Thiruvadi Nilai

திருவருட்பா

ஆறாம் திருமுறை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
உவப்பிலா அண்டத்தின் பகுதி
அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
றிருந்தென விருந்தன மிடைந்தே
இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
தென்பர்வான் திருவடி நிலையே.

2. தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
யேச்சுரன் சதாசிவன் விந்து
நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
நவில்பர சிவம்எனும் இவர்கள்
இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
இடதுகாற் கடைவிரல் நகத்தின்
கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
கண்டனன் திருவடி நிலையே.

3. அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
படர்தரு விந்து பிரணவப் பிரமம்
பரைபரம் பரன்எனும் இவர்கள்
சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
துணையடிப் பாதுகைப் புறத்தே
இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
ஏத்துவன் திருவடி நிலையே.

4. இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
பிரமன்ஈ சானனே முதலாம்
மகத்துழல் சமய வானவர் மன்றின்
மலரடிப் பாதுகைப் புறத்தும்
புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
தெரிந்தனன் திருவடி நிலையே.

5. பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்
போந்தவான் முடியதாங் கதன்மேல்
மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா
வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல்
என்வணச் சோதிக் கொடிபர நாதாந்
தத்திலே இலங்கிய ததன்மேல்
தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்
தழுவினன் திருவடி நிலையே.

6. மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான்
மற்றவற் றுட்புறங் கீழ்மேல்
அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின்
அமைந்தன சத்திகள் அவற்றின்
கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும்
கருதுரு முதலிய விளங்க
நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று
நவின்றனர் திருவடி நிலையே.

7. தொகையள விவைஎன் றறிவரும் பகுதித்
தொல்லையின் எல்லையும் அவற்றின்
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே
மன்னிஎங் கணும்இரு பாற்குத்
தகையுறு முதலா வணங்கடை யாகத்
தயங்கமற் றதுவது கருவிச்
சிகையுற உபயம் எனமன்றில் ஆடும்
என்பரால் திருவடி நிலையே.

8. மன்றஓங் கியமா மாயையின் பேத
வகைதொகை விரிஎன மலிந்த
ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா
உற்றன மற்றவை எல்லாம்
நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க
நின்றசத் திகளொடு சத்தர்
சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில்
என்பரால் திருவடி நிலையே.

9. பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
பெரியஓங் காரமே முதலா
ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
என்றவற் றவண்அவண் இசைந்த
மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
மன்அதி காரம்ஐந் தியற்றத்
தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
என்பரால் திருவடி நிலையே.

10. பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
வெறுவெளி எனஉல குணர்ந்த
புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
என்பரால் திருவடி நிலையே.