Maayaivalik Kazhungal Vallalar Songs

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. தாவும் மான் எனக் குதித்துக்கொண்டு ஓடித்
தையலார் முலை_தடம் படும் கடையேன்
கூவு காக்கைக்குச் சோற்றில் ஓர் பொருக்கும்
கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
ஓவுறாது உழல் ஈ எனப் பல கால்
ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
சாவுறா வகைக்கு என் செயக் கடவேன்
தந்தையே எனைத் தாங்கிக்கொண்டு அருளே.

2. போகம் ஆதியை விழைந்தனன் வீணில்
பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
தேகம் ஆதியைப் பெற முயன்று அறியேன்
சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
காகம் ஆதிகள் அருந்த ஓர் பொருக்கும்
காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
ஆகம் ஆதி சொல் அறிவு அறிவேனோ
அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே.

3. விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்
விருந்திலே உணவு அருந்தி ஓர் வயிற்றுக்
குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்
கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
வழியைத் தூர்ப்பவர்க்கு உளவு உரைத்திடுவேன்
மாயமே புரி பேயரில் பெரியேன்
பழியைத் தூர்ப்பதற்கு என் செயக் கடவேன்
பரமனே எனைப் பரிந்துகொண்டு அருளே.

4. மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன்
வாட்டமே செயும் கூட்டத்தில் பயில்வேன்
இதத்திலே ஒரு வார்த்தையும் புகலேன்
ஈயும் மொய்த்திடற்கு இசைவுறாது உண்பேன்
குதத்திலே இழி மலத்தினும் கடையேன்
கோடை வெய்யலின் கொடுமையில் கொடியேன்
சிதத்திலே உறற்கு என் செயக் கடவேன்
தெய்வமே எனைச் சேர்த்துக்கொண்டு அருளே.

5. கொடிய வெம் புலிக் குணத்தினேன் உதவாக்
கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
கழுதையேன் அவப் பொழுதையே கழிப்பேன்
விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும்
வேடனேன் முழு_மூடரில் பெரியேன்
அடியன் ஆவதற்கு என் செயக் கடவேன்
அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே.

6. தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன்
சோறு-அதே பெறும் பேறு-அது என்று உணர்ந்தேன்
ஏங்குகின்றதே தொழில் எனப் பிடித்தேன்
இரக்கின்றோர்களே என்னினும் அவர்-பால்
வாங்குகின்றதே பொருள் என வலித்தேன்
வஞ்ச நெஞ்சினால் பஞ்சு எனப் பறந்தேன்
ஓங்குகின்றதற்கு என் செயக் கடவேன்
உடையவா எனை உவந்துகொண்டு அருளே.

7. வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து
வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன்
பருத்த ஊனொடு மலம் உணத் திரியும்
பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன்
கருத்து இலாது அயல் குரைத்து அலுப்படைந்த
கடைய நாயினில் கடையனேன் அருட்குப்
பொருத்தன் ஆவதற்கு என் செயக் கடவேன்
புண்ணியா எனைப் புரிந்துகொண்டு அருளே.

8. துருக்கலோ கொடும் கருங்கலோ வயிரச்
சூழ் கலோ எனக் காழ்கொளும் மனத்தேன்
தருக்கல் ஆணவக் கருக்கலோடு உழல்வேன்
சந்தை நாய் எனப் பந்தமுற்று அலைவேன்
திருக்கு எலாம் பெறு வெருக்கு எனப் புகுவேன்
தீயனேன் பெரும் பேயனேன் உளம்-தான்
உருக்கல் ஆகுதற்கு என் செயக் கடவேன்
உடையவா எனை உவந்துகொண்டு அருளே.

9. கானமே உழல் விலங்கினில் கடையேன்
காமம் ஆதிகள் களைகணில் பிடித்தேன்
மானம் மேலிடச் சாதியே மதமே
வாழ்க்கையே என வாரிக்கொண்டு அலைந்தேன்
ஈனமே பொருள் எனக்கு அளித்து இருந்தேன்
இரக்கம் என்பதோர் எள்துணை அறியேன்
ஞானம் மேவுதற்கு என் செயக் கடவேன்
நாயகா எனை நயந்துகொண்டு அருளே.

10. இருளையே ஒளி என மதித்து இருந்தேன்
இச்சையே பெரு விச்சை என்று அலந்தேன்
மருளையே தரும் மன_குரங்கோடும்
வனம் எலாம் சுழன்று இனம் எனத் திரிந்தேன்
பொருளை நாடும் நல் புந்திசெய்து அறியேன்
பொதுவிலே நடம் புரிகின்றோய் உன்றன்
அருளை மேவுதற்கு என் செயக் கடவேன்
அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே.