திருவருட்பா
ஆறாம் திருமுறை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே
விரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே
கரைவளர் தருவே தருவளர் கரையே கரைதரு வளர்கிளர் கனியே
பரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே பரையொளி வளர்சிவ பதியே.
2. ஒளிவளர் உயிரே உயிர்வளர் ஒளியே ஒளியுயிர் வளர்தரும் உணர்வே
வெளிவளர் நிறைவே நிறைவளர் வெளியே வெளிநிறை வளர்தரு விளைவே
வளிவளர் அசைவே அசைவளர் வளியே வளியசை வளர்தரு செயலே
அளிவளர் அனலே அனல்வளர் அளியே அளியனல் வளர்சிவ பதியே.
3. அடிவளர் இயலே இயல்வளர் அடியே அடியியல் வளர்தரு கதியே
முடிவளர் பொருளே பொருள்வளர் முடியே முடிபொருள் வளர்சுக நிதியே
படிவளர் விதையே விதைவளர் படியே படிவிதை வளர்பல நிகழ்வே
தடிவளர் முகிலே முகில்வளர் தடியே தடிமுகில் வளர்சிவ பதியே.
4. சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே சிரமுதல் வளர்தரு செறிவே
தரம்வளர் நிலையே நிலைவளர் தரமே தரநிலை வளர்தரு தகவே
வரம்வளர் நிறையே நிறைவளர் வரமே வரநிறை வளர்தரு வயமே
பரம்வளர் பதமே பதம்வளர் பரமே பரபதம் வளர்சிவ பதியே.
5. திருவளர் வளமே வளம்வளர் திருவே திருவளம் வளர்தரு திகழ்வே
உருவளர் வடிவே வடிவளர் உருவே உருவடி வளர்தரு முறைவே
கருவளர் அருவே அருவளர் கருவே கருவரு வளர்நவ கதியே
குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே.
6. நிறைவளர் முறையே முறைவளர் நிறையே நிறைமுறை வளர்பெரு நெறியே
பொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை வளர்தரு புனலே
துறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்தரு சுதையே
மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள்வளர்சிவபதியே.
7. தவம்வளர் தயையே தயைவளர் தவமே தவநிறை தயைவளர் சதுரே
நவம்வளர் புரமே புரம்வளர் நவமே நவபுரம் வளர்தரும் இறையே
துவம்வளர் குணமே குணம்வளர் துவமே துவகுணம் வளர்தரு திகழ்வே
சிவம்வளர் பதமே பதம்வளர் சிவமே சிவபதம் வளர்சிவ பதியே.
8. நடம்வளர் நலமே நலம்வளர் நடமே நடநலம் வளர்தரும் ஒளியே
இடம்வளர் வலமே வலம்வளர் இடமே இடம்வலம் வளர்தரும் இசைவே
திடம்வளர் உளமே உளம்வளர் திடமே திடவுளம் வளர்தரு திருவே
கடம்வளர் உயிரே உயிர்வளர் கடமே கடமுயிர் வளர்சிவ பதியே.
9. அதுவளர் அணுவே அணுவளர் அதுவே அதுவணு வளர்தரும் உறவே
விதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே விதுஒளி வளர்தரு செயலே
மதுவளர் சுவையே சுவைவளர் மதுவே மதுவுறு சுவைவளர் இயலே
பொதுவளர் வெளியே வெளிவளர் பொதுவே பொதுவெளி வளர்சிவ பதியே.
10. நிதிவளர் நிலமே நிலம்வளர் நிதியே நிதிநிலம் வளர்தரு நிறைவே
மதிவளர் நலமே நலம்வளர் மதியே மதிநலம் வளர்தரு பரமே
கதிவளர் நிலையே நிலைவளர் கதியே கதிநிலை வளர்தரு பொருளே
பதிவளர் பதமே பதம்வளர் பதியே பதிபதம் வளர்சிவ பதியே.