனி யறிவே

725. தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட

726. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட

727. இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட

728. மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட

729. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட

730. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட

731. வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்
கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட

732. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட

733. மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்த மியைந்து களித்திட

734. அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்
சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட

735. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்
பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்

736. தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்
சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட

737. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட

738. என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட
என்னுளத் தோங்கிய என்றனி யன்பே

739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே

740. தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்
என்னைவே தித்த என்றனி யன்பே

741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை யன்பே

742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து
என்னுளே கனிந்த வென்னுடை யன்பே

743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே
என்னுளே நிறைந்த என்றனி யன்பே

744. துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை
யின்புறு வாக்கிய என்னுடை யன்பே

745. பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா
என்னுளங் கலந்த என்றனி யன்பே

746. தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி
என்வசங் கடந்த என்னுடை யன்பே

747. தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே
என்னுளே பொங்கிய என்றனி யன்பே

748. அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்
இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே

749. துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல்
லின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே

750. மயலற வழியா வாழ்வுமேன் மேலும்
இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே

751. இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட
நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே

752. கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட
உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே

753. தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
ஏற்றிய ஞான வியலொளி விளக்கே

754. ஆகம முடிமே லருளொளி விளங்கிட
வேகம தறவே விளங்கொளி விளக்கே

755. ஆரியர் வழுத்திய வருணிலை யனாதி
காரியம் விளக்குமோர் காரண விளக்கே

756. தண்ணிய வமுதே தந்தென துளத்தே
புண்ணியம் பலித்த பூரண மதியே

757. உய்தர வமுத முதவியென் னுளத்தே
செய்தவம் பலித்த திருவளர் மதியே

758. பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத
நிதியெலா மளித்த நிறைதிரு மதியே

759. பாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று
மேல்வெளி விளங்க விளங்கிய மதியே

760. உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட
வயங்கிய கருணை மழைபொழி மழையே

761. என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப
மன்னிய கருணை மழைபொழி மழையே

762. உளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி
வளங்கொளக் கருணை மழைபொழி மழையே

763. நலந்தர வுடலுயிர் நல்லறி வெனக்கே
மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே

764. தூய்மையா லெனது துரிசெலா நீக்கிநல்
வாய்மையாற் கருணை மழைபொழி மழையே

765. வெம்மல விரவது விடிதரு ணந்தனிற்
செம்மையி லுதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே

766. திரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே
வரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே

767. அலகிலாத் தலைவர்க ளரசுசெய் தத்துவ
உலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே

768. முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே

769. ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த
ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே

770. உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே

771. நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை
வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே

772. வேதமு மாகம விரிவும் பரம்பர
நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே

773. எண்ணிய வெண்ணிய வெல்லாந்தர வெனுள்
நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே

774. வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே

775. இரவொடு பகலிலா வியல்பொது நடமிடு
பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே

776. வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி
பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே

777. சமரச சத்தியச் சபையி னடம்புரி
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே

778. சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே
அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி

779. மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி

780. வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி

781. என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து

782. உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்

783. சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா
துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து

784. சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்

785. அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்

786. ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா

787. அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி

788. வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

789. உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட
இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை

790. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

791. மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை

792. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

793. சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை

794. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

795. உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க

796. சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை

797. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

798. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி