திருவருட்பா
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1. உரை வளர் கலையே கலை வளர் உரையே உரை கலை வளர்தரு பொருளே
விரை வளர் மலரே மலர் வளர் விரையே விரை மலர் வளர்தரு நறவே
கரை வளர் தருவே தரு வளர் கரையே கரை தரு வளர் கிளர் கனியே
பரை வளர் ஒளியே ஒளி வளர் பரையே பரை ஒளி வளர் சிவ பதியே.
2. ஒளி வளர் உயிரே உயிர் வளர் ஒளியே ஒளி உயிர் வளர்தரும் உணர்வே
வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே வெளி நிறை வளர்தரு விளைவே
வளி வளர் அசைவே அசை வளர் வளியே வளி அசை வளர்தரு செயலே
அளி வளர் அனலே அனல் வளர் அளியே அளி அனல் வளர் சிவ பதியே.
3. அடி வளர் இயலே இயல் வளர் அடியே அடி இயல் வளர்தரு கதியே
முடி வளர் பொருளே பொருள் வளர் முடியே முடி பொருள் வளர் சுக நிதியே
படி வளர் விதையே விதை வளர் படியே படி விதை வளர் பல நிகழ்வே
தடி வளர் முகிலே முகில் வளர் தடியே தடி முகில் வளர் சிவ பதியே.
4. சிரம் வளர் முதலே முதல் வளர் சிரமே சிரம் முதல் வளர்தரு செறிவே
தரம் வளர் நிலையே நிலை வளர் தரமே தரம் நிலை வளர்தரு தகவே
வரம் வளர் நிறையே நிறை வளர் வரமே வரம் நிறை வளர்தரு வயமே
பரம் வளர் பதமே பதம் வளர் பரமே பர பதம் வளர் சிவ பதியே.
5. திரு வளர் வளமே வளம் வளர் திருவே திரு வளம் வளர்தரு திகழ்வே
உரு வளர் வடிவே வடி வளர் உருவே உரு வடி வளர்தரு முறைவே
கரு வளர் அருவே அரு வளர் கருவே கரு அரு வளர் நவ கதியே
குரு வளர் நெறியே நெறி வளர் குருவே குரு நெறி வளர் சிவ பதியே.
6. நிறை வளர் முறையே முறை வளர் நிறையே நிறை முறை வளர் பெரு நெறியே
பொறை வளர் புவியே புவி வளர் பொறையே புவி பொறை வளர்தரு புனலே
துறை வளர் கடலே கடல் வளர் துறையே துறை கடல் வளர்தரு சுதையே
மறை வளர் பொருளே பொருள் வளர் மறையே மறை பொருள் வளர் சிவ பதியே.
7. தவம் வளர் தயையே தயை வளர் தவமே தவம் நிறை தயை வளர் சதுரே
நவம் வளர் புரமே புரம் வளர் நவமே நவ புரம் வளர்தரும் இறையே
துவம் வளர் குணமே குணம் வளர் துவமே துவ குணம் வளர்தரு திகழ்வே
சிவம் வளர் பதமே பதம் வளர் சிவமே சிவ பதம் வளர் சிவ பதியே.
8. நடம் வளர் நலமே நலம் வளர் நடமே நடம் நலம் வளர்தரும் ஒளியே
இடம் வளர் வலமே வலம் வளர் இடமே இடம் வலம் வளர்தரும் இசைவே
திடம் வளர் உளமே உளம் வளர் திடமே திட உளம் வளர்தரு திருவே
கடம் வளர் உயிரே உயிர் வளர் கடமே கடம் உயிர் வளர் சிவ பதியே.
9. அது வளர் அணுவே அணு வளர் அதுவே அது அணு வளர்தரும் உறவே
விது வளர் ஒளியே ஒளி வளர் விதுவே விது ஒளி வளர்தரு செயலே
மது வளர் சுவையே சுவை வளர் மதுவே மது உறு சுவை வளர் இயலே
பொது வளர் வெளியே வெளி வளர் பொதுவே பொது வெளி வளர் சிவ பதியே.
10. நிதி வளர் நிலமே நிலம் வளர் நிதியே நிதி நிலம் வளர்தரு நிறைவே
மதி வளர் நலமே நலம் வளர் மதியே மதி நலம் வளர்தரு பரமே
கதி வளர் நிலையே நிலை வளர் கதியே கதி நிலை வளர்தரு பொருளே
பதி வளர் பதமே பதம் வளர் பதியே பதி பதம் வளர் சிவ பதியே.