Sixth Thirumurai Thiruvadi Pugazhchi

திருவருட்பா

ஆறாம் திருமுறை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.

2. படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப்
பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே
அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும்
அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த
வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும்
மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக்
குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர்
கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே.

3. உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபே ரின்பம்
கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

4. தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.

5. இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய்
மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்
மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த
நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்
நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

6. உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.

7. மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஓரு வெளியில்
மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

8. சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

9. பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
உற்றறிதற் கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே
கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.

10. கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்
காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து
ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த
உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்
மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே
குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.