Siva Dharisanam  Vallalar Songs

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம்
செய்ய வல்ல தனித் தலைமைச் சித்த சிகாமணியே
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே
அரு உடைய பெருவெளியாய் அது விளங்கு வெளியாய்
அப்பாலுமாய் நிறைந்த அருள்_பெரும்_சோதியனே
மரு_உடையாள் சிவகாமவல்லி மணவாளா
வந்து அருள்க அருள் சோதி தந்து அருள்க விரைந்தே.

2. சொல்லவனே பொருளவனே துரிய பதத்தவனே
தூயவனே நேயவனே சோதி உருவவனே
நல்லவனே நல் நிதியே ஞான சபாபதியே
நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
அல்லவனே ஆனவனே அம்மை அப்பா என்னை
ஆண்டவனே தாண்டவனே அருள் குருவே எல்லாம்
வல்லவனே சிவகாமவல்லி மணவாளா
மன்னவனே என்னவனே வந்து அருள்க விரைந்தே.

3. துரிய நிலை துணிந்தவரும் சொல்ல அரும் மெய்ப்பொருளே
சுத்த சிவானந்த சபைச் சித்த சிகாமணியே
பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே
பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
கரிய மணித் திறத்தினையும் காண வல்லேன் அல்லேன்
கண்மணியே நின் திறத்தைக் காணுதல் வல்லேனோ
அரிய பெரும் பொருளாம் உன் அருள் சோதி எனக்கே
அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.

4. மறப்பு அறியாப் பேர்_அறிவில் வாய்த்த பெரும் சுகமே
மலைவு அறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே
இறப்பு அறியாத் திரு_நெறியில் என்னை வளர்த்து அருளும்
என்னுடைய நல் தாயே எந்தாயே நினது
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே
சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்கப்
பிறப்பு அறியாப் பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய்
பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே.

5. முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின்
முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என்
தன் உழைப் பார்த்து அருள்வாயேல் உண்டு அனைத்தும் ஒரு நின்றனது
சுதந்தரமே இங்கு எனது சுதந்தரமோ
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல்
யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர்
பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம்
பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே.

6. விழித்துவிழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல்
விழிகள் விழித்து இளைப்பது அலால் விளைவு ஒன்றும் இலையே
மொழித் திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும்
முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ
செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில்
சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே
பரிந்து எனையும் பாடுவித்துப் பரிசு மகிழ்ந்து அருளே.

7. மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே
மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ
தேன் ஒருவா மொழிச்சியரைத் திளைக்க விழைந்தேனோ
தீம் சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ
நான் ஒரு பாவமும் அறியேன் நல் நிதியே எனது
நாயகனே பொது விளங்கும் நடராச பதியே
ஏன் ஒருமை இலர் போல் நீ இருக்கின்றாய் அழகோ
என் ஒருமை அறியாயோ யாவும் அறிந்தாயே.

8. பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே
பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன்
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை
மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன்
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது
குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன்
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா
தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே.

9. கட்டு அவிழ்ந்த கமலம் எனக் கருத்து அவிழ்ந்து நினையே
கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான்
சிட்டர் உளம் திகழ்கின்ற சிவபதியே நினது
திருவுளமே அறிந்து அது நான் செப்புதல் என் புவி மேல்
விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன் நீ
விரைந்து வந்தே அருள் சோதி புரிந்து அருளும் தருணம்
தொட்டது நான் துணிந்து உரைத்தேன் நீ உணர்த்த உணர்ந்தே
சொல்வது அலால் என் அறிவால் சொல்ல வல்லேன் அன்றே.

10. காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது
கடி நகர்ப் பொன் மதில் காட்சி கண்குளிரக் கண்டேன்
கோட்டை எலாம் கொடி நாட்டிக் கோலம் இடப் பார்த்தேன்
கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிர்ந்தேன்
சேட்டை அற்றுக் கருவி எலாம் என் வசம் நின்றிடவே
சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல்
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே
பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே.

11. சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான்
செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த
இத் தினமே தொடங்கி அழியாத நிலை அடைதற்கு
ஏற்ற குறி ஏற்ற இடத்து இசைந்து இயல்கின்றன நாம்
சத்தியமே பெரு வாழ்வில் பெரும் களிப்புற்றிடுதல்
சந்தேகித்து அலையாதே சாற்றிய என் மொழியை
நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய்
நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே.